வடமாகாணத்தில் போரின் பின்னரான சூழலில் அங்கு 36சதவீதம் வறுமை காணப்படுகின்றது

189

வடக்கு மக்களின் பிரச்சினைகளை பட்டியல் படுத்தாது அதிகாரங்களை கோருவதால் எவ்விதமான பயனுமில்லை. பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றை தீர்ப்பதற்கே அதிகாரங்கள் அவசியமாகின்றன. வடக்கு மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகள் உள்ளன என இலங்கையின் முன்னணி தொழிலதிபரான தம்மிக்க பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- நாட்டின் பொருளாதார நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- எமது நாட்டில் வருடமொன்றுக்கு 3இலட்சத்து 60ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு 30ஆயிரம் பேரே செல்கின்றனர். இதனடிப்படையில் பார்க்கையில், நூற்றுக்கு 8சதவீதமானவர்களே பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றார்கள். எஞ்சிய 92சதவீதமானவர்கள் மூலம் வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்கள் தான் உருவாக்கப்படுகின்றார்கள். இதனால் 4ஆயிரம் டொலர்களை தாண்டி பொருளாதார நிலையொன்றை அடைய முடியாது. இவ்வாறு பொறியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்வதற்கு வட்டிவீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் நெருக்கடியான நிலைமைகள் ஏற்படுகின்றன. இதனால் தான் கடந்த நன்கு வருடங்களில் 4இலட்சத்து 40ஆயிரம் தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன.

கேள்வி:- அரசாங்கங்கள் பெற்ற கடன்கள் பொருளாதார நெருக்கடியில் செல்வாக்குச் செலுத்தவில்லையா?

பதில்:- எந்தவொரு நாடும் கடன்களை பெறுவது இயல்பானது. பொருளாதார நிலை உயர்வடையாத நிலையில் கடன்கள் பெறப்படுகின்றபோது மொத்த தேசிய உற்பத்தி வீதத்துடன் பார்க்கையில் அவை அதிகரிக்கும். 2015இல் மொத்த தேசிய உற்பத்தியுடன் பார்க்கையில் நாட்டிற்கு 70சதவீதம் கடன்கள் இருந்தன.

தற்போது இந்த வீதம் 90ஆக மாறியுள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் 84ஆயிரம் டொலர்கள் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே கடன்தொகை அதிகரித்துள்ளது.

கேள்வி:- வடமாகாணத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலைமைகள் தொடர்கின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- வடக்கில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது வரையில் அங்கு காணப்பட்ட அடிப்படைப்பிரச்சினைகள் முதல் அனைத்துப் பிரச்சினைகளையும் சரியாக வகைப்படுத்தப்பட்டு முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதுவே வடக்கில் தற்போது வரையில் பல்வேறு பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருப்பதற்கு காரணமாகின்றது.

மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நீண்ட தூரங்கள் பயணிக்க வேண்டிய நிலைமைகள் முழு நாட்டிற்கும் பொருந்துவதாக இருந்தாலும் வடக்கில் அதிகமான பின்னடைவுகள் இருக்கின்றன. கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன உரிமை மாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், ஆபணங்கள் மற்றும் மாணிக்கக்கல் கூட்டுத்தாபனம் இத்தகைய அரச நிறுவனங்களின் கிளைக்காரியாலயங்கள் 25மாவட்டங்களிலும் தலா ஐந்து வீதம் நிறுவப்படுமாகவிருந்தால் இதுதொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் விரைவில் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இத்தகைய கட்டமைப்புக்கள் செயற்படுமாகவிருந்தால் தமக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற மனநிலை தோற்றம் பெற்றுவிடும். இந்த நிறுவனங்கள் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்காக கொழும்புக்கு வருகைதர வேண்டியிருப்பதன் காரணமாகவே தமக்கு அதிகாரங்கள் இல்லை என்ற சிந்தனை அந்த மக்கள் மத்தியில் அதிகமாக எழுகின்றது. அதனாலேயே அதிகாரங்களை வழங்குங்கள் என்று வலிந்து நிற்கின்றார்கள்.

ஆகவே வடக்கு மக்களின் அதிகாரப்பகிர்வுக்கான விடயத்தில் முதலில் அவர்களின் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றுவதற்கான அரச கட்டமைப்புக்களை அங்கு ஏற்படுத்த வேண்டியதே முதலில் செய்யப்பட வேண்டிய அடிப்படை விடயமாகின்றது.

கேள்வி:- போரின் பின்னர் வடக்கில் பின்னடைந்துள்ள கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பின்மை, வறுமை அதிகரிப்பு உட்பட பொருளாதார மேம்பாட்டிற்கு தடையாக உள்ள விடயங்களை எவ்வாறு களைய முடியும்?

பதில்:- வடக்கு மாகாணத்தில் இரண்டு இலட்சத்துக்கு 75ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 11இலட்சம்பேர் வாழ்கின்றார்கள். இதில் ஒரு இலட்சம் குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணத்தினை பெறுபவையாக இருக்கின்றன.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது போரின் பின்னரான சூழலில் அங்கு 36சதவீதம் வறுமை காணப்படுகின்றது. இதனால் உணவு இல்லாத நிலையில் மாணவர்கள் பாடசாலை செல்லும் நிலைமைகள் தோற்றம்பெற்றிருக்கின்றன. ஆகவே இரண்டு பிஸ்கட்டுக்களை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு வழங்கினால் கூட அதுவே பெரும் நிவாரணமாகின்றது.

வடக்கில் வருடமொன்றுக்கு 17ஆயிரம் குழந்தைகள் அங்கு பிறக்கின்றன. 2 இலட்சத்து 45ஆயிரம் பாடசாலை செல்லும் மாணவர்கள் இருக்கின்றார்கள். வருடமொன்றுக்கு பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் 2800மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். ஏனைய 14 ஆயிரம் பேரில் மேலும் மூவாயிரம் பேர் மூன்று பாடங்களில் சி தரச் சித்திகளைக் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலைமையே இருக்கின்றது. ஆகவே இவ்வகையான மாணவர்களுக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீட்டினை அரசாங்கம் செய்து விசேட கடன் உதவிகளை வழங்கி தனியார் பல்கலைக்கழகத்திற்காகவாவது அனுப்ப வேண்டும். ஏனையவர்களை தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் துறைசார் தொழில் கல்விக்குள் உள்வாங்க முடியும். இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அடுத்ததாக வேலைவாய்ப்பு விடயத்தினை கருத்திற்கொள்கின்றபோது, அங்குள்ள வியாபாரிகளுக்கு மென்கடன்களை வழங்கி பணியாட்தொகுதியை அதிகரிப்பதற்கான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட துறைகளுக்கு இவ்வாறான செயற்றிட்டத்தினை பிரயோகிக்க முடியும். அதேநேரம் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் பணியாற்றுவதற்காக வைத்தியர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் கடமையாற்றுவதற்கு(வடமாகாணத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட) செல்வதற்கு தயாரில்லாத நிலைமை தான் உள்ளது.

காரணம், அவர்களின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான தனியார் துறை சூழல் இன்மை, தமது அடுத்த சந்ததியினருக்கான ஆங்கிலமொழிக்கல்விக்கான சூழலின்மை உள்ளிட்டவை இதற்கு அடிப்படைக் காரணமாகின்றன. சிறந்த தனியார் வைத்தியசாலைகள், சர்வதேச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை அங்குள்ள மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறால்லாது விட்டால் வடக்கில் உருவாகும் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் தமது பிரதேசங்களுக்கு செல்லாது தலைநகர், வெளிநாட்டை நோக்கி நகரும் நிலைமையே அதிகமாக இருக்கும்.

வடக்கின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதாயின் உடனடியாக சுற்றுலாத்துறை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இதற்கு சிறந்த போக்குவரத்து காணப்பட வேண்டும். ஏழு மணித்தியாலங்களுக்கும் அதிகமான பயணங்களை சுற்றுலாப்பயணிகள் விரும்பமாட்டார்கள். ஆகவே கட்டுநாயக்கவிலிருந்து பலாலிக்கான விமான போக்குவரத்து சீராக இடம்பெறவேண்டும். அதுமட்டுமன்றி பலாலியிலிருந்து அயல்நாடுகளுக்கான அல்லது வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்வதற்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் புதிய தொழில்வாய்ப்புக்களும் அங்கு ஏற்படும்.

போரின் பின்னர் ஆட்சியில் இருந்த இரண்டு அரசாங்கங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் மெத்தனமாக இருந்தபோது அந்த மக்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்ற கேள்வி ஒன்றுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்று கூறமுடியாது. எனினும் தமது அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமை தொடருகின்ற நிலையில் அதற்கு எதிராக அம்மக்கள் பிரதிபலிக்க வேண்டும்.

கேள்வி:- காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தரப்பினரின் விடயங்களுக்கு உங்களிடத்தில் எத்தகைய முன்மொழிவுகள் உள்ளன?

பதில்:- அரசாங்கத்திற்கு புதிய தொழில்முயற்சிகளை உருவாக்கி அவர்களுக்கு வழங்க முடியாத நிலைமைகள் தான் இருக்கின்றன. ஆகவே இவர்களுக்கான தொழில் முயற்சிகளை உருவாக்குவதென்றால் தனியார் துறையினராலேயே இயலுமானதாக இருக்கும். கொழும்பிலிருந்து அங்கு சென்று தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதை பலர் விரும்புவதில்லை. ஆகவே அங்குள்ளவர்களைத் தான் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்குரிய வகையில் நகர்த்த வேண்டும்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நிபந்தனையுடனான மரணச்சான்றிதழை வழங்கி அவர்களுக்கான கொடுப்பனவுகள் செய்யப்படுவதுடன் அந்தக்குடும்பங்களின் வருமானத்தினை மேம்படுத்துவதற்குரிய செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நீதித்துறை ஊடாக அவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதனை மீளப்பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு பண்ணை வளர்ப்பு, நீர்சேகரிப்பு போன்ற தொழில்முயற்சி திட்டங்களை முன்னெடுக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்முயற்சிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 20ஆயிரம் பேர் வரையிலானவர்கள் உடனடியாக வீட்டுத்தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள். ஒருஇலட்சம் வரையிலானவர்கள் குடிநீர் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவற்றுக்கான தீர்வினை வழங்குவதென்பது

அரசாங்கத்திற்கு இயலாத விடயமொன்றல்ல. அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு இதயசுத்தியுடன் விரும்புமாக இருந்தால் செயற்கை நுண்ணறிவு, ஜியோ தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவர்களை அடையாளம் கண்டு தீர்வினை வழங்க முடியும்.

கேள்வி:- போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்ளெழுச்சிக்கு செயற்கை நுண்ணறிவை அதியுச்சமாக பயன்படுத்த முடியும் என்பதை உதாரணங்களுடன் கூறுங்கள்?

பதில்:- வடமாகாணத்தின் பல்வேறு துறைகளுக்காக செயற்கை நுண்ணறிவை அதியுச்சமாக பயன்படுத்த முடியும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. உதாரணமாக வேலைவாய்ப்பு விடயத்தினை எடுத்துகொள்வோமாகவிருந்தால் அம்மாகாணத்திற்குள்ளேயே சுமார் மூவாயிரம் வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனை சாதாரண மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்குமாயின் மறுதினமே தொலைபேசி செயலிகள் ஊடாகவோ அல்லது ஜியோ தொழில்நுட்பம் ஊடாகவே பொருத்தமானவர்களின் தகவல்களை திரட்டி நியமனங்களை வழங்க முடியும்.

ஆனால் விமான நிலையத்தினை சீராக முகாமை செய்ய இயலாது, அங்கு குடிவரவு செயற்பாடுகளை கட்டமைக்க முடியாது, முறைசார்ந்த விமான நிலைய போக்குவரத்துவரத்து சேவையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

கேள்வி:- வடக்கின் பொருளாதார மேம்பாடு தொடர்பான விடயத்தில் ஏற்கனவே இயங்கிய தொழில்துறைகளை மீள இயக்குவது பற்றிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் முதலீட்டாளர்கள் மற்றும் நிதிப்பிரச்சினைகள் காணப்படுகின்றதே?

பதில்:- கைத்தொழில் கட்டமைப்பொன்றின் ஆயுட்காலம் ஆகக்கூடியது 35வருடங்களாகின்றன. ஆகவே கடந்த காலத்தில் இயங்கிய கைத்தொழில்துறையையே மீண்டும் இயக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னோக்கி செல்வதை தவிர்க்க வேண்டும். காரணம், அத்தொழில் துறைக்கான மூலப்பொருட்கள் பெறுவதிலிருந்து பல்வேறு விடயங்களை மீளவும் ஆராய வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய விடயங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும். உதாரணமாக கூறுவதாயின், இந்திய மீனவர்கள் வடக்கு கடற்கரையோரங்களில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாக அவர்களுடன் முரண்பாட்டுக்குச் செல்கின்றார்கள். வுடக்கு மீனவர்களுக்கான மீன்பிடிப் படகுகளுக்கான மென்கடன்களை வழங்கி அவர்களின் தொழிலை ஊக்குவித்தால் அயல்நாட்டவர்களுடன் முரண்பட வேண்டிய சூழலே ஏற்பட்டிருக்காது. ஆகவே அப்பிரதேசத்தின் வளங்களை மையப்படுத்தி இத்தகைய சிந்தனைகளைத் தான் நாம் எதிர்காலத்தில் பின்பற்ற முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி:- வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு மொழியொரு தடையாக இருக்கின்றது. அதற்கு மாற்றுவழியேதும் உண்டா?

பதில்:- ஆம், தற்போதைய தொழில் முயற்சிகள் அனைத்துமே உலகளாவிய சந்தையை மையப்படுத்தியே அமைகின்றன. இலங்கையர்கள் என்ற அடிப்படையில் தமது தாய்மொழியை கற்பது அவசியம். ஆனால் வடக்கில் உள்ளவர்கள் சிங்கள மொழியை கற்பதற்கும் தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியை கற்பதற்கும் விரயம் செய்யும் காலத்தில் ஆங்கில மொழியை கற்பார்களானால் அவர்கள் உலகளாவிய சந்தையில் தொழில்வாய்ப்பினை பெறுவதற்கு வழிசமைப்பதாய் இருக்கும். எதிர்கால சந்ததியினரை உலக சந்தையில் பணியாற்றக்கூடிய வகையில் தயார்படுத்துவோமாக இருந்தால் அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெறமுடியும்.

கேள்வி:- வடக்கு உட்பட நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றபோது அதனை மையப்படுத்திய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்காமைக்கான காரணம் என்ன?

பதில்:- பொதுமக்களின் துக்கத்தில் மகிழ்ச்சி கொள்ள விரும்புகின்றார்களா என்ற கேள்வி தான் எனக்குள் இருக்கின்றது. பாடசாலைக் கல்வியில் ஈடுபடும் சிறார்களின் பசியைப் போக்க நடவடிக்கை எடுக்க முடியாத மோசமான நிலைமையில் அரசாங்கமொன்று இருக்க முடியாதல்லவா? அத்தகைய உணர்வு பூர்வமான விடயங்களில் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அரசாங்கத்திற்கு சிறுவர்களின் உணர்வைக் கூட புரிந்து கொள்ள முடியாத மனோநிலை தான் இருக்கின்றது.

கேள்வி:- வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு கிட்டாமைக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் காணப்படுகின்ற இழுபறிகளும் காரணமாக இருக்கின்றதல்லவா?

பதில்:- தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதென்றால் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்கின்றார்கள். தேசிய பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்பது நாட்டின் வறுமையை ஒழித்தலே ஆகும். வடமாகாணத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் மேல்மாகாணம் தமது நிதியை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்று போர்க்கொடி தூக்குவார்கள். அவ்வாறான நிலைமையொன்று எழுகின்றபோது வடமாகாணத்தில் எவ்வாறு திட்டங்களை முன்னெடுப்பது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது.

ஆகவே அதிகாரங்களை பகிர்வு அல்ல பிரச்சினை. வறுமையை ஒழிப்பதில் தான் பிரச்சினை இருக்கின்றது. பசியை போக்குவதற்கு தயாரில்லாதவர்கள் எவ்வாறு வறுமையை முழுமையாக போக்குவதற்கு முன்வருவார்கள்.

கேள்வி:- தாங்கள் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணப்பாடு உள்ளதா?

பதில்:- அரசியலில் ஈடுபடும் சிந்தனை எனக்கு இல்லை. ஆனால் அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது என்போன்றவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தயாராக இருந்தால் இணைந்த பயணத்திற்கு தயாராகவே உள்ளேன். அதேபோன்று திட்டமிடல், திறைசேரி போன்ற கட்டமைப்புக்களின் செயலாளர் பதவி அளிக்கப்பட்டால் அதனைப் பொறுப்பேற்கத் தயாராகவே உள்ளேன்.

முன்னதாக நான் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவியினை வகித்தபோது தான் வடக்கிற்கான புகையிரதபாதை அமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் வடக்கிற்கு நாற்பத்தைந்து தடவைகளுக்கு மேலாக விஜயம் செய்திருக்கின்றேன். வடக்கின் ஒவ்வொரு அங்குலத்தினையும் நன்கு அறிவேன். அங்குள்ள பிரச்சினைகளை நன்றாகவே இனங்கண்டுள்ளேன். அவை அனைத்தையும் தீர்ப்பது மிகப்பெரும் விடயமொன்றாக கருதவில்லை. அப்பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகள் உள்ளன. ஆகவே நாட்டினை மேம்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னகர்த்துவதில் எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

நேர்காணல்:- ஆர்.ராம்   – Virakesari

SHARE