தமிழினப்படுகொலை நீதி கோர தமிழர் திரண்டு தோள்கொடுக்கவேண்டும்-இனப்படுகொலை சாட்சிய ஊர்தியில் இருந்து கஜன்

1001

அடங்காத் தமிழன் எனத் தொடங்கும் பாடலுடன் அந்த ஊர்தி புறப்படுகின்றது.தமிழரின் கால சாட்சியாக ஒரு ஊர்தி புலம்பெயர் மண்ணில் மாறிநிற்கின்றது.ஊர்தியின் மேனி முழுக்க தமிழரின் கண்ணீருக்கும் இரத்தத்துக்கும் படுகொலைக்கும் காரணமான ஒரு கதை புகைப்படங்களாக பரவியிருக்கின்றது.பண்டிகைகளுக்கும் சடங்குகளுக்கும் சுற்றுலாவுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் உலவும் உலகின் தெருக்களின் மத்தியில் ஒரு ஈழத்தமிழனின் ஊர்தி விடுதலைக்கும் தமிழினப்படுகொலைக்கும் நீதி கோரும் குரலாக புறப்பட்டுள்ளது.

நாடுகளின் ஊடாக ஈழத்தமிழர்களின் எழுபத்தொரு ஆண்டு அடக்குமுறை வாழ்வுக்கு விடிவு கோரியும் ஆண்டாண்டு காலமாக சிறீலங்கா ஆட்சியாளர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டதற்கும் இனஅழிப்பு செய்யப்பட்டதற்கும் நீதி கோரியும் செல்லவிருக்கும் அந்த ஊர்தியின் சாரதி முன்னிருக்கையில் இருந்து மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் இறங்கி சொல்லும் கருத்துக்கள் ஒரு காலக்குரல்.அவர் விடும் வேண்டுகோள் இதுதான்

அண்மையில் தாயகத்தின் வடக்குக்கு விஜயம் செய்த சிறீலங்கா பிரதமர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னிலையில் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளை மறக்கும்படி கேட்டதை கஜன் முற்றிலும் நிராகரிக்கிறார்.மறப்பதற்கு நடந்தவை என்ன சாதாரணவிடயமா இரத்தம் சதையாக ஓலமாக அது இருக்கின்றது.அதை மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது சிலவேளை சிறீலங்கா அரசாங்கத்தோடு சோரம்போயுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ரணிலின் கருத்தை ஆமோதிக்கலாம் ஒரு தமிழனாக நாம் அதை ஏற்கமாட்டோம்.

இன்னமும் சிறைக்கைதிகளுக்கு விடுதலை இல்லை.கேப்பாப்புலவு மக்கள் தங்கள் சொந்த நிலத்துக்காக இன்னமும் போராடுகின்றார்கள்.அவர்களுக்கு பாடசாலை தெருக்கள் கோயில்கள் மருத்துவமனை குளங்கள் என எல்லாவற்றையும் இன்னமும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள் வலிந்து காணாமல் செய்யப்பட்ட உறவுகளை அவர்களின் சொந்தங்கள் தேடிதேடி செத்தும் கொண்டிருக்கின்றன.எப்பிடி மன்னிக்கமுடியும்.சிங்கள தேசத்தின் தலைவர்கள் தமிழர்கள் விடயத்தில் ஒற்றுமையாக உள்ளார்கள்.ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கும்போது அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் சர்வதேசத்தை ஏமாற்ற காணிவிடுவதுபோலவும் மரம் நாட்டுவதுபோலவும் அடிக்கல் நாட்;டுவதுபோலவும் நடிக்கின்றார்கள்.ரணில் மைத்திரி மகிந்த மூவரும் ஒருவரே என கஜன் சொல்கின்றார்.
ஆனால் தமிழர்கள்தான் தங்கள் இனவிடயத்தில் ஒன்றாக இல்லை.நிலத்திலும் புலத்திலும் ஒருமித்த குரல்கள் இல்லை.தமிழர்கள் பற்றி பேச ஒரு உத்தியோகபூர்வ தமிழர்களின் சார்பான ஒரு பேரமைப்பு இல்லை.ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்ட வடிவமாக மாறவேண்டும்.எதிர்வரும் மார்ச் 4ம் நாள் ஜெனிவா முருகதாசன் திடலில் தமிழர்கள் பெரும்பலமாக திரண்டு தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரவேண்டும்.அதை வலியுறுத்தி நாடுகளுள் ஊடாக பயணிக்கவிருக்கும் இந்த இனப்படுகொலை சாட்சிய ஊர்திக்கு அனைத்து தமிழர்களின் ஆதரவை கோரி நிற்கின்றேன் என வேண்டுகோள்விடுக்கின்றார் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன்
நிலமும் புலமும் தமிழகமும் ஒன்று திரண்ட பலத்தினால்தான் தமிழினத்துக்கான நீதியும் உரிமையும் சாத்தியம் அதுவரை எமது நீதிகோரும் இந்தப்பயணங்களும் குரல்களும் ஓயாது ஒலிக்கும் என அவர் அனைத்து தமிழர்களையும் நோக்கி கரம் நீட்டுகின்றார்.

SHARE