போரை வழி நடாத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் குற்றச்சாட்டு.

68

போரை வழி நடாத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் குற்றச்சாட்டு. போரை வழி நடாத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகின்றார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில்  850வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உண்ணாவிரத போராட்ட கொட்டகையில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,ஐநா பாதுகாப்பு சபையில் முக்கியமான தீர்மானம் ஒன்று

நிறைவேற்றப்பட்டுள்ளமையை  கருத்திற்கொண்டு புதிதாக இணைத்தலைவிகள் மூவரை தெரிவு செய்துள்ளோம். மேலும் வடக்கு, கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தை சேர்ந்த தலைவர்கள் அந்தணர்கள் பங்கு பற்றுகின்ற யாகம்  ஒன்றினை  28ம் திகதி நடாத்த தீர்மானிதுள்ளோம். குறிப்பாக தமிழர்களின் தீர்வுக்காகவும் காணாமல் போன உறவுகளிற்கு  கிடைத்த முதல் வெற்றியினை தக்க வைப்பதற்காகவும்  யாகம் மற்றும் பயனையும் இடம்பெறவுள்ளது. 28ம் திகதி காலை   9.00 மணியில் இருந்து 11.30 மணி  வரை யாகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தாய்மார்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.


நாங்கள் இவ் யாகத்திற்கு எந்த ஒரு அரசியல்வாதியையும்  அழைக்கவில்லை ஏனெனில் இது ஒரு ஆன்மீக நிகழ்வு. இது ஒரு ஆன்மீக ஆத்ம பலத்திற்கான நிகழ்வாக மட்டும் இருப்பதனால் தமிழர்களாக இதில் யாரும் கலந்து கொள்ளலாம். அதற்கு எமக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்தார். 
இதன்போது தற்போதைய சூழலை பயன்படுத்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுவிட முடியும் என கூறப்பட்டு வரும் நிலையில் தாங்களது பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என எண்ணுகின்றீர்களா என ஊடகவியலாளரொருவரால் கேட்கப்பட்டபோது,
எமது போராட்ட ஆரம்ப காலத்திலே தமிழ் தேசிய  கூட்டமைப்பு தமிழர்களுக்கான தீர்வை பெற்றுத்தராது என்று கூறியிருந்தோம். குறிப்பாக எமது போராட்டம் ஆரம்பிக்கும் போதே அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சம்மந்தரின் உருவ பொம்மையை எரித்துதான் எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்து விடும் தவறுகளையும் வெளிப்படுத்தியிருந்திருக்கின்றோம். 
அண்மையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடாத்திய தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று ஒரு உரையாற்றியிருந்தார். இவ்வுரையானது தமிழர்களிடையேயும், சமுக வலைத்தளங்களிலேயும் ஒரு கேலிக்குரிய விடயமாக நகைச்சுவையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களிற்கான உண்மையான தீர்வாக அமையும் என தெரிவித்தார்.

SHARE