தமிழகஅரசியல்தலைமைகளுக்கு ஈழத்தமிழ் உறவு விடுக்கும் தயவான வேண்டுகோள்

1551

 

ஜெனிவா முருகாசன் திடலில் ஈழத்தமிழின இனப்படுகொலை சாட்சியமான புகைப்படங்களை ஆறாவது ஆண்டாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலக மனச்சாட்சியை ஈழத்தமிழர்கள் பக்கம் இரங்கவைக்கும் நோக்குடன் அப்பணியை மேற்கொண்டு வரும் அனைத்துலக மனித உரிமைச்சங்கத்தை சேர்ந்த கஜன் முருகதாசன் திடலில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களை நோக்கி மிகவும் பணிவான வேண்டுகோளை ஆதங்கத்துடன் விடுத்துள்ளார்.அவர் தனது வேண்டுகோளில்

ஈழத்தமிர்களின் விடுதலைப்போராட்டத்தின் காப்பரணாக அன்று தொட்டு இன்றுவரை தமிழகம் இருந்துவருகின்றது.அடைக்கலம் தந்த வீடாகவும் காயங்களை ஆற்றிய மருந்தாகவும் உறவுகளுக்காக தீயில் எரிந்து தியாகங்கள் செய்த கருணை நிலமாகவும் சிறைசென்ற செம்மல்கள் வாழும் நிலமாகவும் பணபலம் பொருளாதார பலம் தந்த வள்ளலாகவும் தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக என்றும் இருந்துவருகின்றது.துரதிஸ்டவசமாக 2009 ஈழத்தமிழர் இனப்படுகொலையை தமிழகத்தலைவர்கள் தடுக்கமுடியாமல் போனது துரதிஸ்டமான வடுவாகவும் நிலைத்துவிட்டது.ஆயினும் போருக்கு பின்னும் ஓயாது ஜனநாயக வழியில் சர்வதேச முன்னிலையில் முன்னெடுக்கப்படும் ஈழத்தமிழருக்கான விடுதலைப்போராட்டத்தில் இன்றும் உயர்ந்த குரலை தமிழக கட்சித்தலைவர்கள் கொடுத்துவருகின்றார்கள்.ஐக்கிய நாடுகள் சபைகள் வரையும் வந்து கட்சித்தலைவர்களும் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் குரல் எழுப்பி வருகின்றார்கள்.எனினும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வெளிநாடுகளில் ஒரு சில தமிழ் நாட்டு கட்சிகள் புலம் பெயர் தமிழர்களை தமது தமிழக கட்சி அரசியல் நலன்ளுக்காக கூறுபோட்டு அவர்களுடைய ஈழம்நோக்கிய பார்வையை திசை திருப்பி அவர்களுக்கு இடையில் பிரித்தாளும் கைங்கரியத்தை செய்து வருவது மன வருத்தத்தை தருகின்றது.கட்சி அலுவலகங்களை திறந்து புலம்பெயர் தமிழர்களின் ஈழம் நோக்கிய ஒற்றுமை தன்மையை தமிழக கட்சி ஆதவாளர்கள் என்ற நிலைக்கு கீழிறக்கி கொண்டுவருவது ஈழத்தமிழர்களுக்கு சங்கடத்தை தருகின்றது.

ஈழத்தமிழர்களை பொறுத்த மட்டில் ஈழம் விடுதலை பெறவேண்டுமாயின் அதற்கு தமிழக தமிழர்களின் முழுமையான பங்கு அவசியம் என்றே கருதுகின்றனர்.இதில் தமிழகத்தமிழர்களை கட்சி வேறுபாடுகள் இன்றி ஈழத்தமிழர்கள் நோக்குகின்றனர்.ஒட்டுமொத்த தமிழகத்தை நம்புகின்றனர்.ஈழம் விடுதலை பெறவேண்டுமாயின் இந்திய மத்திய அரசின் மனோ நிலை கொள்கைகளில் மாற்றங்கள் வரவேண்டும்.இந்திய மத்திய அரசு என்பது தமிழகத்தால் மட்டும் ஆனது அல்ல அது இந்திய மாநிலங்களின் கூட்டுவடிவம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.எனவே இந்திய மாநிலங்களும் அதன் தலைவர்களும் அம்மாநிலங்களின் கட்சிகளும் ஈழ விடுதலை போராட்டம் தொடர்பிலான நியாய தன்மையை அறிய தமிழக தலைவர்கள் தங்கள் தார்மீக கடமையை செய்யவேண்டுமென ஈழத்மதமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மாநிலங்களின் தலைவர்களிடம் தமிழினவாத கொள்கைகளுடன் அனுகமுடியாது.மனிதாபிமான அடிப்படை மனித உரிமைகள் அடிப்படையிலான மற்றும் இந்திய பாதுகாப்பில் ஈழத்தமிழர்களின் பூர்விக நிலமான வடக்கு கிழக்கின் பூகோள முக்கியத்துவ அடிப்படையிலான பாதுகாப்பு நியாயங்களுடனேயே அணுகவேண்டும்.எனவே ஈழத்தமிழர்களின் பிரச்சனையை இதய சுத்தியுடன் தீர்க்க விரும்பும் தமிழக தலைவர்கள் பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறைகளையும் மனோநிலையும் கொண்டவர்களாக செயற்படவேண்டும் என ஈழத்தமிழர்கள் விரும்புகின்றனர்.பிராந்திய வல்லரசான இந்தியாவை பகைத்துக்கொண்டு அதன் மாநிலத்தின் இனங்களை மொழிகளை பகைத்துக்கொண்டு ஈழவிடுதலையை பெறமுடியாது என்பதே வரலாற்று பாடம்.இத்தகைய பணியே தமிழகத்தலைவர்கள் முன் விரிந்துகிடப்பதாக பணிவாக எடுத்துரைக்க விரும்புகின்றோம்.

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் இந்திய மாநில மாநிலங்களின் அளவில் ஈழவிடுதலை பற்றிய பணிகளை விடுத்து தமிழகத்துக்குள்ளும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் வெளிநாட்டு மண்ணிலும் அலுவலங்களையும் பணிகளையும் தீவிரபடுத்துவது தமிழ் மக்களையே பிரிக்கும் பிரிவினைவாதத்தின் ஒரு அங்கமாகும்.ஈழத்துக்குள்ளேயே எமது மக்கள் வாக்களித்த நம்பியிருந்த நோக்கங்களுக்கு மாறாக இன்று சிறீதரன்வரையும் உதாரணங்களை காணலாம்.எனவே ஈழத்தமிழர்கள் பல நம்பிக்கை துரோகங்களை கண்டாகிவிட்டது.அதனால் பெரும் பலவீனங்களையும் சந்தித்தாகிவிட்டது.ஏராளம் படிப்பினைகளை கொண்டுள்ள தமிழினம் இன்னும் பலவீனப்படும்வகையில் செயல்களை செய்வோரை இனங்காணவேண்டியும் இருக்கின்றது.2009வரை புலம்பெயர் மண்ணில் இயங்கிய விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் தீவிரமாக அதுவரை பணிகளை செய்தன.இன்றும் அத்தனை கட்டமைப்புக்களும் உண்டு.பணிகள் தாமதங்களாயிலும் புலம் பெயர் தமிழர்களுக்கென வழிநடத்த கட்டமைப்புக்கள் உண்டு.எனவே அந்த ஈழத்தமிழர்களுக்கான போராட்ட காலத்தில் இருந்து செயற்;பட்டுவரும் கட்டமைப்புக்கள் பலவீனம் அடையும் வகையில் தமிழகத் தலைவர்கள் சிலர் அலுவலங்களை திறந்து செயற்பட முயல்வது.ஆபத்தான ஒரு எதிர்காலத்தின் அறிகுறி.எனவே தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர்கள் விடுதலை தொடர்பில் இந்திய மாநிலங்களின் அளவில் தீவிரமான மனிதாபிமான பணியாற்றி ஈழத்தமிழர்களின் சுதந்தித்தை உறுதி செய்யவேண்டுமென மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம் என மேற்படி கருத்துக்களின் சாரப்பட அனைத்துலக மனித உரிமை சங்கத்தை சேர்ந்த ஈழத்தமிழ் உறவு கஜன் வேண்டியுள்ளார்.

 

 

SHARE