புள்ளியாகும் தமிழினப்படுகொலை பூதமாகும் மதவாதம்-இலங்கை குண்டு வெடிப்புக்கள்-சே.பி ஈழம்

720

ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.வத்திக்கானில் பாப்பரசர் ஒன்றுக்கு இரண்டு தடவை இலங்கை குண்டு வெடிப்புக்காக வாயை திறக்கிறார்.அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டுள்ளனர்.ஐநா வின் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்ட அனைத்து நாடுகளும் கிட்டத்தட்ட இலங்கை குண்டு வெடிப்புக்கு கண்டனங்களையும் வெளியிட்டுவிட்டன.ஐநா செயலரும் ஒரு அறிக்கை விடுத்தார்.சீனாவும் டிரம்பும் தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக தொலைபேசியிலும் அறிக்கைகளிலும் முந்திக்கொண்டு நிற்கின்றன.இன்ரர் போல் சர்வதேச பொலிஸ் அதிகாரிகளும் தேவையேற்படின் தாமும் இலங்கைக்கு வரலாம் என்கிறார்கள்.அப்படியெனில் இதுவரையில் ஒரு எறும்பைக்கூட மிதித்துக் கொல்லாத புனித பூமியான இலங்கையில் உயிர்கள் குண்டு வெடிப்புக்களில் பலியெடுக்கப்பட்டனவா.உயிர்கள் பலியெடுக்கப்பட்டன என்பது என்னவோ பெருங்கவலைதான் இலங்கையில் மட்டுல்ல உலகின் எந்த மூலையில் அப்பாவி உயிர்கள் பலிஎடுக்கப்பட்டால் அது கவலைதான்.ஆனால் இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் இப்போதுள்ள உறுதிப்பட்ட தகவல்கள்படி மனித வெடிகுண்டு தாக்குதல்களை தங்களுக்கு சாதமாக்கிக்கொள்ள சில தரப்புக்கள்முந்திக்கொண்டுள்ளன.இலங்கையில் முன்பு தேவாயலயங்களுக்குள் இந்து ஆலயங்களுக்குள் குண்டுகள் வீசி மக்கள் கொல்லப்பட்டபோதும் மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் வாய்திறக்காத தரப்புக்கள் முந்திக்கொண்டு வாய்திறப்பதன் நோக்கத்தையும் சிந்தித்தே ஆகவேண்டியிருக்கின்றது.அப்போது இனவாதம் விலைப்படும் என நம்பினார்கள் இப்போது இலங்கையில் மதவாதம் நன்றே விலைப்படும் என நம்புகின்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை குண்டு வெடிப்புக்கள் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற கையோடு அதற்கு இந்து கிறிஸ்த்துவ மதவாதச்சாயத்தை சில தரப்புக்கள் அவசரமாக பூசவிளைந்தன.ஒருபடி மேலபோய் மன்னாரில் திருக்கேதீஸ்வர வளைவில் ஏற்பட்ட பிரச்சனையை இந்த குண்டு வெடிப்புக்குள் கொண்டு வந்து கலந்து சாம்பிராணியாக்க முனைந்தனர்.கொஞ்ச நேரம் செல்ல தொடர்குண்டுகள் மட்டக்களப்பிலும் கொழும்பில் பிரபலமான ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும் பரவிய பின் இந்து கிறிஸ்த்துவ ஊடல் கலைந்து அது இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியது.ஒரு புறத்தில் முள்ளிவாய்க்கால் போர் முடிந்த கடந்த பத்து வருடத்தில் அங்கு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஒரு சர்வதேச நீதியை கோரி தமிழ் மக்களின் ஒரு தரப்பு தீவிரமாக போராட அந்த மக்களுக்குள் ஒரு மதவாதத்தை விதைத்து அதை வெடிக்கவைத்துப்பார்க்க ஒரு தரப்பு ஆசைப்பட்டுக்கொண்டிருந்தன.அதற்கான ஒத்திகைகளையும் பார்க்க விளைந்தது.இன்னொரு புறத்தில் கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தணியாத நிலையில் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பனிப்போர் நிலுவையாக இருந்து கொண்டிருந்தது.இந்த நிலையில் வெடித்த குண்டுகள் சிறுபான்மை இனங்களுக்கு இடையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமது பூர்வீக நிலத்துக்காக போராடுகின்ற தமிழினத்தின் பிரச்சனையை மதவாத நெருப்புக்குள் தள்ளிவிடும் நோக்கையும் ஒரு பிரதான நோக்காகவோ அல்லது ஒரு உப நோக்காகவோ கொண்டிருக்கக்கூடும்.

இலங்கையின் குண்டு வெடிப்புக்கள் எப்போது நிகழப்போகின்றது.அதை யார் நிகழ்த்தப்போகின்றார்கள்.ஏன் நிகழ்த்தப்போகின்றார்கள் என்பது.இலங்கையின் அரசியல் உயர் மட்டங்களுக்கும் பாதுகாப்பு உயர் மட்டங்களுக்கும் தெரியும்.குண்டுகள் வெடித்த பின்னான உடன் விளைவுகள் என்ன தூர நோக்கான விளைவுகள் என்பதும் இந்தியா இலங்கை உள்ளிட்ட அரசியல் புலனாய்வு உயர் பீடங்களுக்கு நன்றே தெரிந்திருந்ததே என்பதே அதிக வாய்ப்பு.ஊடக வெளியில் மலிந்திருக்கின்ற குண்டு வெடிப்புத் தொடர்பான செய்திகளும் அதையே நிரூபிக்கின்றன.ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் முப்படைகளின் தளகர்த்தருமான மைத்திரி திருப்பதி போய் இலட்டு சாப்பிட்ட கதையையும் பின் அவர் சிங்கப்பூர் போய் உளுக்கெடுத்த கதையையும் சிந்தித்துப் பார்த்தால் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முடியும்.

முகநூல்கள் ஆய்வுச்சித்தர்கள் சொல்வது போல வல்வெட்டித்துறையில் நாதஸ்வரத்தில் ஆழக்கடலெங்கும் சோழ மகராசன் பாட்டை வாசித்தமைக்காகவும் முகநூலில் புலிகளின் படங்களை லைக் செய்தமைக்காவும் சம்மந்தப்பட்டவர்களை இனங்கண்டு விசாரணைக்கு அழைக்கும் அளவில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு உன்னிப்பான உலகின் தலைசிறந்த பயங்கரவாத ஒழிப்பு பிரிவாக இலங்கை ரிஐடி இருக்கிறபோதும்.இலங்கையில் பயங்கரவாதம் எப்பிடி முள்ளிவாய்க்காலில் ஒழிக்கபட்டது என வருடாவருடம் இலங்கை முப்படைகள் வகுப்பெடுக்க அதை வந்த சர்வதேச படை அதிகாரிகளே படித்து பயிற்சி பெற்றுப் போகின்ற நிலைமை வல்லமை உள்ள நாட்டில் எப்படி அவ்வளவு சாதாரணமாக வெடிமருந்த தற்கொலை தாக்குதல் ஒத்திகை தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை தாக்குதலுக்கான நாள் திட்டம் பயிற்சி செயன்முறைப்படுத்தல் என்பன உள்ளடங்கிய ஒரு தீவிரவாத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்க முடியும்.வேடிக்கையாய் இல்லையா.நடந்து முடிந்து குண்டுத்தாக்குதல்களுக்கு இலங்கையில் ஒரு தரப்பு அரசியல் உயர்பீடங்களின் பின்னணி என்பது குழந்தைகள் கூட உணர்;ந்து கொள்ளக்கூடிய விடயம்.இஸ்லாமியர்கள் ஒரு தரப்புள் இருக்கக்கூடிய மார்க்க வெறியை ஒரு மூன்றாம் தரப்பு பயன்படுத்திக்கொள்கின்றது.குறிப்பாக இது தற்பொழுது நடத்தப்பட்ட இலங்கை தொடர்குண்டுத்தாக்குதல்களின் விளைவாக இனி வரும் காலங்களில் வெற்றிக்கனிகள் கனிய கனிய சுவைக்க எண்ணுகின்றன.

இப்போது நாம் தமிழ் பக்கம் வருவோம் குண்டுகள் வெடித்தன கொழும்பு கொச்சிக்கடையில். கோண்டாலில் வெங்காயத்திற்கு புல்லு பிடுங்கப்போகும் பெண் அடிப்பெட்டிக்குள் கிடந்த அடையாள அட்டையை எடுத்து கையில் வைத்திருக்கிறாள்.தின்னவேலிச்சந்தியில் கறிக்கு உப்பில்லை என தூக்கி எறிந்து விட்டுப்போன சோத்துப்பார்சலை அதிரடிப்படை சூழந்து கொண்டு நிற்கின்றது.சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருக்கின்ற தமிழன் அல்லது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கின்ற தமிழர்களுக்கு சந்தேக நபர்கள் என பெயரிடப்படுகின்றார்கள்.ஏனெனில் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.இனி யாரையும் எப்போதும் கைது செய்யலாம் எத்தனை நாட்களும் வைத்து விசாரிக்கலாம்.கிளிநொச்சியில் மன்னாரில் யாழ்ப்பாணத்தில் முல்லைத்தீவில் தேவாலயங்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் மசூதிகளுக்கும் முன் அதிரடிப்படைகளும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.ஏனெனில் இலங்கையில் மதத்தீவிரவாதம் என அடையாளப்படுத்தப்படுகின்றது.இந்துக்கள் இஸ்லாமியர்களையும் கிறிஸ்த்துவர்கள் இந்துக்களையும் சந்தேகக்கண்ணுடனும் மதவெறியுடனும் பார்க்கவும் பேசவும் வைக்க வெடித்த குண்டுகள் பணியாற்றியுள்ளன.தமிழர்கள் என்ற அடையாளத்தை விடுத்து அநேகமானவர்கள் வலைத்தளங்களிலும் செய்தித்தளங்களிலும் இந்து கிறிஸ்த்துவ இஸ்லாமிய அடையாளங்களுடன் வெறியுடனும் கருத்துகளை வெளியிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை புதைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.தற்போதைய செய்தி ஒன்றின்படி திருக்கோணணமலையில் நடத்தப்படவிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழர்கள் தாங்களாகவே நிறுத்தியுள்ளார்கள்.அவசரகாலச்சட்டத்தில் ஒன்று கூடுவது திட்டமிடுவது என்பதெல்லாம் குற்றமாகும்.அவசர காலச்சட்டம் இனி எதுவரை என்பது யாருக்கும் தெரியாது.செப்.11 தாக்குதல் எங்கோ நடைபெற்றபோது வேறெங்கோ மூலையில் இருந்த ஈழத்தமிழர்களை அது எவ்வாறு பாதித்து என்பது யாவரும் அறிந்த யதார்த்தம்.ஆனால் தற்போது அதையொத்த மாதிரியாய் ஈழத்தமிழர்களின் நிலத்திலும் வாசலிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனின் அதன் தாக்கம் எவ்வாறானதான அமையும் என்பதை எதிர்வரும் காலங்கள் பதில் சொல்லும்.இத்தகைய பேராபத்துக்களை தமிழர்களில் ஒரு தரப்பு உணர்கின்ற நிலையில் இல்லை.அவர்கள் மதவாதம் என்ற விடயத்தையும் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற விடயத்தையும் இலங்கை அரசோடும் மேற்குலகோடும் சேர்ந்து பூதாகரமாக்கி தமது பூர்வீக நிலப்பிரச்சனை இனப்படுகொலை என்ற பெரும் அவலம் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தொடர்பிலான பேரேக்கம் என்பதை ஒரு சிறு புள்ளியாக்கி தமிழர்களின் பிரச்சனைகளை நீத்துப்போகச்செய்து இலங்கையில் மதத் தீவிரவாதம் என்பதை ஒரு பாரிய பிரச்சனையாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைப்பேரவையில் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையிலும் முக்;கியத்துவப்படுத்தும் நிலைக்கு ஒத்துழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுள்ள இவ்வாறானதொரு சூழலில் பொறுப்புணர்வுடன் தமிழ் மக்கள் சார்பாக கருத்துக்கூறக்கூடிய ஒருங்கிணைந்த தலைமைத்துவம் தற்பொழுது தமிழர்களிடம் இல்லையென்பது துரதிஸ்டம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்மந்தரோ மீண்டும் தீவிரவாதம் இலங்கையில் தலைதூக்கக்கூடாது என்கிறார்.அரசோடு பங்காளி அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவசர காலச்சட்டத்தின் கீழ் தமிழர் பிரதேசங்களில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற சுற்றிவளைப்புக்கள் கைதுகள் நெருக்குவாரங்கள் பற்றி எந்தவித கவலைகளும் கொண்டதாக இல்லை.இலங்கையில் இவ்வாறானதொரு கொதிநிலை இருப்பதை எப்போதும் விரும்புகின்ற நாட்டுக்கு வெளியேயான சில தரப்புக்கள் சோபாவில் அமர்ந்தபடி கைக்கணக்கில் ரூவீட் செய்து கொண்டிருக்கின்றன.வேறோ எவரோ இரண்டு தரப்புக்கு இடையான போருக்கு இலங்கை பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது.அதற்கு இலங்கைளில் ஆதாயம் தேடவிளைகின்ற அரசியல் தரப்புக்கள் தார்மீக ஆதரவு வழங்கியுள்ளன.இதில் ஈழத்தமிழர்கள் அள்ளுண்டு போகாமல் தமக்குரிய தீர்க்கப்படவேண்டிய பிரதான பிரச்சனை என்ன அதற்கான தீர்வு என்பதில் தெளிவாக இருத்தலே இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தம்.

SHARE