ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு: தைரியமாக புகார் கொடுத்த நடிகை சனுஷாவுக்கு குவியும் பாராட்டு.

615

ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தைரியமாக புகார் கொடுத்த நடிகை சனுஷாவுக்கு கேரள மாநில காவல்துறை டிஜிபி உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை சனுஷா. இவர் தமிழில் ரேனிகுண்டா, பீமா உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலையாளத்தில் கருமாடிகுட்டன், கீர்த்தி சக்ரா, சோட்டா மும்பை உள்பட பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு ரயிலில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உதவிக்காக மற்றவர்களை அழைத்தபோது, இரு பயணிகளை தவிர மற்றவர்கள் உதவி செய்ய வரவில்லை. இதனால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுதார்.

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை திருச்சூர் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்த நடிக்கை சனுஷாவுக்கு கேரள மாநில காவல்துறை டிஜிபி லோக்நாத் பெஹர பாராட்டு தெரிவித்துள்ளார். சனுஷாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர் நேரில் பாராட்டு தெரிவித்தார். “நடிகை போன்ற பிரபலமான நபர்கள் மட்டுமின்றி பெண்கள் அனைவருமே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும். அப்போது மட்டுமே, தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும்” எனக்கூறினார்.

இதுபோலவே நடிகை குஷ்பு உள்ளிட்ட பிறரும் சனுஷாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மலையாள திரையுலக முன்னணி நடிகர், நடிகைகளும் சனுஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி தெரிவித்துள்ளனர்.

SHARE