உலகக்கிண்ண தொடர்: முதல் போட்டியின் வெற்றி தோல்வி குறித்து அணித்தலைவர்கள் கருத்து!

145

உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, தொடரை வெற்றிக் கணக்குடன் தொடங்கியுள்ளது.

நேற்று கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணியை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணி, 104 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் தனது வெற்றிக் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன்,

‘உண்மையில் பென் ஸ்டோக்கஸின் திறமையை கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டேன். எங்களுக்கு இந்த நாளை அவர் உணர வைத்தது மாத்திரமின்றி, அவருடைய அந்த அபார பிடியெடுப்பு முற்றிலும் சிறப்பாக இருந்தது. எனவே அணியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்ற அவரைப் போன்றதொரு போட்டித் தன்மை மிக்க வெற்றி நாயகன் அணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எமது பந்துவீச்சாளர்கள் உண்மையில் ஒரு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொள்ளாவிட்டாலும், முதல் இன்னிங்ஸில் இருந்து கற்றுக் கொண்டதை பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் சரியான முறையில் பயன்படுத்தியிருந்தனர்.

இதுபோன்ற மந்தமான ஆடுகளத்தில் ஜொப்ரா ஆச்சர் துல்லியமாகவும், வேகமாகவும் பந்துவீசியிருந்தது பாராட்டத்தக்கது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருவது அற்புதமான விடயம். அதுதான் நாங்கள் எப்போதும் முன்னேற்றம் அடைவதற்கு முயன்ற பகுதியாகும். அத்துடன், போட்டியை வெற்றி கொள்வதற்கு களத்தடுப்பிலும் நாங்கள் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும்.

இங்கிலாந்து அணி வீரர்கள் வெளிப்படுத்திய இந்த திறமையானது கடந்த இரண்டு வருடங்களாக வெளிப்படுத்திய முயற்சியை காட்டுகிறது. இந்த போட்டித் தொடரில் வெற்றியுடன் முன்னோக்கிச் செல்வது மிகவும் மகிழ்ச்சி. அதேபோல, திருப்தியையும், ஆறுதலையும் கொடுத்துள்ளது. நாங்கள் இப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தோம்.

ஆனால் இந்த ஆடுகளம் எமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கவில்லை. நாங்கள் கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளவே முயற்சி செய்தோம். ஆனால் நாங்கள் விளையாடிய விதம், எமது வீரர்களின் அனுபவம் மற்றும் கடந்த 2 வருடங்களாக எமது அணி செய்த முயற்சியின் பிரதிபலன் என்பன இந்தப் போட்டியின் வெற்றியில் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டது’ என கூறினார்.

இதனைதொடர்ந்து தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டு பிளெஸில் இப்போட்டியின் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கையில்,

‘312 ஓட்டங்களை துரத்தியடிக்கும் போது சிறந்ததொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக ஹஷிம் அம்லாவுக்கு தலையில் பந்து தாக்கி மைதானத்தில் இருந்து வெளியேற நேரிட்டது. முதல் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டால் தான் உடைமாற்றும் அறையில் இருக்கின்ற வீரர்கள் உத்வேகத்துடன் அடுத்தடுத்து வந்து விளையாடுவார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே ஹஷிம் அம்லா மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு எய்டன் மார்கன், மற்றும் நானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தோம்.

எனவே ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினால் அடுத்து வரும் வீரர்களுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு கடினமாக இருக்கும். அப்போது வெற்றி இலக்கும் மிகப் பெரியதாக இருக்கும். எனவே அந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாக அமையும்.

எனவே இப்போட்டியில் இங்கிலாந்து அணி எம்மைவிட சிறப்பாக விளையாடியிருந்தனர். உலகின் தலைசிறந்த ஒருநாள் அணியென்பதை நிரூபித்துக் காட்டினார்கள். எனவே இதுவொரு லீக் போட்டியாகும். எனவே எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்’ என கூறினார்

SHARE