உலக கிண்ணத்தில் பங்கேற்க இலங்கை அணி இங்கிலாந்து பயணம்

214

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை அணி நேற்று செவ்வாய்க்கிழமை (7) பயணமானது.

தமது பயணத்தின் பின்னர் எட்டு நாட்கள் கொண்ட விஷேட பயிற்சி முகாம் ஒன்றில் இங்கிலாந்தின் மேர்ச்சன்ட் டெய்லர் பாடசாலையில் பங்கெடுக்கும் இலங்கை அணி, அதனை தொடர்ந்து இம்மாதம் 18 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் எடின்பேர்க் நகரில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஸ்கொட்லாந்து அணியுடன் விளையாடவிருக்கின்றது.

இந்த ஒரு நாள் தொடரின் பின்னர் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் இலங்கை அணி ஆடுகின்றது. இதில் இலங்கை, தமது முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியினை இம்மாதம் 24 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதோடு, இரண்டாவது பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி மோதுகின்றது.

இதனை அடுத்து, ஜூன் மாதம் 01 ஆம் திகதி கார்டிப் நகரில் நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள போட்டியோடு, இலங்கை அணி தனது உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பம் செய்கின்றது.

பொதுவாகவே இலங்கை அணி, ஐ.சி.சி. நடாத்தும் பல்தேச கிரிக்கெட் தொடர் ஒன்றுக்கு செல்லுவது என்றால் அதிக எதிர்பார்ப்புக்களும், மிதமிஞ்சிய ஆவலும் காணப்படும். எனினும், இலங்கைத் தீவானது உயிர்த்த ஞாயிறு கோர குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பெற்ற வடுக்களில் இருந்து மீண்டு வருவதனால் அப்படியான எதிர்பார்ப்புக்களையும், ஆவலையும் இந்த உலகக் கிண்ணத்தின் போது பார்க்க முடியாமல் இருக்கின்றது. இரண்டு வாரங்களின் முன்னர் இலங்கையின் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் என்பவற்றை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, 600 இற்கும் அதிகமானோர் காயங்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“இந்த உலகக் கிண்ணம் மிகவும் முக்கியத்துவமானது. நான் ரசிகர்கள் அனைவரையும் இப்படியான தருணங்களில் அணிக்கு பின்னர் படையெடுக்கும்படி கூறுகின்றேன். அவர்கள் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்படக்கூடிய திறமை கொண்டவர்கள். ஒரு நாடாக நாம் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க வேண்டும். அத்தோடு, ஆசீர்வாதங்களையும், தன்னம்பிக்கையும் கொடுக்க வேண்டும்” என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாந்து குறிப்பிட்டார்.

இலங்கை அணி, அண்மைக்காலமாக சர்வதேச போட்டிகளில் ஜொலிக்காது போயிருப்பினும் பலம் மிக்க அணிகளுக்கு எதிராக, கடந்த காலங்களில் உலகக் கிண்ணம் போன்ற முக்கிய தொடர்களில் சிறப்பாக செயற்பட்டிருந்தது. அதேமாதிரி இம்முறையும் இலங்கை அணி செயற்படும் பட்சத்தில், நாடு பூராகவும் உள்ள 21 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு புன்னகையை ஏற்படுத்த முடியும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி 12 ஆவது தடவையாக இடம்பெறவிருக்கும் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி கத்துக்குட்டியாகவே பங்கேற்கின்றது. அதேநேரம், கிரிக்கெட்டை தொடர்ந்து ரசிக்கும் பலர் இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் நொக் அவுட் சுற்றுக்கு தெரிவாகுவது சந்தேகமே எனவும் கூறிவருகின்றனர். அத்தோடு, இந்த உலகக் கிண்ணத் தொடரில் வயது அடிப்படையில் முதிர்ச்சியான வீரர்கள் பலரை கொண்ட குழாத்தை இலங்கை அணியே வைத்திருக்கின்றது. உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்தினை சேர்ந்த வீரர் ஒருவரின் சராசரி வயது 29.9 வருடங்களாகும்.

நிலைமைகள் இப்படி இருக்கின்ற போதிலும் இலங்கை அணி, கடந்த இரண்டு தசாப்தங்களிலும் உலகக் கிண்ணத் தொடர்களில் சிறப்பாகவே செயற்பட்டிருக்கின்றது. அதன்படி, இலங்கை அணி கடைசியாக இடம்பெற்ற நான்கு உலகக் கிண்ணத் தொடர்களிலும் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை அணி, இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் 9 ஆம் இடத்தில் இருந்தவாறே பங்கெடுக்கப் போகின்றது. இலங்கை அணி, ஐ.சி.சி. ஒரு நாள் அணிகளின் தரவரிசையில் காட்டிய மிக மோசமான தரநிலை இதுவாகும். ஆனால் உலகக் கிண்ணம் என்று வரும் போது தரநிலை எதுவும் செல்வாக்கு செலுத்தாது. அழுத்தங்களை கையாள்கின்ற திறனும், வெற்றிகளை தக்கவைக்கும் ஆற்றலுமே கைகொடுக்கும்.

“நாங்கள் உலகக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கப்படும் அணியாக இருக்கின்றேமோ அல்லது இல்லையோ நாங்கள் ஒரே மாதிரியாகவே தயராகியிருக்கின்றோம். போட்டித்திட்டங்கள் சரியான முறையில் செயற்படுத்தப்படும் எனில், அதற்கான போதிய திறமை அணியிடம் இருக்கின்றது, எங்களுக்கு நீண்ட வழி ஒன்றில் பயணிக்க இருக்கின்றது” என இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க குறிப்பிட்டிருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களிலும் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் பதிவுகள் சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை. 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து 23 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, அதில் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளில் ஐந்து அணிகளுக்கு எதிராக மட்டுமே வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றது. இதேவேளை, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன உட்பட, இம்முறைக்கான உலகக் கிண்ணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இலங்கை குழாத்தின் மூன்றில் ஒரு பகுதி வீரர்கள் கடந்த இரண்டு வருடங்களிலும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் உலகக் கிண்ணம் போன்ற கிரிக்கெட் தொடர்கள் வித்தியாசமானவை என்பதால் அவற்றில் எதுவும் நடைபெற வாய்ப்புக்கள் உண்டு. எனவே, எது நடந்தாலும் இலங்கை மக்கள் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கும், இலங்கை அணிக்கும் தமது முழு ஆதரவினையும் வழங்க வேண்டும்.

“நான் சிரேஷ்ட வீரர்கள் உள்ளடங்கலாக அணியிடமிருந்து போதுமான ஆதரவினை பெற்றதாக நம்புகின்றேன். நாங்கள் முயற்சி செய்து எங்களது சிறந்தது எதுவோ அதனை உலகக் கிண்ணத் தொடரில் காட்டுவோம். மிக முக்கியமான விடயம் என்னவெனில், எமது ரசிகர்கள் எம்மில் நம்பிக்கை வைத்திருப்பதோடு, முழு மனதுடன் தங்களது ஆதரவினையும் தருகின்றனர்” என இலங்கை அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன கூறியிருந்தார்.

இலங்கை அணியிடம் இருந்து அற்புதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களால், இந்த உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளில் சாதிக்க முடியும் எனில், நொக் அவுட் சுற்றிலும் தமது எதிரணிகளை சிறப்பாக எதிர் கொண்டு சிறந்த அடைவினை பெற முடியும் என்பதே நிதர்சனம்.

SHARE