வடகொரிய சரக்கு கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

74

வடகொரியாவின் சரக்கு கப்பலொன்றை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சர்வதேச தடைகளை மீறி சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்து சென்ற நிலையில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

தடைகளை மீறிய குற்றச்சாட்டில் வடகொரிய கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இரு குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா நேற்று சோதனையிட்டிருந்தது. ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது சோதனையாக இது அமைந்திருந்தது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளால் பல உலக நாடுகள் அதிருப்தியடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். எனினும், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஏவுகணை சோதனையானது ட்ரம்பின் பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் செயற்பாடாகும் என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான எவ்வித அறிகுறிகளும் வொஷிங்டன் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE