ரிஷாட்டிற்கு எதிரான பிரேரணை குறித்த விவாதம் – சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

86

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்திற்கான திகதி நாளை அறிவிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் திகதி அறிவிக்கப்படும். ஆனால் எம்மை அச்சுறுத்தி திகதியை பெற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் உரையை தொடர்ந்து சபாநாயர் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, ”நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக இவ்வளவு நேரம் விவாதிப்பது இதுவே முதல் தடவையாகும்.

இது ஒரு போராட்டமாக உருமாறும் முன்னர் பிரேரணை குறித்த விவாதத்திற்கு திகதியை அறிவியுங்கள். இன்றே கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இது தொடர்பான தீர்மானத்தை அறிவியுங்கள்.

நாடாளுமன்றம் விரைந்து உரிய முடிவு எடுக்காவிடின், மக்கள் இவ்விடயத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகிவிடும்” எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், நாளைய தினமே கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறும் என்றும், எனவே நாளை தினமே திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்போது, எதிர்க்கட்சியினர் பெரும் கூச்சலிட்ட நிலையில், அச்சுறுத்தலின் மூலம் எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து நாடாளுமன்றம் நாளைய தினம் காலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

SHARE