பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

90

கோவை மற்றும் திருச்சியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இரு பெண்கள் மற்றும் 2 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை பீளமேடு காந்தி மாநகரைச் சேர்ந்தவர் காயத்ரி (28). கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூலூரைச் சேர்ந்த புஷ்பா(40) என்பவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி பெரியநாச்சிபட்டியைச் சேர்ந்த தமிழழகன்- காயத்ரி ஆகியோரின் 2 வயது மகள் சிவான்யா கடந்த 10 தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாததால் மேல் பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானது உறுதியானது. இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் நவ.5-ம் தேதி சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

SHARE