பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம்கள் மட்டும் எதிர்கொள்ளவில்லை – மஹிந்த

51

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம்கள் மட்டும் எதிர்கொள்ளவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது சிங்களவர்களும் விடுதலை புலிகளின் காலத்தில் தமிழ் மக்களும் இவற்றை எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்ததாவது, “ஜே.வி.பி. பயங்கரவாதிகள் இருந்த காலத்தில் சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளும் ஆலயங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அவ்வாறே விடுதலை புலிகள் காலத்தில் தமிழர்களின் வீடுகள் மட்டுமன்றி இந்துக் கோவில்களிலும் சோதனை செய்யப்பட்டது.

அந்தவகையில் தற்போது தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முஸ்லிம் மக்களின் வீடுகள் பள்ளிவாசல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் நசுக்க முடியும் என யாராவது கூறுவார்களாயின் அது உண்மைக்கு புறம்பானது.

மத அடிப்படையிலான பயங்கரவாதமானது இலங்கைக்கு ஒரு புதிய விடயமாக இருக்கலாம், ஆனால் இது அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் மிகவும் நன்கு அறியப்பட்ட அச்சுறுத்தலாகும்.

உலகில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதிகள். இந்தோனேசியா, மலேசியா, ஓமான், டுபாய் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் நாம் வாழ்கின்ற சாதாரண வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இலங்கையை பொறுத்தவரையில், மத பயங்கரவாதமானது உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரிய எதிரியாகும். முஸ்லிம் நாடுகளை அழிக்க ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திய முக்கிய கருவியாக காணப்படுகின்றது.

நான் தலைமையேற்கும் அரசாங்கத்தில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமில்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்

SHARE