இலங்கை மாணவனை சிக்க வைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது

147

போலியான குற்றச்சாட்டுக்களை இலங்கை மாணவன் மீது முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இலங்கை பிரஜையான கமர் நிசாம்டீன் மீது பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர் இன்று(செவ்வாய்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலியான ஆவணங்களை தயாரித்து, நீதியை திசை திருப்ப முயன்ற காரணத்தினால் நீதிபதி சந்தேக நபரிற்கு பிணை வழங்க மறுத்துள்ள நிலையில், குறித்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு விடயம் என பொலிஸ் உதவி ஆணையாளர் மைக் வில்லிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசாரணைகள் மூலம் அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை பிரஜை நிசாம்டீன் திட்டமிட்ட முறையில் சிக்கவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை குறித்து அவர் தனது கவலையும் வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட கோபங்களின் காரணமாகவே கமர் நிசாம்டீனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் சிக்க வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார் என கமர் நிசாம்டீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த குறிப்பு புத்தகத்திலுள்ள கையெழுத்துக்கள் நிசாம்டீன் உடையவை அல்ல என நிரூபிக்கப்பட்டதையடுத்து, விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE