ஏழாவது ஆண்டாக ஐநாவின் முன் வைக்கபட்டுள்ள தமிழின இனப்படுகொலை சாட்சிய புகைப்படங்கள்

368

ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை அமர்வு இன்று ஆரம்பித்துள்ளது எதிர்வரும் 22ம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் சிறீலங்கா அரசால் தமிழர்கள் மீது கடந்த 71ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறை உரிமை மறுப்பு இனப்படுகொலை வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பாலியல்வன்புணர்வு சித்தரவதை அரசியல்கைதிகளை விடுவிக்காமல் இன்னமும் சிறையில் வைத்திருத்தல் போன்ற பல விடயங்களை தமிழ் மக்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களும் மனித உரிமை அமைப்புக்களும் மக்கள் பிரதிநிதிகளும் புலம் பெயர் தமிழக தாயக பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து உரையாற்ற உள்ள நிலையில்

கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் கடந்த 71ஆண்டுகளாக சிறீலங்காவின் மாறிமாறி வந்த சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை பாலியல்வன்புணர்வு நிலஅபகரிப்பு கட்டமைக்கப்பட்ட அடையாள அழிப்பு கைதுகள் கடத்தல்கள் உள்ளிட்டவைகளை சாட்சியப்படுத்தும் வகையிலான புகைப்படங்களை ஆதாரங்களை காட்சிப்படுத்தும் மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் இம்முறையும் ஐநா முன்றலில் இனப்படுகொலை சாட்சியப்புகைப்படங்களை வைத்துள்ளார்
இம்முறை ஐநா முன் இனப்படுகொலை சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட ஊர்தியும் கஜனால் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த ஊர்தி இக்கூட்டத்தொடரினை அடுத்து ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழினத்திற்கு நீதி கோரி பயணம் செய்யவிருக்கின்றது.

இப்பயணத்தில் அந்தந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் ஈழ உணர்வாளர்கள் ஆதரவு வழங்கியும் குரல் கொடுத்து விரைந்து நீதி கிடைக்க பலம் சேர்க்குமாறு ஒழுங்கமைப்பாளர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.மேலும் இனப்படுகொலை சாட்சியங்களான புகைப்பட ஆதாரங்களை காவிச்செல்லும் இந்த ஊர்தி பயணம் இடைவிடாத தொடர பொருளாதார பலத்தை புலம்பெயர் தமிழர்கள் ஈழ உணர்வாளர்கள் வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

உலகின் முற்றத்தில் இன்றுவந்துள்ள தமிழின இனப்படுகொலை சேதியூடாக அதற்கு நீதி கோரும் பயணத்தின் ஊடாக தமிழர்களின் இலட்சியமான வடக்கு கிழக்கு பூர்வீக தாயகத்தில் உரிமைகளுடன் கூடிய அதிகாரத்தை பெறும் ஜனநாயக போராட்டத்திற்கு இந்த புகைப்பட சாட்சியங்கள் பலம் சேர்ப்பவை.ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் இத்தகைய ஜனநாயக வழியிலான தொடர்போராட்டங்களே உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர்களின் நியாயமான ஒரு போராட்ட வரலாற்றை அறியச்செய்யும் என்பதால் இவை தொடரவும் பலப்படுத்தவும் வேண்டிய கடமையை புலம்பெயர் தமிழர் சமுகம் கொண்டிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE