தமிழர் விளையாட்டுக்கழகம் 95 சிறப்பாக நடாத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

365

தமிழர் விளையாட்டுக்கழகம் 95 வருடாந்தம் நடாத்தும் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (03.06.2018) ஞாயிற்றுக்கிழமை Garges Les Gonesse பகுதியில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கார்ஜ் உதவி நகரபிதா Monsieur Benoit JIMENEZ அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு செயலாளர் மகேஸ்வரன் பானுஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 14.05.2005 அன்று வில்பத்துக் காட்டுப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை இரத்தினம் சதானந்தன் (லெப்ரினன்ட் பிரசன்னா) அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செய்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து 95 விளையாட்டுக்கழகக் கொடியினை தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் பொறுப்பாளர் திரு.யூட்ஸ் றமேஷ் அவர்கள் ஏற்றிவைக்க இல்லக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
பாரதி இல்லம், காந்தி இல்லம், அன்பு இல்லம், குருகுலம் இல்லம் ஆகிய 4 இல்லங்களினதும் கொடிகளை அவற்றின் பிரதிநிதிகள் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடர்ஏற்றப்பட்டது. ஒலிப்பிக் சுடரினை செல்வன் ஞானானந்தன் அனோஜன்;, செல்வி விஜேந்திரன் நித்தியா ஆகிய இருவரும் ஏற்றிவைத்தனர். போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம், உதவி போட்டிமுiகாமையாளர் திரு.கு.பீலீக்ஸ் ஆகியோரின் முன்னிலையில் விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து நடுவர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
தொடர்ந்து இல்லங்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையினை பிரதம விருந்தினர்கள் சிறப்புவிருந்தினர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர். இல்லங்களுக்கிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. இல்லங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதைக்காணமுடிந்தது. சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டிகளும், பெரியவர்களுக்கான வேக நடைபோட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. ஏனைய போட்டிகளிலும் வீர வீராங்கனைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை பாராட்டத்தக்கது.
பிரதம விருந்தினராக கார்ஜ் உதவி நகரபிதா Monsieur Benoit JIMENEZ அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறப்பாளர் திரு.மேத்தா, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் சார்பில் திரு.அகிலன் ஆகியோருடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்புக்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு நிகழ்வாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள்,  போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம், தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் பொறுப்பாளர் திரு.யூட்ஸ் றமேஷ் ஆகியோர் போட்டியில் நடுவர்களாக செயற்பட்டவர்களை பாராட்டி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
தொடர்ந்து வெற்றியாளர்களுக்கும் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
முதலாம் இடத்தை பாரதி இல்லமும் இரண்டாம் இடத்தை குருகுலம் இல்லமும் மூன்றாம் இடத்தை காந்தி இல்லமும் நான்காம் இடத்தை அன்பு இல்லமும் பெற்றுக்கொண்டன.
கிண்ணங்களைப் பெற்றுக்கொண்டு வெற்றிக்களிப்பில் அனைவரும் துள்ளிக்குதித்தமை சிறப்பாக இருந்தது.
95 விளையாட்டுக்கழகத்தின் சார்பில் திரு.காணிக்கைநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தார்.
நிறைவாக கொடிகள் இறக்கபட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

SHARE