சென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல் அணியில் சேர்ப்பு

104

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நாளை நடைபெற உள்ள 3-வது டி20 ஆட்டத்தில் இருந்து உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சித்தார் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டி 20 ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ நவம்பர் 21-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியத் தொடருக்கான உடற்தகுதியை கருத்தில் கொண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு சென்னையில் நடைபெறும் 3-வது டி20 போட்டியில் ஓய்வு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்குப் பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டி 20 ஆட்டத்திலும் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேவேளையில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பஞ்சாபை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் கடந்த ஜூன் மாதம் டப்ளின் நகரில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமானார். இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அணி விவரம்ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கிருனல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல். – பிடிஐ

SHARE