ஈஸ்டர் தினத்தில் இது முதல் கொடூரம் அல்ல!

85

ஈஸ்டர் பண்டிகையின் போது உலகெங்கும் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் இது முதல் தாக்குதல் அல்ல. இதற்கு முன்பே ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல்வேறு நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் யேமன் வரை இதற்கு முன்னர் தாக்குதல்கள் நடந்துள்ளன.

லாகூரில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்டரின் போது நடந்த தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ‘ஜமாத் உல் அக்ரர்’ அமைப்பு பொறுப்பேற்றது.

எகிப்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக காப்டிக் தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதலில் 48 பேர் பலியானார்கள். இதனை அடுத்து தேவாலயத்தில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இரண்டு குண்டுதாரிகள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அதில் ஒருவர் பெயர் மஹமூத் ஹசன் முபாரக் அப்துல்லா.

2016 மார்ச் மாதம் கெய்ரோவில் நடந்த தேவாலய தாக்குதலிலும் இவருக்கு தொடர்புள்ளதாக அப்போது அந்நாட்டு அரசு கூறியது.

நைஜீரியாவில் 2012 ஆம் ஆண்டு கடுனா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 38 பேர் பலியானார்கள். காரில் குண்டுகள் நிரப்பப்பட்டு இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக போகோ ஹராம் அமைப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்டது.அந்தச் சமயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ மோதல்கள் கடுனா பகுதியில் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெற்கு யேமனில் துப்பாக்கிதாரி சுட்டதில் கன்னியாஸ்திரிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அங்கு அன்னை தெரேசா ஏற்படுத்திய மிஷனில் ஊழியம் செய்தவர்களாவர்.

‘இஸ்லாமிய அரசு’ என்று கூறிக் கொள்ளும் அமைப்பு மீது இந்த தாக்குதலுக்காக குற்றஞ்சாட்டப்பட்டது.கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன. இதில் 321 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களுக்கு பின்னால் ‘என்.டி.ஜே’ எனப்படும் ‘தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு’ இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஏற்கனவே புலனாய்வுத்துறை, இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ ட்விட்டரில் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 21ஆம் திகதி பதிவிட்டிருந்தார்.

அப்படியொரு கடிதம் வந்தது உண்மைதான் என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஜித செனரத்ன குறிப்பிட்டார்.

ஆனால், இத்தாக்குதல்களை நடத்தியது என்டிஜே அமைப்புதான் என்று இலங்கை அரசு அறிவிக்கவில்லை அல்லது இதுகுறித்த எந்த விளக்கத்தையும் அந்த அமைப்பும் இதுவரை தரவில்லை.

எனினும் இத்தாக்குதல் தொடர்பாக பலரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்கள் என்டிஜே அமைப்பை சேர்ந்தவர்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

‘என்.டி.ஜே’ என்ற அமைப்பு குறித்து குறைவான தகவல்களே தெரிய வருகிறது. இதற்கு மத்தியில் இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பையும், இந்தியாவில் தமிழகத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பையும் சிலர் குழப்பிக் கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாத் பெயரையும் ஊடகங்கள் தவறாக உச்சரித்தன. தவ்ஹீத் என்றால் ‘அல்லாவே ஓர் இறை’ என்பதாகும், ஜமாத் என்றால் அரபியில் ‘குழு’ என்று அர்த்தம்.

இந்திய ஊடகங்களான அமர் உஜாலா, சி.என்.என் நியூஸ் 18 மற்றும் ‘ஜீ நியூஸ் தமிழ்நாடு’ தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக எழுதின. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கிளை இலங்கையிலும் இருப்பதாக தமது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதன் பெயர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத். என்.டி.ஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இல்லை.

பெர்னாண்டோ என்பவர் ஓர் உளவுத்துறையின் கடிதத்தை பகிர்ந்து இருந்தார். அந்தக் கடிதத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் என முகமது காசில் முகமது ஜக்ரான் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் உண்மைத் தன்மையை பரிசோதனை செய்ய இயலவில்லை.

என்.டி.ஜே முகநூல் பக்கத்தில் பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பகிரப்பட்டுள்ளன. அவர்கள் இலங்கையின் வட பகுதி மக்களை குறி வைத்து இயங்குவதாகவே தெரிகிறது. அதாவது இரத்த தானம் செய்வது, ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகிப்பதென அவர்கள் இயங்குகிறார்கள்.

ஆனால், அதேநேரம் முகமது ஜக்ரானின் காணொளியும் அதில் உள்ளது. ஆனால், அந்த அமைப்பின் ட்விட்டர் கணக்கு மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை. அதாவது எந்த இடுகையும் பகிரவில்லை.

அதிகாரிகளோ அல்லது ஊடகங்களோ என்.டி.ஜே குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.

புலனாய்வுக் கடிதத்தில் இந்த அமைப்பின் பெயர் இருப்பது இந்திய ஊடகங்களும், இலங்கை அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டவே பயன்படுத்தப்படுகிறது. இது இலங்கை அரசாங்கத்தினுள்ளும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக இந்திய புலனாய்வுத் தகவல் தெரிவித்திருந்ததாக இந்திய செய்தித்தாளான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இந்திய புலனாய்வு எச்சரிக்கையில் என்.டி.ஜே அமைப்பின் பெயர் இருந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வுத் தகவல்கள் ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு’ வந்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால், அது தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ யாரும் சுட்டிக் காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத்துறை தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டுப்பாட்டில் இருப்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜித சேனாரத்ன கூறினார்.கடந்தாண்டு இறுதியில் இருந்தே இலங்கையில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சிறந்த உறவு இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ராஜித சேனாரத்னவின் கருத்துகளுக்கு மைத்திரிபால சிறிசேன இன்னும் எதுவும் கூறவில்லை. உள்ளூர் குழுவின் வேலையாக மட்டும் இத்தாக்குதல்கள் இருக்காது என்றும் இதில் சர்வதேச குழுக்களின் தொடர்பு இருப்பதாகவும் அரசாங்கம் நம்புகிறது என்றும் சேனாரத்ன மேலும் கூறினார்.

(BBC)

SHARE