மே18 தமிழினப்படுகொலை நாள்

100

மே18 உலகத்தின் தொல்குடிகளான தமிழர்கள் அவர்களது பூர்வீக தாயகமான ஈழத்தில் சிறீலங்கா பௌத்த பேரின அரச பயங்கரவாதத்தால் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட பெருந்துயர்நாள்.2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பேரினவாத அரசாங்கத்தின் அன்றைய ஆட்சியாளர் மகிந்தராஜ பக்சவின் தலைமையின் கீழ் முப்படைகளால் சர்வதேசத்தின் படைபல உதவியுடன் கொன்றொழிக்கப்பட்டனர்.

இந்த மாபெரும் இன அழிப்பின் போது ஏதுமறியாத ஈழத்தின் எதிர்கால சந்ததிகளான குழந்தைகளும் கர்;ப்பிணிகளும் கூட ஈவு இரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர்.வன்னிப்பெரு நிலத்தின் வாழ்ந்த மக்கள் சிங்கள பேரினவாத படைகளால் முள்ளிவாய்க்கால் நோக்கி அகதிகளாக துரத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் வைத்து சர்வதேச போர் விதிமுறைகளை மீறிய வகையில் இரசாயன குண்டுகளாலும் கொத்துக்குண்டுகளாலும் கொன்றொழிக்கப்பட்டனர்.

இந்த மனித பேரவலத்தை நடத்திய சிறீலங்கா பேரினவாதத்தின் போர் நடவடிக்கையின்போது முள்ளிவாய்க்காலில் குறுகிய நிலப்பரப்புள் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மருத்துவ வசதியின்றியும் உணவு இன்றியும் குடி நீர் இன்றியும் பெரும் அவலத்தை சுமந்து இருந்தனர்.தமது தாயக மண்ணின் உரிமைக்காகவும் தன்னாட்சி கோரிக்கைக்காகவும் போராடிய தமிழினம் சர்வதேசத்தின் ஆதவுடன் சிறீலங்காப்பேரினவாதத்தால் இனப்படுகொலைக்குஉள்ளாக்கப்பட்டது.இன்றுடன் அந்த இனப்படுகொலையின் ஆறாத ரணத்துக்கு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த பத்து ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் தமக்கு சிங்களப்பேரினவாதத்தால் முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்காக ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடிவருகின்றனர்.போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளையும் பெண்களையும் சுட்டும் பாலியல்வன்புணர்வுக்கு உட்படுத்தியும் கொன்ற இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும்படி ஈழத்தமிழினம் போராடிவருகின்றது.ஆனால் இன்றுவரை சிங்களப்பேரினவாத அரசாங்கமும் சர்வதேசமும் கூட இனப்படுகொலை பேரவலத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழினத்துக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக ஏமாற்றங்களையே கொடுத்துவருகின்றது.

ஆனாலும் இந்த பத்து ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்தின் உறவுகளான தமிழ் மக்கள் மக்கள் பிரதிநிதிகள் ஒரு சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற ஒன்று திரண்டு பலம் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டு உதிரிகளாக நீதி கோரும் நிலையே காணப்படுகின்றது.மிகப்பெரும் அர்ப்பணிப்பை முள்ளிவாய்க்கால்வரையில் ஈழத்தமிழர்களும் போராளிகளும் தந்திருந்தபோதும் அதை பெரும் ராஜதந்திர பலமாக மாற்றமுடியாத கையறு நிலையில் இந்த பத்து ஆண்டுகளில் முடிவில் ஈழத்தமிழினம் இருப்பதையே காலம் கற்றுத்தந்திருக்கின்றது.

மிக முக்கியமாக ஈழத்தமிழர்களுக்கு இடையிலும் தமிழர்களுக்கு இடையிலும் காணப்படுகின்ற ஒற்றுமை இன்மை தொடர்ந்து விடுதலைக்கான பயணத்தில் பின்னடைவுகளையே கொடுத்துவருகின்ற நிலை காணப்படுகின்றது.எனவே முள்ளிவாய்க்கால் நினைவின் இந்த பத்தாம் ஆண்டில் தமிழர்கள் தம்மை ஒரு தடவை மறுபரீசீலனைக்கு உட்படுத்தி இனி அடுத்த அடிகளை எடுத்து வைக்கும்போது ஒருமித்த பலத்தை வெளிப்படுத்தக்கூடிய ராஜதந்திர போக்கை ஒருங்கிணைத்து உருவாக்கி கொள்ளவேண்டியது காலத்தினுடைய கடமையாகின்றது.

SHARE