என்று தணியும் இந்த நீதியின் வேட்கை-மனித நேயப்போராளி கஜன் பற்றிய ஐபிசி சிறப்பிதழ் குறிப்புக்கள்

411

ஐரோப்பா-கனேடிய ஐபிசி பத்திரிகை தனது சிறப்பு பக்கமொன்றில் பிரான்ஸ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் பற்றி குறிப்புக்களை என்று தணியும் இந்த நீதியின் வேட்கை என்ற தலைப்பில் அகரதனின் எழுத்துக்களில் பகிர்ந்துள்ளது.அந்த குறிப்புக்களின் ஆரம்பத்தில்

பெத்த தாயையும் பிறந்த மண்ணையும் நேசிக்க மீசை முளைக்கத்தேவையில்லை என்பர்.அவ்வாறு மீசை அரும்பிய தனது 15வது இளம் பருவத்தில் தேச விடுதலைக்கான பயணத்தின் தன்னை இணைத்துக்கொண்டவர்.இன்று அந்தப்பயணம் ஜெனிவா முன்றலில் நிற்கின்றது.
வெண்முடி ஆங்காங்கே அரும்பிய தனது 49வது வயதிலும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றார் கஜன் என்று குறிப்புக்கள் நீள்கின்றது.

என்று தணியும் இந்த நீதியின் வேட்கை ? 

‘பெத்த தாயையும், பிறந்த மண்ணையும் நேசிக்க மீசை முளைக்கத் தேவையில்லை’ என்பர். அவ்வாறு மீசை அரும்பிய தனது 15வது இளம்பராயத்தில், தேச விடுதலையில் இணைத்துக் கொண்ட இவரது பயணம், தற்போது ஜெனீவா முன்றலில் நிற்கின்றது.

வெண்முடி ஆங்காங்கே அரும்பிய தனது 49வது வயதிலும், நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்.
கஜன். மனித உரிமைச்செயற்பாட்டாளர் இவரது அடையாளம். பிரான்சை வசிப்பிடமாக கொண்டவர்.
2009 ஆயுத மோதல்களின் முடிவுக்கு பின்னராக, இறுதிப்போரில் நடந்தேறிய இனப்படுகொலைக்கான பரிகாரநீதிக்கு யாரின் கதவைத் தட்டுவது என்ற கேள்வி.

ஐ.நா மனித உரிசை;சபையே இதற்கான வாயில்களில் ஒன்றாக இருந்த நிலையில், 2011ம் ஆண்டு பிரான்சில் இருந்து ஜெனீவா-ஐ.நா முன்றல் வரை நீண்டதொரு நடைப்பயணத்தினைத் தொடங்கியவர், இன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் ஒவ்வொரு கூட்டத் தொடர்களின் போது, தமிழினப்படுக்கொலையின் சாட்சியங்களாக விளங்கும் ஒளிப்படங்களுடன் முன்றலில் நீதிகோரி நிற்கின்றார்.

ஐ.நா முன்றல் நீதிக்கான உலக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் ஒலிக்கின்ற இடம். ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனங்களும் ஒவ்வொரு கூட்டத் தொடர்களின் போது தமக்கான நீதிக்கும், உரிமைகளுக்காகவும் அணிதிரளுகின்ற இடம்.

கஜனின் கண்காட்சி முன்றலின் ஒரு புறத்தில் அமைந்திருக்க, தமிழினப்படுகொலையினை புரிந்த சிங்கள அரசதரப்பு ஆதரவாளர்களும், அரச பயங்கரவாதத்துக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருப்பார்கள்.
இதுவே இந்த முன்றலின் முரண்நகை.

2013ம் மார்ச் கூட்டத் தொடரின் போது தொடங்கிய கஜனின் காட்சிப்படுத்தல், இதுவரை தொடர்சியாக  20 தடவை ஐ.நா முன்றலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்சின் பல்வேறு நகரங்களில் வைக்கப்பட்டு வருகின்றது. சுவிசின் பல நகரங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

குளிரும், மழையும், வெயிலும் மட்டுமல்ல பல வேளைகளில் தனிமையும் கஜனோடு இருக்கும். ஒரு வகையில் இது தனியொரு மனிதனின் தொடர்போராட்டமாகவே தோன்றும்.

ஆள்வளமும், நிதி வளமும் தனக்குள்ள பெரும் சவாலென தெரிவிக்கும் கஜனுக்கு மற்றவர்கள் போல் மனைவி, பிள்கைள் என்று குடும்பம் உண்டு.

நண்பர்கள், சில வர்த்தகர்களது உதவியுடன் நீதிக்கான தனது பயணத்துக்கான நிதித்தேவைகளை நிவர்த்தி செய்வதாக குறிப்பிடும் இவர், ஒரு கொடை வள்ளலின் உதவியால் நீதி கோரும் ஒளிப்படங்களை காவிச் செல்வதற்கான ஊர்த்தியை வாங்க முடிந்ததாக குறிப்பிடுகின்றார்.

தமிழினப்படுகொலைக்கான நீதிகோரும் வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ஊர்த்தி ஐ.நா முன்றலை நோக்கிய தனது 21வது பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.

உலக நீதியின் கதவுகள் அத்தனை இலகுவில் திறப்பதில்லை. காரணம் பூட்டப்பட்டிருக்கும் கதவுகளின் திறப்புக்களை வல்லாதிக்க அரசுகள் தமது பொக்கெற்றுகளுக்குள் வைத்திருக்கின்றன. தேவை வரும் போது மட்டும் திறப்பார்கள். அவ்வாறு தமக்கான நீதியின் கதவுகள் திறக்கும் என காத்திருந்து கரைந்து போகாமல், ஓயாது ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்போராட்டத்தின் ஒரு வடிவமாக கஜன் காட்சிப்படுத்தலும் அமைகின்றது.

போரே வாழ்வாகி, வாழ்வே போராகிக் போன ஈழத்தமிழ் மக்களின் சாட்சியங்களாகவும் இவைகள் அமைகின்றன.

– அகரதன்

நன்றி ஐரோப்பா-கனேடிய ஐபிசி பத்திரிகை

SHARE