பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை கேட்காது ஐநாவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் கவலைக்குரியதாகும்-ஜெனிவாவில் லீலாதேவி

37

 

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வடக்கு கிழக்கு காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சார்பாக சென்றுள்ள திருமதி லீலாதேவி ஆனந்தநடராஜா ஜெனிவா முன்றலில் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் வைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நிழற்பட சாட்சியங்களை பார்வையிட்ட பின் பிரத்தியேக நேர் காணல் ஒன்றை புனித பூமி இணையத்திற்கு வழங்கி இருந்தார் அதில்

ஐக்கிய நாடுகள் சபையில் இம்முறை மேலும் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படுவது வருந்தத்தக்கது.நாம் சிறீலங்காவில் நீதி கேட்டு முடியாது என்ற நிலையிலேயே சர்வதேசத்தை நம்பினோம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையை நம்பினோம் ஆனால் அவையும் பாதிக்கபட்ட எங்களின் குரல்களுக்கு செவி சாய்க்காமல் எமக்கு துயரத்தை சிறீலங்கா அரசாங்கத்துக்கு பக்கச்சார்பாக செயல்படுவதுபோல ஒரு மன எண்ணம் எங்களுக்கு ஏற்படுகின்றது.நான் இங்கு வந்து பல பேரிடம் உரையாடிய நிலையில் சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்படுகின்ற தீர்மானம் என்பது கிட்டத்தட்ட முடிந்த முடிபாகவே காணப்படுகின்றது.இதில் என்ன கவலை என்றால் பாதிக்கபட்டவர்கள் நாங்கள் இருக்கும்போது எங்களின் கருத்துக்களை மதிக்காமல் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தாங்கள் நினைத்தபடி சிறீலங்கா அரசுக்கு சார்பாக சர்வதேசத்தோடு இணைந்து செயற்படுவதாக சில செவிவழி வந்த கதைகள் குறிப்பிடுகின்றன.அது பற்றி அத்தகைய அமைப்புக்கள் நபர்கள் பற்றி மேலும் பாதிக்கபட்டவர்களாகிய நாம் அறிந்து எதிர்வரும் காலத்தில் அதற்கு ஏற்றவகையில் எங்கள் செயற்பாடுகளை மேற்கொள்வோம்.நாம் ஏற்கனவே சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறீலங்காவில் ஏனைய நாட்டு தூதரக பிரதிநிதிகளையும் சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தோம்.ஓஎம்பி என்பது பற்றியும் அது எமக்கு தேவையில்லை என்றும் அந்த அலுவலகத்தின் நிலை சிறீலங்காவில் எவ்வாறு மிகக்குறைபாட்டுடன் உள்ளது என்பதையும் தெளிவு படுத்தியிருந்தோம்.ஆகவே பாதிக்கப்பட்ட எங்கள் கருத்துக்ளை கேட்காது சர்வதேசத்தில் ஐநா மனித உரிமைப்பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வரலாற்றில் கறை படிந்த பக்கங்களாகவே மாறும்.

ஆயினும் நாம் தொடர்ந்து போராடுவோம்.இருபதாம் திகதி ஐநா மனித உரிமைப்பேரவை ஆணையாளரின் அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்.சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக தீர்மானம் வரும்போது அது தொடர்புடைய நாடுகளுக்கு கடிதங்களை எழுத இருக்கின்றோம்.குறிப்பாக பிரித்தானியா மகாராணியாருக்கும் எழுதவுள்ளோம்.ஏனெனில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போது தமிழர்களை பிரித்து அவர்களுக்கும் சுதந்திரம் வழங்கி இருந்தால் இன்று எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.எனவே அதுபோன்றதொரு தவறை சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு மீண்டும் எங்களை அவலத்துள் தள்ளவேண்டாமென கடிதம் உள்ளளோம் என அவர் தெரிவித்ததோடு.மேலும் நடந்த நடக்கவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தார்.