16.05.2009 சனிக்கிழமை. கொழும்பு வெள்ளவத்தை கனல் பாங்க் வீதியில் உள்ள வீடொன்று சிறீலங்கா ஆயுதப் படைகளாலும், புலனாய்வாளர்களாலும் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த இளம் பெண் ஒருவரும், அவரது கைக்குழந்தையும் கைது செய்யப்படுகின்றனர்.
சம நேரத்தில் பம்பலப்பிட்டியில் உள்ள மஜெஸ்ரிக் சிற்றி கொம்ப்ளெக்ஸ் எனப்படும் வணிக வளாகத் தொகுதியும் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த பனாமாரிறேடேர்ஸ் என்ற மின்னியல் உபகரண நிறுவனம் இழுத்து மூடப்பட்டு, அங்கிருந்த பணியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் சிங்களப் புலனாய்வாளர்கள் தேடி வந்த இலக்கு மட்டும் சிக்கவில்லை.
அவர்களின் இலக்கு கொழும்பு பிரபா எனப்படும் இராமசாமி பிரபாகரன்.மறுபுறத்தில் வெள்ளவத்தை சிறீலங்கா காவல்துறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இளம் பெண், தொலைபேசி மூலம் கொழும்பு பிரபாவைத் தொடர்பு கொள்ளுமாறு பணிக்கப்படுகின்றார். அந்தப் பெண் வேறு யாருமல்ல கொழும்பு பிரபாவின் துணைவியாரான சிரோமியே அவர்.
. . . . . . . . . .
19.05.2009 காலை. இந்தியாவில் இருந்து கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் சிங்களப் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்படுகின்றது. விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் உள்ளே புகுந்த எஸ்.பி மகின் டோல் தலைமையிலான சிங்களப் புலனாய்வாளர்கள் அங்கிருந்த பயணி ஒருவரைக் கைது செய்கின்றனர்.
ஐந்து நாட்களாக சிங்களப் புலனாய்வாளர்கள் தேடிக் கொண்டிருந்த கொழும்பு பிரபா இப்பொழுது கோத்தபாயவின் சித்திரவதைக் கூடத்தில்.நடந்தது இதுதான். கொழும்பு பிரபாவின் துணைவியார் சிரோமியையும், அவரது குழந்தையையும் கைது செய்து வெள்ளவத்தை காவல்துறை நிலையத்திற்குக் கொண்டு சென்ற சிங்களப் புலனாய்வாளர்கள், பிரபாவைப் பற்றிக் கேட்ட பொழுது, அவர் இந்தியா சென்றிருப்பதாக சிரோமி கூறியுள்ளார்.
சிங்களப் புலனாய்வாளர்களோ விடுவதாக இல்லை. அவருடன் உடனடியாகத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாடுதிரும்புமாறு வற்புறுத்துமாறும், அல்லாது போனால் அவர்களின் குழந்தையைத் தாம் கொன்று விடப் போவதாகவும் மிரட்டியுள்ளார்கள்.
தொலைபேசி மூலம் மனைவி தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறியதும் பிரபா வெலவெலத்துப் போனார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தான் ஏற்கனவே சிறீலங்கா தேசியப்புலனாய்வுத்துறைக்கு வேலை செய்பவர் என்றும், இரட்டை முகவராக இருந்து தான் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் முகவர்கள் கொழும்பு கைது செய்யப்பட்டதையும் அவர் எடுத்து விளக்கியுள்ளார்.
சிங்களப் புலனாய்வாளர்களோ மசியவில்லை. கடைசியில் கோத்தபாயவின் பணிப்புரையில், கொழும்பு பிரபாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட துணை காவல்துறை மாஅதிபர் (டி.ஐ.ஜி) அனுர சேனநாயக்க, எதுவாக இருந்தாலும் கொழும்பு வந்து விளக்கமளிக்குமாறும், அவரது உயிருக்கு கோத்தபாய ராஜபக்ச உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் தான் 19.05.2009 அன்று இந்தியாவில் இருந்து பிரபா கொழும்பை வந்தடைந்தார்.
. . . . . . . . . .
கோத்தபாயவின் சித்திரவதைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கொழும்பு பிரபாவின் செல்பேசியை ஆராய்ந்த சிங்களப் புலனாய்வாளர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.
14.05.2009 அன்று இரத்மலானை படை முகாமில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஆமி அங்கிள் எனப்படும் லெப்.கேணல் விக்கிரமசிங்க ஆராச்சிகே ரஞ்சித் பெரேராவின் தொலைபேசி எண் அதில் காணப்பட்டதே அதற்கு காரணம்.
எப்படியோ, கே.பியின் பிரித்தானிய நிதி இணைப்பாளரான கரன் என்றழைக்கப்படும் சொக்கலிங்கம் சிறீகரன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்த இருந்த தாக்குதலை முறியடித்து, ஆமி அங்கிளைக் கைது செய்த சிங்களப் புலனாய்வாளர்களுக்கு, அவருடன் தமது இரட்டை முகவரான கொழும்பு பிரபா இரகசியத் தொடர்பில் இருந்தது ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது.
இதை விட மிகப் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், இராமசாமி பிரபாகரனின் நடவடிக்கைகளில் தமக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கைது செய்யப்படுவதற்கு ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது 20.03.2009 அன்று, சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கபில காமினி கெந்தவிதாரணவிடம் சிங்களப் புலனாய்வாளர்கள் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள்.
ஆனால் அவர் கோத்தபாயவிற்கு நெருக்கான இரட்டை முகவர் என்றும், அவரது நடவடிக்கைகளைக் கண்டு கொள்ள வேண்டாம் என்றும், அப்பொழுது கெந்தவிதாரண தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் ஆமி அங்கிளுடன் கொழும்பு பிரபாவிற்கு இருந்த தொடர்புகள் பற்றி அறிந்ததும் கொதித்துப் போன கோத்தபாய, அவரது நடவடிக்கைகள் பற்றிய முழு அறிக்கையையும் கெந்தவிதாரணவிடம் கேட்டிருக்கின்றார்.
அதன் பின்னர் தான் கொழும்பு பிரபாவிற்கும், இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரிக்கும் இடையில் இருந்த நெருக்கம் பற்றியும், இருவரும் கொள்ளுப்பிட்டியில் உள்ள நீச் சல் தடாகவளாகத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் என்பதும் கோத்தபாயவிற்குத் தெரிய வந்தது.
கோத்தபாயவின் சித்திரவதைக் கூடத்தில் முதலில் கொழும்பு பிரபா மரியாதையுடன் தான் நடத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவராகவும், தமது தேசிய புலனாய்வுத்துறையின் முகவராவும், இந்திய றோ நிறுவனத்தின் முகவராகவும் கொழும்பு பிரபா இயங்கினார் என்பது கோத்தபாயவிற்கு தெரிய வந்ததும், அவர் மீதான கவனிப்பில் மாற்றம் ஏற்பட்டது. அதுவரை அவரைப் பண்புடன் விசாரணை செய்து வந்த எஸ்.பி மகின் டோலின் தோரணை கடுமையாக மாறியது.
இதற்கிடையில், தனக்கும் ஆமி அங்கிளுக்கும் இடையிலான உறவு தனிப்பட்ட ரீதியிலானது என்றும், பண்டாரவளையில் வசிக்கும் தனது உறவுக்காரர் ஒருவரின் அயல் வீட்டவர் என்ற வகையிலேயே தனக்கு ஆமி அங்கிளுடன் தொடர்பு இருந்ததாகவும் கொழும்பு பிரபா வாக்குமூலமளித்திருக்கின்றார்.
ஆனால் இதை நம்ப கோத்தபாய தயாராக இருக்கவில்லை. உடனடியாக ஆளை நான்காம் மாடிக்கு மாற்றி விசாரிக்க வேண்டிய விதத்தில் அவரை விசாரிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.
அதன் பின்னர் கொழும்பு பிரபாவை விசாரிக்கும் பொறுப்பு எஸ்.பி மகின் டோலிடமிருந்து அவரது உயர் அதிகாரியான எஸ்.எஸ்.பி வாஸ் குணவர்த்தனவிற்கு மாற்றப்பட்டது. கோத்தபாயவால் இயக்கப்பட்ட வெள்ளை சிற்றூர்திக் கொலைக் கும்பல்களின் இணைப்பாளர்களில் ஒருவராக விளங்கிய வாஸ் குணவர்த்தன, கொழும்பு பிரபாவை சித்திரவதை செய்யும் நடவடிக்கைகளை தானே நேரில் கண்காணித்தார்.
இது பற்றி சட்டத்தரணிகளான ரொமேஸ் டீ சில்வா, கே.எஸ்.இரத்தினவேல் ஆகியோர் ஊடாக 2012ஆம் ஆண்டு சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் இராமசாமி பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுகையில், ஆரம்பத்தில் தனது அந்தரங்க உறுப்பு உட்பட தனது உடல் முழுவதும் இரும்புக் கம்பிகளால் தாக்கித் தன்னை வாஸ் குணவர்த்தன சித்திரவதை செய்தாக வாக்குமூலமளித்திருந்தார்.
அதற்கு முன்னர் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்றின் சித்திரவதைக்கு எதிரான குழுவிற்கு அனுப்பிவைத்த மனுவில் இராமசாமி பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுகையில்: ‘என்னைத் தடுப்புக் காவலில் வைத்திருந்த நாட்களில் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு மரக்கட்டைகளால் அடிப்பார்கள். எனது நகங்கள் பிடுங்கப்பட்டன. எனது தலையை ஆணிகளால் கீறினார்கள். இவ்வாறான சித்திரவதைகளின் பொழுது நிலத்தில் வடிந்து ஓடிய எனது குருதியை எனது நாக்கால் நக்கிக் குடித்து சுத்தம் பண்ணுமாறு நிர்ப்பந்தித்தார்கள்.’
தமது இரட்டை முகவராக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும், முகவர்களையும் காட்டி கொடுத்த ஒருவரை இந்த அளவிற்கு சித்திரவதை செய்யுமாறு கோத்தபாய ராஜபக்ச கட்டளை பிறப்பித்ததற்கு, அவருக்கும் ஆமி அங்கிளுக்கும் இடையில் இருந்த உறவா அல்லது இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரியுடன் இருந்த உறவா காரணம் என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.
உண்மையில் இவையிரண்டுமே காரணங்கள் அல்ல. கொழும்பு பிரபாவைக் கொடூரமாக சித்திரவதை செய்யுமாறு எஸ்.எஸ்.பி வாஸ் குணவர்த்தனவிடம் கோத்தபாய ராஜபக்ச பணித்தமைக்கு அவர் பற்றி கே.பியின் பிரித்தானிய நிதி இணைப்பாளர் கரன் வழங்கிய இன்னொரு தகவலே காரணமாகும்.
(மடையுடைப்புத் தொடரும்)
நன்றி: ஈழமுரசு
முன்னைய தொடர்கள்:
பாகம் – 29