வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 461 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

94

வவுனியாவில்  வரட்சியால்  பாதிக்கப்பட்ட   21 ஆயிரத்து 461 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

வவுனியாவில் ஏற்பட்ட வரட்சி நிலை காரணமாக 21 ஆயிரத்து 461 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசஅதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் வரட்சி நிவாரணம் வழங்கும் செயற்பாடு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட வரட்சி காரணமாக கடந்த காலத்தில் வவுனியாவும் பாதிப்படைந்தது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 2016 – 2017 பெரும் போகம், 2017 சிறுபோகம், 2017 – 2018 பெரும்போகம் ஆகிய மூன்று போக காலப்பகுதியிலும்  தொடர்ச்சியாக வரட்சியால் பாதிக்கப்பட்ட மேட்டு நில பயிர்ச் செய்கையாளர்கள், விவசாய கூலிகள், நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் ஆகியோருக்கே இந் நிவாரணம் வழங்கப்படுகிறது. இவர்களுக்குரிய நிவாரணத்தை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குகின்றது.

அந்த வகையில்  வவுனியா பிரதேச செயலக பிரிவில் 10525 குடும்பங்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 2765 குடும்பங்களும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1810 குடும்பங்களும்,  வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 6361 குடும்பங்களுக்கு ஆக 21ஆயிரத்து 461 குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கே இந் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இவை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை  தொடர்ந்துபெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பயனாளிகள் மாத வருமானம் 20 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்டதாகவும், பயிர்செய்கை அழிவுக்கு காப்புறுதி பெறாதவர்களாகவும், வாகனம் மற்றும் கடை உள்ளவர்களாக இருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE