‘பிரெக்ஸிற்’பிரித்தானியாவின் எதிர்காலம்?

144

உலகளாவிய ரீதியில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இன்று காணப்படுவது ‘பிரெக்ஸிற்’. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் செயற்பாடு பிரெக்ஸிற் எனப்படுகிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டை துணிந்து நிறைவேற்ற கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் தெரேசா மே முன்வந்தார். இன்று அத்திட்டம் நாடாளுமன்றில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரித்தானிய அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? ஆட்சி கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் இடம்பெறுமா அல்லது திருத்தங்களுடன் பிரெக்ஸிற் மீண்டும் கொண்டுவரப்படுமா என்ற இரு விடயங்கள் காணப்படுகின்றன. அதற்கான பதில், பிரதமர் மே அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் பின்னர் தெளிவாகும்.

பிரெக்ஸிற்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான உறுப்பு நாடான பிரித்தானியா, அதிலிருந்து விலகும் செயற்பாட்டிற்கு ‘பிரெக்ஸிற்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

‘British exit’ அதாவது ‘பிரித்தானியாவின் வெளியேற்றம்’ என்பதை சுருக்கமாக பிரெக்ஸிற் (Brexit) என உலகளாவிய ரீதியில் அழைக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம்

28 நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளின் ஒன்றிணைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் காணப்படுகிறது. குறித்த 28 நாடுகளும் தங்களுக்குள் தடையின்றிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. அத்தோடு, அந்த நாடுகளின் பிரஜைகளும் ஒன்றியத்திற்குள் இலகுவாக பயணங்களை மேற்கொள்ள, கல்வியை தொடர மற்றும் தொழில் நடவடிக்கையில் ஈடுபடவும் இந்த அங்கத்துவம் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த 1973ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தன்னை இணைத்துக்கொண்டது.

வெளியேறும் தீர்மானம்

பிரித்தானியாவின் சுபீட்சமான எதிர்காலம், ஜனநாயக மேம்பாடு மற்றும் தனித்து செயற்படும் ஆற்றல் போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு பிரதமர் தெரேசா பிரெக்ஸிற்றில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். இத்திட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டேவிட் கமரூனால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற மக்கள் ஆதரவளிப்பார்களாயின், தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இத்திட்டத்திற்கு ஆதவாக 52 சதவீதமானோர் வாக்களித்தனர். எதிராக 48 வீதமானோர் வாக்களித்தனர். இதனையடுத்து டேவிட் கமரூன் பதவி விலக, அப்போது உள்விவகார செயலாளராக பதவிவகித்த தெரேசா மே பிரதமராக பதவியேற்றார்.

பிரெக்ஸிற்றிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் பின்னர் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேற தீர்மானித்தது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதிவரை பிரெக்ஸிற் செயற்பாட்டு காலமாக அறிவிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் பிரித்தானியா தன்னை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நிரூபிப்பது அவசியமாகின்றது.

ஆனால், எவ்வாறு வெளியேறுவது என்பதில் ஆரம்பம் முதலே சிக்கல் காணப்படுகிறது.

அதாவது உரிய உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டால் ஒன்றியத்தின் சில சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஒப்பந்தமின்றிய வெளியேற்றத்தில், பிரெக்ஸிற் செயற்பாட்டுக் காலம் இருக்காது. ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய மறுநிமிடமே சகல சலுகைகளும் நிறுத்தப்படுவதோடு, ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகள் மீது நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் உடன் அமுலுக்கு வரும். இவ்விடயத்தில் கட்சிகள் உடன்படாத காரணத்தால் இன்று அத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு தோல்விகண்டுள்ளது.

வடக்கு அயர்லாந்து எல்லைப் பிரச்சினை

அயர்லாந்தின் பெரும்பகுதி, அதாவது அதன் 32 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடந்த 1922ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

ஆறு மாவட்டங்கள் பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் தீர்மானங்கள் அயர்லாந்தில் தாக்கம் செலுத்தும். குறிப்பாக அயர்லாந்துக்கும் வடக்கு அயர்லாந்துக்கும் இடையில் உள்ள எல்லையை கையாளும் விடயத்தில் சர்ச்சைகள் நீடிக்கின்றன.

பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து வடக்கு அயர்லாந்து அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக பிரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை மீறுவதாக பிரெக்ஸிற் திட்டம் அமைந்துள்ளதாக வடக்கு அயர்லாந்து கட்சியான ஜனநாயக ஒன்றியக் கட்சி (DUP) சுட்டிக்காட்டியுள்ளது.

உடன்பாடுகளின்றி பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றிய சுங்கத்திலிருந்தும் வெளியேறும். அவ்வாறு இடம்பெற்றால், அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையிலான பொருட்கள் சேவைகள் பரிமாற்றத்தின்போது சுங்க வரி செலுத்தவேண்டும். சோதனைகளை எதிர்கொள்ளவேண்டும். இது அயர்லாந்துக்கு தலையிடியாக அமையும். இதற்கான தீர்வை எட்டுவதில் பிரதமர் மே எவ்வித உத்தரவாதங்களையும் வழங்காமை, நேற்றைய வாக்கெடுப்பில் ஜனநாயக ஒன்றியக் கட்சி கட்சி எதிர்த்து வாக்களிக்க வித்திட்டது. பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியின் உறுப்பினர்களும் இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு எதிராக வாக்களித்தனர்.

சவால்கள்

2019 மார்ச் 29ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என்பது சட்டத்தில் எழுதப்பட்டுவிட்டது. அத்திகதி நீடிக்கப்படுவதற்கும் சாத்தியமுண்டு. ஆனால், தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எவ்வித எதிர்வுகூறல்களையம் முன்வைக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளின் அங்கீகாரம் இன்றி பிரெக்ஸிற்றை பிரித்தானியா ரத்துசெய்ய முடியுமென கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

பிரெக்ஸிற் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை. அப்படியாயின் அடுத்தகட்டம் என்ன? எவ்வித உடன்பாடுகளும் இன்றி ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டுள்ளது. அது பாரிய பொருளாதார பின்னடைவிற்கு வழிவகுக்கும் என்றும், ஆகவே ஒப்பந்தத்துடன் சிறிது சிறிதாக வெளியேறுவதே உத்தமம் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால், பிரதமர் மேயின் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால், அதனை வெற்றிகொள்ளும் சவாலை பிரதமர் தற்போது எதிர்கொண்டுள்ளார். வாக்கெடுப்பில் வெற்றிபெற்றால், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் புதிய திட்டமொன்றை முன்வைப்பது அவசியம். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

பிரெக்ஸிற் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், மறுபேச்சுவார்த்தைக்கு இடமில்லையென குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான மாநாட்டையோ பேச்சுவார்த்தையையோ நடத்தப்போவதில்லையென ஐரோப்பிய ஒன்றிய ராஜதந்திரி ஒருவரும் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் மூன்று நாட்களுக்குள் புதிய திட்டத்தை முன்வைப்பதற்கான ஏதுநிலைகள் குறைவாகவே உள்ளன. ஆக, பிரெக்ஸிற் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லையென அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படப் போவதில்லையென பிரதமர் மே குறிப்பிட்டுள்ளதோடு, அவ்வாறு செல்வதாயின் அவர்கள் வழங்கிய ஆணையின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அமையுமென குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்ஸிற் எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம்மிக்க நடவடிக்கையாக அமைகின்றதோ, அதேபோல் ஆட்சியில் உள்ள ஒரு அரசாங்கம் பெற்றுக்கொண்ட வரலாற்று தோல்வியாக நேற்றைய வாக்கெடுப்பு அமைந்துள்ளது. அடுத்தகட்டம் குறித்து பிரதமர் மே சிந்தித்தாலும், இன்றைய வாக்கெடுப்பே அதனை தீர்மானிக்கும்.

நன்றி இணையம்