பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்

958

உலகத்தின் பரப்பில் பறந்த
ஓர் ஊர்க்குருவி பறந்துவிட்டது நெடுந்தூரம்
பவுஸ்ரின் எனும் பறவை இனி வராது
பாதை மாறாத ஒரு புரவி
வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்
ஆழவேரில் வசித்த ஒரு ஆன்மா
மனதின் நுனிவரை படர்ந்திருந்து
நொடிப்பொழுதில் மூச்சடங்கிவிட்டது
காலை தொடங்கி ஒரு நாளின் வேளைமுடியும்வரை
இனவிடுதலை பற்றியே
எழுச்சி கொண்டிருந்த ஒரு சக பயணி பவுஸ்ரின்
தமிழினத்துக்காக துடிக்கும் இதயங்களோடு
எப்போதும் நெருங்கியிருந்த உறவு
ஈன்ற பிள்ளைகளுக்கு எல்லாம்
பிரபாகரன் எனத் தொடங்கி
களமாடிய பெருவேங்கைளின் பெயரையே இட்ட பெருமகன்
தன்னினத்தையும்
தன் குடும்பத்தையும் வேறாக்கத் தெரியாது ஒரு பரிசுத்தவேர்
ஆரம்பகாலம் தொட்டு
விடுதலைப்பயணத்தில் ஒன்றித்து இருந்த ஒப்பற்ற மாமனிதர்
தடுமாறிப்போயும் விடுதலைப்பாதை
தடம்புரண்ட தருணத்திலும்
வடம் எது சரியானதென பற்றி
தேரை இழுத்து நின்ற தீர்க்கதரிசி
இன உரிமைக்கான முகவரிகளில் ஒன்று பவுஸ்ரின்
உண்மையான மண் பற்றாளனுக்கான
பழுதற்ற பலம் இவர்
பவுஸ்ரின் விடைபெற்றாலும்
விழுதுக்கு இவர் பலம்
தாங்கும் என்றும் நினைவை ஈழநிலம்

-புனிதபூமி இணையத்தளம்