ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் இராதாகிருஷ்ணன் கவலை!

50

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “1000 ரூபாய் அல்லது அதற்கு ஈடான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசேடமாக தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொகையை வாங்கிக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதை நான் இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தொழிலாளர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த மாதம் தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

2015 ஆண்டிற்கு முன்பு இந்த நாட்டிலே இருந்த ஆட்சியானது சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் துன்பங்களை ஏற்படுத்தியதுடன் ஊழல் நிறைந்த ஒரு ஆட்சியாக அது இருந்தது. அந்த ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தை இந்த மக்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை என்ன மீண்டும் அதே ஆட்சியை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்த ஆட்சி மாற்றம் ஜனநாயக ரீதியில் நடைபெற்றிருந்தால் நிச்சயமாக நாங்களும் அதனை வரவேற்றிருப்போம். ஆனால் இது ஜனநாயத்திற்கு விரோதமான செயற்பாடு என்பதால் இந்த ஆட்சிமாற்றத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. 2015 ஆண்டிற்கு முன்னர் யார் சிறுபான்மையினருக்கு நெருக்குதல் கொடுத்தார்களோ யார் ஊழல் செய்தார்களோ அவர்களை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமையானது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகும்.

வடகிழக்கு மலையகம் உட்பட தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாக்களித்து தெரிவு செய்த இந்த ஜனாதிபதி வாக்களித்தவர்களுக்கு செய்த நன்றிக் கடன் இது தானா? என்ற கேள்வியை கேட்க வேண்டி இருக்கின்றது. மீண்டும் இந்த நாட்டில் ஊழல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது போல இருப்பதை நினைக்கின்ற பொழுது எங்களுக்கு மிகவும் வெட்கமாக இருக்கின்றது.

கடந்த காலங்களில் சபாநாயகருடைய செயற்பாடுகள் தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் விமர்சனம் செய்திருந்தாலும் அவருடைய செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயத்தை பாதுகாக்கின்ற வகையில் அமைந்திருந்தது என்பதை நாங்கள் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

பல நாடுகளிலும் நாடாளுமன்றங்களில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் எமது நாட்டில் நடைபெற்ற செயலானது மிகவும் மோசமான ஒரு செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இறுதியாக நான் ஜனாதிபதியிடம் விடுக்கின்ற வேண்டுகோள் தயவு செய்து இந்த நாட்டின் நன்மை கருதி மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்தி பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்டு ஒருவரை ஏன் நியமிக்க முடியாது என்பது எனக்கு புரியவில்லை. எனவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரம் கட்டி வைத்துவிட்டு நாட்டின் நலன் கருதி இதனை நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.

SHARE