பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக வழக்கு: தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம்

135

 

பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகத்தைக் கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) வகுப்புகளை புறக்கணித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்  வலியுறுத்தி இவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கல்லூரி மாணவ, மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

இதேபோன்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் இவ்வாறு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தோனியார் தேவாலயம் தொடங்கி அண்ணாசாலையில் பேரணியாக சென்ற மாணவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விவகாரமானது நாடளாவிய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE