மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்!

55

பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர்.

அதற்கமைய அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்று (புதன்கிழமை) மீண்டும் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர்கள் இன்று தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

நாட்டில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தாக்குதல்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் , ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

அத்தோடு, அவர்களை பதவி விலக்குமாறு பலராலும் வலியுறுத்தி ரத்ன தேரர் உட்பட பலர் முன்னெடுத்த போராட்டத்தை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் ஆளுநர்கள் உட்பட முஸ்லிம் தலைமைகள் 9 பேர், முஸ்லிம் மக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

அதன் பின்னர் மீண்டும் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்களும் ஐக்கிய தேசிய கட்சியினரும் வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை மீண்டும் அமைச்சு பதவியை ஏற்பது குறித்து நேற்று முஸ்லிம் தலைமைகளின் கூட்டமும் இடம்பெற்றது. எனினும் அந்தக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை எனக் கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் இன்று ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE