பெருந்தீ-ஈழம்-பரிஸ்-இங்கொரு அறிவாலயமும் அங்கொரு தேவாலயமும்

425

ஒரு கோடை இரவு சாமத்தை அண்டிய நேரத்தில் வெகுநேரமாய் வழமைபோல கறுப்பு வெள்ளை திரைப்படக்கால என்றும் காலத்தால் அழியாத கானங்களை ரசித்துக்கொண்டிருக்கும் அந்த முதிய மாது அம்மாளாச்சி என்றபடி அதிர்ந்ததுபோல் இருந்தது திரும்பி அவர் பக்கம் பார்த்தேன். Notre-Dame de Paris பற்றி எரிந்து கொண்டிருப்பதை தொலைக்காட்சி ஒளிபரப்ப ஆரம்பித்தது.ஒரு தேவாலயம் பற்றி எரிகின்ற பெருந்தீக்கும் ஈழத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் வயோதிப மாதுவின் அம்மாளாச்சிக்கும் என்ன சம்மந்தம்.இந்த அதிர்ச்சி வார்த்தைகளின் பின்னால் ஏதோ ஒரு வலியின் வேர் இருக்கத்தான்
செய்கின்றது.இடப்பெயர்வுகளுக்கு முன் காடு வெட்டி அக்கட்டாந்தரையில் கட்டியெழுப்பப்பட்டு மண்வீட்டில் இருந்த சாமி தட்டில் ஒரு தூண்டா மணி விளக்கு இருந்தது.அதை காலையிலும் மாலையிலும் அம்மா பற்ற வைக்கும்போது அதில் தீயின் அழகிய அமைதியை நெடுநாட்களாய் கண்டேன்.இப்போது பல இடப்பெயர்வுகளுக்கு பின்னும் வலிமிகுந்த மரணங்கள் அகதிவாழ்வு பல கடந்த பின் இப்போது இணையத்தோடு முடங்கிக்கிடக்கும் எங்களுர் மனிதர்களுக்கு இடையில் அந்த நாட்களை நினைத்து அல்லாடும் வேளையில் மின்வெட்டுப்பொழுதில் ஒளிரும் மெழுகி திரியின் ஒளி அந்த தீயின் அழகிய அமைதியை மீண்டும் நினைவுபடுத்தும்.

பரிசின் ஒரு பழம்பெரும் பொக்கிசமான தேவாலயம் பற்றியெரிகின்ற காட்சியை நெஞ்சில் கைவைத்தபடியும் கண்களில் நீர் துளிர்க்கவும் நெஞ்சுபடபடக்கவும் முழந்தாளில் இருந்தபடியும் பாரிஸ் நகர மனிதர்கள் பிறகு பிரஞ்சு தேசம் கடந்து உலகின் பல மூலைகள் வரை மனிதர்கள் ஏதோ ஒரு துயரை உணர்கின்றார்கள்.ஒரு கோடி மெழுகி திரிகளின் அவலம்போல Notre-Dame de Paris தீயினால் தின்னப்பட்டுக்கொண்டிருந்தது.அப்பெருந்தீ எனக்கும் ஏதோ வகையில் சக பயணியாய் இருந்திருப்பதுபோல மனம் உணர்ந்துகொண்டிருந்தது.அத்தீக்கு என்ன பெயரிடலாம் என மனம் தவித்தக்கொண்டிருந்தது.எனது ஆதங்கங்களை அந்த சாமப்பொழுதில் கொட்டித்தள்ள யாரும் இல்லை.சிலவேளை அது ஒரு புலம்பலாயும் முடிந்துவிடும்.எனக்குள் இருந்து ஒரு காலப்பட்சி சொல்லச்சொல்கிறது எதை என்று புரியாமலும் புரிந்துமாய் எனது முகநூலை திறக்கிறேன்.அதில் 
பாரிசில் ஒரு எரிவது பல நூற்றாண்டு பழமை எனும் போது மனது வலிக்கின்றது எதையோ இந்த உலகத்திடம் மன்றாடியபடி
அந்த கோபுரம் சரிந்த விழுந்ததுபோல இருந்தது!! 
என ஒரு பதிவையிட்டேன்.ஆனாலும் எனக்குள் இன்னும் ஏதோ ஒன்று விடுபடுவதுபோலவும் பெருந்தீயின் வலியை சரியாக சொல்லவில்லைபோலவும் தவிப்பு இருந்தது.மீண்டும் அந்த பதிவை திருத்தினேன் அதில் தொடர்ந்து இப்பெருந்தீ எனக்கு முள்ளிவாயக்காலின் கடைசி நாட்களை உணர்த்துகின்றது மனம் பாரமாய் இருக்கின்றது என எழுதினேன்.எனினும் சற்று நேரத்தின் பின் அதை நீக்கினேன் ஏன் பரிசின் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தேவாலயம் தீயில் எரிந்து விழுவதை முள்ளிவாய்க்காலுக்கு முடிச்சிடவேண்டுமென நினைத்தேன்.ஆனால் இப்பெருந்தீக்கு ஒரு முடிச்சு இருக்கத்தான் செய்கிறது.இல்லையெனில் ஈழத்தவர்களையும் அவ்வளவு இலகுவில் பரிசின்தீ பற்றிக்கொள்ளாது.

Notre-Dame de Paris ன் உயரக்கோபுரம் செந்தீ நாக்குகள் இடையே சரிந்து நிலத்தில் தணலாய் விழுகின்றது.உலகம் முழுக்கத் தெரிகின்றது.அதனை சுற்றியும் பல இலட்சம் சடலங்கள்.தலைமுறை தலைமுறையாய் பிரஞ்சு சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மடிந்த மனிதர்களின் கால் தடங்களும் பிரார்த்தனைகளும் சுவர்களோடு சாய்ந்திருந்த சுவடுகளும் சடலங்களாய் ஆகின.பலகோடி உதடுகளின் பிரார்த்தனைகள் உறங்கிக்கொண்டிருந்த பெரு மண்டபத்தின் தீயின் கொடுரம் தாளாமல் வெளியேறி காற்றில் அகதிகள் ஆகின எண்ணூறு ஆண்டுகளின் பின்னர்.நினைத்துப்பார்த்தால் Notre-Dame de Paris பிரெஞ்சு தேசத்தவர்களின் ஒரு காட்சிப்படிமம்.மூதாதைகளின் தொன்ம மொழி.மரபணுக்களிலும் அதன் நம்பிக்கைகளும் பெருமைகளும் நினைவுகளும் பதியமிடப்பட்டுள்ளன.அதனால் பரிசின் இப்பெருந்தீ பெருவலிதான்.பிரெஞ்சு தேசம் வரலாற்றின் துயரச்சம்பவமாக அதை கருதுகின்றது.ஐநா செயலர் பரிசின் பெருந்தீ அச்சத்தை ஊட்டுவதாகவும் தனது துயரை பகிர்கின்றார்.யுனஸ்கோவும் மிகவும் மனம் வருந்தி நிற்கின்றது.ஒரு பிரெஞ்சு அடையாளத்தின் அழிவு உலகை ஆட்டி வைக்கும்போது அடையாளங்களின் அழிப்பின்போது எழும் வலியை அதன் நினைவுகளின் வலியை ஒரு ஈழத்தவனாலும் மிக ஆழமான பொருளோடு உணரமுடியும்.அடையாளத்தின் வலிபற்றி யுனஸ்கோவுக்கும் ஒரு ஈழத்தவனால் கூர்மையாக விளக்கமுடியும்.

முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்களில் பெருந்தீ புகை மண்டலத்தின் நடுவில் சிதறுண்டு கிடக்கும் எண்ணிக்கொள்ளமுடியாத தமிழர் பிணங்களுக்கு மத்தியில் ஒரு பனை கருகுண்டு அதன் பச்சை ஓலைகள் கிழியுண்டு கிடக்கும் காட்சி இந்த உலகத் தோரால் உணரமுடியாதுபோன பெருந்தீ பற்றிய சாட்சி.ஒரு வகையான உலகத்தின் சுயநலத்துள் இருந்து இழுத்து எடுத்து Notre-Dame de Paris ன் பெருந்தீயின் தகதகக்கும் ஒளியில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அவலத்தையும் காட்டிவிடவேண்டுமென்று அந்த நெருப்பின் முன் ஈழத்தின் ஒரு பெரும் அடையாள அழிப்பு நிகழ்ந்ததை தீயில் சரிந்துவிழும் கோபுரத்தை மேவி ஒரு பதாகையாய் பிடிக்கின்றேன்.

Notre-Dame de Paris உள்ளிட்ட பிரெஞ்சு தேசத்தின் வரலாற்று நூல் ஒன்றும் ஈழத்தில் பற்ற வைக்கப்பட்ட தீயில் கருகிக்கொண்டிருந்து.இணைய வசதிகள் இல்லாத ஒரு காலத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுதை கண்டு ஒரு ஈழத்தலை முறை கொந்தளித்துக்கொண்டிருந்த காலத்தில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன் உலகத்தின் ஒரு அறிவுக்கருவூலமாக ஈழத்தமிழர்களின் அறிவின் மொழியின் பாரம்பரியத்தின் அடையாளமாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகமும் பரிசின் தேவாலயம் பற்றி எரிந்தது போன்ற இரவில் சிங்கள இனவாதிகளால் தீவைக்கப்பட்டது.தீயை பற்றவைத்த சிங்களக்காடைகளுக்கு ஈழநிலத்தின் திக்குகள் தெரிய எரியப்போகும் அத்தீயின் வலி 2019ம் ஆண்டு Notre-Dame de Paris பற்றி எரியும்போதும் ஆறாத ரணமாக வடுவாக வலியாக கொதியாக கோபமாக தொடரும் என்பது உணராத ஒன்றாக இருந்திருக்கலாம்.இருபதாம் நுர்ற்றாண்டின் பெருந்தீ யாழ் நூலகத்தில் பற்றவைக்கப்பட்டது.எண்ணற்ற நூற்றாண்டு தொன்மைமிக்க ஓலைச்சுவடிகள் ஒரு இலட்சம் வரையான அரிய புத்தகங்கள் எனும் பொக்கிசங்கள் கருகிக்கொண்டிருந்தபோது அத்தொன்மை அடையாளத்தின் அழிவு கண்டு நெஞ்சைபிடித்தபடி இதயம் நின்று வீழ்ந்த வணக்கத்திற்குரிய சிங்கராயர் என்ற தாவீது அடிகளின் மரணத்தை கொடுத்த அடையாள அழிப்பு வலி Notre-Dame de Paris ன் பெருந்தீயின் வலியையும் விட விஞ்சி நின்றது அன்று ஈழத்தில்!

நன்றி பொன்.காந்தன்
முகநூல்

SHARE