பௌத்த பேரினவாதத்தின் கபட நோக்கத்திற்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் பலியாக கூடாது-கஜன்

561


ஐநா சபையின் மனித உரிமைப்பேரவையின் 41வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் ஏழாவது ஆண்டாக இக்கூட்டத்தொடரின் போதும் சிறீலங்கா அரசாங்கங்களால் திட்டமிட்டு கடந்த எழுபது ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதாரமான நிழற்படங்களை ஜெனிவா முருகதாசன் திடலில் பார்வைக்கு வைத்துள்ளார்.நேரடியாக அங்கு நின்று பார்க்கவரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஈழத்தில் சிங்களப்பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைத்து வரும் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் அங்கு கருத்து தெரிவிக்கும் போது

கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் இந்த ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் முன்னே ஈழத்தில் எமது உறவுகளுக்கு காலம்காலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலை நிழற்பட சாட்சியங்களை வைத்து சர்வதேச நீதியை கோரிவருகின்றோம்.ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை.நீதி மறுக்கப்படவும் இல்லை.தாமதித்தே செல்கின்றது.எனவே நாம் தொடர்ந்து போராடியே ஆகவேண்டியவர்களாக இருக்கின்றோம்.என்றோ ஒருநாள் ஈழத்தமிழருக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சர்வதேசத்தில் நாம் தொடர்ந்து போராடுவோம்.இன்றைக்கும் கூட சிங்கள பௌத்த பேரினவாதம் ஈழத்தமிழினத்தை அடக்குமுறைக்குள்ளும் நீதி மறுப்புக்குள்ளும் வைத்துள்ளது.அது மட்டுமன்றி தமிழனின் ஜனநாயக பலத்தை சிதைப்பதற்கு கபட நாடகங்களை நடத்திவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களுக்குப் பிறக்கு முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கு ஒடுக்கி அழிக்கும் நடவடிக்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் கங்கணம் கட்டி நிற்கின்றது.இதற்கு தமிழர்களை பயன்படுத்த சிங்களப் பேரினவாதம் நினைக்கின்றது.காலம் காலமாக சிங்களப்பேரினவாதத்தின் ஏவலாளர்களாக மாறி தமிழினத்துக்கு கொடுமைகளை தந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் இடைவெளி குரோதத்தை பயன்படுத்தி தமிழர்களை இப்பொழுது முசுலிம்களுக்கு எதிராக போராட பகடைக்காயாக்க சிங்களப்பேரினவாதம் முனைவதை கிழக்கு மாகாண தமிழர்களும் முஸ்லிம்களும் விளங்கிக்கொள்ளவேண்டும்.மதங்களால் வேறுபட்டு இருந்தாலும் முஸ்லிம்களும் தமிழர்களும் மொத்தமாக வடக்கு கிழக்கு தமிழர் நிலத்தின் உரித்துக்காரர்கள்.எப்போதுமே வடக்கு கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம்களை பௌத்த பேரினவாதம் தங்கள் பக்கம் வளைத்து பதவிகளையும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுத்து தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது.தமிழினப்படுகொலையில் முஸ்லிம்களும் பங்காளிகளாக இருந்தனர்.இப்போது தமிழர்களின் போராட்டத்தை முசுலிம்களையும் பயன்படுத்தி ஒடுக்கிய சிங்கள பேரினவாதம் இப்போது முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்தை ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை பயன்படுத்தி ஆரம்பித்துள்ளது.அதில் ஒன்றாகவே கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்கு உண்ணாவிரதத்தில் இறங்கினார்.அதன் பின்னணியில் கருணா மற்றும் மகிந்த ராஜபக்சவின் குழுக்கள் பௌத்த பேரினவாத பிக்குகள் இருந்தனர்.இந்த பிக்குகள் ஒருபோதும் தமிழர்களின் தேசிய உரிமைப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழர்களுக்கு சார்பாக உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை.எனவே சிங்கள பேரினவாதம் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழர்களுக்கு பொது எதிரி என்பதை விளங்கிக்கொண்டு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைக்கு முயலவேண்டும் என கஜன் தெரிவித்தார்.