மில்லரின் களத்தில் இன்னும் சில தியாகங்கள்- விதானை கஜனின் அனுபவப்பகிர்வு

581

மில்லரின் களத்தில் இன்னும் சில தியாகங்கள்- விதானை கஜனின் அனுபவப்பகிர்வு

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் மட்டுமல்ல தமிழர்களின் பல ஆயிரம் ஆண்டுகால வரலாற்றிலும் யூலை 5 ஒரு சரித்திரநாள்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் மொழிந்ததுபோல சத்தியத்துக்காக சாகத்துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனித பிறவியும் சரித்திரத்தை படைக்க முடியும் என்பதை கரும்புலி கப்டன் மில்லரின் வீரம்செறிந்த அந்த சரித்திரப்பிறப்பு
சொல்கின்றது.

1986-1987ம் ஆண்டு சிறீலங்கா படைகள் வடமராட்சியை கைப்பற்ற ஒரு பாரிய மும்முனை படையெடுப்பை மேற்கொண்டபோது அதை மிகச்சொற்பமான போராளிகளை கொண்டிருந்த புலிகள் இயக்கம் வீரத்துடன் எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நெல்லியடியை சிறீலங்கா படைகள் கைப்பற்றி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டபோது ஒரு தடைநீக்கும் திருப்பு முனைதாக்குதலுக்கு தலைவர் பிரபாகரன் தளபதிகளுடன் திட்டமிட்ட வேளை அத்தாக்குதலை நடத்தப்போகும் ஆச்சரிய பெருவீரன் மில்லரையும் கரும்புலி என்ற வடிவத்தையும் தமிழர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் யூலை 5ம் நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு புல்லரிப்பு நாளாக மில்லரால் மாறியது.அதே வேளை சிறீலங்காப் படைகளுக்கும் அதன் பேரினவாத அரச இயந்திரத்துக்கும் பாரிய மீளமுடியாத அதிர்ச்சி ஏற்பட்டது.எதிரிகள் புலிகள் முன் தடுமாறிப்போய் நின்றார்கள்.முற்றுகை நடத்த வந்தவர்கள் முற்றுகைக்குள் வீழ்ந்த பேராபத்தை சிறீலங்கா படைகள் மட்டுமல்ல ஈழப்போரை அவதானித்து வந்த இந்தியாவும் உணர்ந்தது.நெல்லியடி சிறீலங்காப்படை முகாம் கரும்புலி மில்லரின் கரும்புலித்தாக்குதலை மையப்படுத்திய தாக்குதலால் நிர்மூலமாக்கப்பட்டது.

கரும்புலித்தாக்குதல் நடந்த வேளை நெல்லியடி இராணுவ முகாமுக்குள் சம நேரத்தில் போராளிகளின் அணிகள் தாக்குதலை நடத்தியபடி  உள்நுழைகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் முகாமின் உள்ளே அமைந்திருந்த உயரமான தண்ணீர் தாங்கியில் அமைந்திருந்த சிறீலங்காப்படையின் காவலரணில் இருந்து சன்னங்கள் பாய்ந்து கொண்டிருந்தது.

அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிடம் அதாவது எம்மிடம் பற்றாக்குறையாக அருமையாக இருந்த ஏ .கே.எல் .
எம் . ஜி கனரக துப்பாக்கியோடுதான் அந்த தண்ணீர்தாங்கி காவலரணில்  சிறீலங்காப் படைச்சிப்பாய்கள் உள்ளார்கள் என்பதை அங்கிருந்து வரும் சன்னங்களில் இருந்து போராளிகள் உணர்ந்து கொண்டனர்.

ஆனால் அங்கே எத்தனை சிப்பாய்கள் உள்ளனர் என்பதை அறிய முடியாத நிலை இருந்தது.எனவே முகாமை நிர்மூலமாக்கி படையினரின் ஆயுதங்களை கைப்பற்றி எடுத்துக்கொண்டு குறுகிய நேரத்திலேயே வெளியேற வேண்டியநிலையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தால்.

மிகவிரைவாக உயரமான தண்ணீர்தாங்கியில் இருக்கும் சிறீலங்காப்படை காவலரணை கைப்பற்றி அதில் இருக்கும் ஏ .கே எல்
எம் ஜி துப்பாக்கியையும் எடுக்கவேண்டிய நிலையில் களம் இருந்தபோது மேஜர் கமலும் வின்சனும் படைச்சிப்பாய்கள் தாக்குதல் நடத்தியபடி இருந்த தண்ணீர்தாங்கி காவலரணை நோக்கி மிகவும் காப்பற்ற நிலையில் ஏறி மேலே அடைந்த பின் அங்கு வேட்டுச்சத்தங்கள் சரமாரியாக கேட்டன.பிறகு அங்கு காயமடைந்த முனகலும் எழுந்தது.கமலும் வின்சனும் திரும்பிவராத சூழல் அங்கு அவர்கள்  காயமுற்றும் வீரச்சாவடைந்தும் இருந்த நிலையை களநிலை உணர்த்தியது.இறுதியில் அந்த தண்ணீர்தாங்கி காவலரண் அப்போது எம்மால் பன்றிக்குட்டி என்றழைக்கப்பட்ட வெடிமருந்தால் வெடிவைத்து தகர்க்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது.

மில்லரின் சரித்திரக்களத்தில் மேஜர் கமலும் வீரவேங்கை வின்சன் ஆகியோரின் தியாகங்களும் நிறைந்து கிடக்கின்றன.

வின்சன் என்ற போராளியோடு எனக்கு பாசறையிலும் களமுனை யிலும் நெருங்கிப்பழகும் வாய்ப்பு இருந்தது.வின்சன் நெடுங்கேணியை சேர்ந்தவர்.அவர் 1986ல் தமிழீழத்தில் பொலிகண்டிப்பகுதியில் அமைந்திருந்த கலிபோர்னியா முகாம் என சங்கேதத்தில் அழைக்கப்பட்ட கொமோண்டோ பாசறையில் பயிற்சி பெற்றிருந்தார்.அதன் பிறகு கிளிநொச்சி சிறீலங்கா படைமுகாமை சுற்றிய காவலரண்களில் நின்றிருந்தார்.

அந்த நேரத்தில் சொற்பமான போராளிளே இருந்தனர்.எனவே இருக்கின்ற போராளிகளை வைத்துக்கொண்டு தமிழீழத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினரை முகாம்களுக்குள்ளேயே முடக்கி வைக்கும் முனைப்பில் போராளிகள் ஈடுபட்டிருந்தனர்.அவ்வாறே கிளிநொச்சி இராணுவ முகாமை சுற்றி திருநகர் கனகபுரம் இரத்தினபுரம் உருத்திரபுரம் கரடிப்போக்குப் பக்கம் டிப்போச்சந்திப்பக்கம் என 1986 காலப்பகுதியில் ஒரு முற்றுகை முனைப்பை நாம் மேற்கொண்டிருந்தோம்.

அக்காலப்பகுதியில் வேறு மாவட்டங்களில் தாக்குதல் திட்டங்களை நிறைவேற்றும்போது ஆங்காங்கு திக்குதிக்காக மாவட்டங்களில் நிற்கும் போராளிகளை எடுத்து ஒன்றிiணைக்கும் நிலையும் இருந்தது.நாவற்குழி இராணுவ முகாமைத்தாக்க மூத்த தளபதி பொன்னம்மான் மேஜர் கேடில்ஸ் உள்ளிட்ட போராளிகள் களம் இறங்கி தவறுதலாக வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த தாக்குதலுக்கும் கிளிநொச்சிப்பகுதியில் இருந்தும் போராளிகள் நாவற்குழிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இக்காலப்பகுதியில் கிளிநொச்சிப்படையினர் சொற்பமான போராளிகளை கொண்டு எம்மால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைளை உடைத்து வெளிவரும் சூழ்நிலையும் இருந்தது.

அந்த நேரத்தில் போராளிகள் வீரச்சாவடைந்து பலர் காயங்களுக்கு உள்ளாகினர் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தி சற்று பின்வாங்கி எமது ஆயுதங்களையும் போராளிகளையும் காத்துக்கொள்ளவேண்டிய கட்டளைகளும் எமக்கு வழங்கப்பட்டிருந்தன.அவ்வாறான ஒரு சூழ்நிலையில் வின்சன் உள்ளிட்ட போராளிகள் சிலர் நாம் வட்டக்கச்சியை அடுத்துள்ள கல்மடுவை அண்டியுள்ள காட்டுப்பகுதிக்கு அருகில் தங்கியிருந்தோம்.

அவ்வேளையில் எமது பசியை தீர்க்க அப்பகுதியில் உள்ள போராட்ட விசுவாசிகள் உணவுகள் தருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.அப்படி ஒரு நாள் எமக்கு ஒருவர் ஆட்டிறைச்சி கறியும் இரத்த வறையும் கொண்டு வந்து தந்திருந்தார்.நீண்ட நாள் அவ்வாறான சுவையான உணவை காணாததால் ஆவலோடு நாம் சாப்பிட ஆயத்தமானோம்

அச்சந்தர்ப்பத்தில் துரதிஸ்டமான ஒரு நிகழ்வு நடந்தேறியது.எம்மிடம் இருந்த ஆயுதங்களில் அரிதான ஜிபிஎம்ஜியும் இருந்தது.அதற்கான கைத்துப்பாக்கியும்(பிஸ்டல்) இருந்தது.பல நாட்கள் கிளிநொச்சிப்பகுதியில் சமர்களில் ஈடுபட்டதால் துப்பாக்கிகளை மிகவும் சீராக துப்பரவு செய்யவேண்டியிருந்தால்.அதை வின்சனும் ஏனைய போராளிகளும் அவற்றை கழற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தோம்.

வின்சன் கைத்துப்பாக்கியின் குண்டு நிரப்பியை கழற்றி விட்டு பிஸ்டலின் விசையை அழுத்தி அழுத்தி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக ஏறியிருந்திருந்த சன்னம் ஒன்று வெடித்து வெளியே பாய்ந்தது.அச்சன்னம் மன்னார் போராளியான கனியூட்டின் முகத்தை துளைத்தது.கனியூட் அந்த இடத்திலேயே வீரச்சாவடைந்தார்.

அது துரதிஸ்டமான நாள்.வின்சன் இடிந்து அழுதான்.பின்  இதனை மேலிடம் அறிந்து வின்சனிடம் இருந்த ஆயுதங்கள் களையப்பட்டு தண்டனை வழங்கியது.வின்சன் தண்டனையை அனுபவித்துக்கொண்ட அதேவேளை தனது கவலையீனத்தால் ஒரு போராளியின் உயிர் போய்விட்டதே என்ற மனச்சாட்சி உறுத்த வருந்திக்கொண்டதுடன் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்ற நிலையில் இருந்தான்.ஏதாவது சமர்க்களத்திற்கு சென்று களமாடி வீரச்சாவடைய வேண்டும் எண்ணத்தில் ஏங்கிக்கொண்டிருந்ததை அவனிடம் உணரமுடிந்தது.

வின்சனின் குடும்பம் பற்றியும் எனது குடும்பம் பற்றியும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருந்தோம் முன்பு.அதனால் வின்சன் மீது எனக்கு ஒரு பற்று இருந்தது.கல்டுமவில் அன்று நடந்த அந்த துரதிஸ்டமாக சம்பவம் என் மனதிலும் வின்சன் மனதிலும் ஆழமான முள்ளாய் தைத்துக்கொண்டிருந்தது.

பிறகு நாம் ஆனையிறவை சுற்றியுள்ள உவர் தரை மணல் பறுகுக்காடுகள் நிறைந்த பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து காவலரண்கள் அமைத்தும் களப்பணியில் நின்றோம்.

ஆனையிறவை சுற்றி நின்ற 1987 காலப்பகுதியில் சொற்பப் போராளிகளே நின்றோம்.ஆயுதப்பற்றாக்குறையும் இருந்தது.ஆயினும் அடிக்கடி முன்னேற முனைகின்ற ஆனையிறவு படைத்தள இராணுவத்தை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டோம்.அந்த உவர் தரையில் அக்காலத்தில் பெருவீரத்துடன் சண்டையிட்ட போராளிகளின் இரத்தம் சிந்திகலந்தது.பல போராளிகளின் இறுதி மூச்சு அந்த உவர் காற்றில் கலந்தது.

அன்றைய  சூழ்நிலையில் எம்மோடு ஈறோஸ் அமைப்பின் போராளிகளும் களத்தில் வந்து சில நாட்கள் நின்றனர்.அவர்களிடம் எம்மிடம் இருந்ததைவிடவும் வலுமிக்க ஆயுதங்களும் இருந்தன.சில நாட்கள் பின் எங்களிடம் தாம் வைத்திருந்த ஆயுதங்களை தந்துவிட்டு அவர்கள் வேறு பணிக்கு சென்றுவிட்டனர்.பெற்றுக்கொண்டு ஆயுதங்களை கட்டளையின் நிமித்தம் பதிவிட்டு ஆவணப்படுத்தியிருந்தோம்.பிறகு எம் கையில் அந்த புதிய ஆயுதங்கள் தவழ்ந்தன. எனக்கும் ஒரு ஏகே ரக துப்பாக்கி கிடைத்தது சந்தோசமாய் இருந்தது.

அதை வைத்து ஆனையிறவு படைகளுக்கு எதிரராக சமர் செய்தாம்.இதன் பிறகு வடமராட்சியை கைப்பற்ற ஓப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பித்தது.இதனால் ஆனையிறவு உள்ளிட்ட களமுனைகளில் இருந்து போராளிகளை வடமராட்சிக்கு ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இயக்கத்துக்கு இருந்ததால்.

அதில் மிகவும் அடம்பிடித்து விண்ணப்பித்து வடமராட்சி சிங்களப்படைக்கு எதிரான களமுனைக்கு வின்சன் சென்றிருந்தான்.தனது கவலையீனத்தால் வீரச்சாவடைந்த கனியூட்  என்ற போராளியின் களத்துக்கான கடமையையும் சேர்த்து இரட்டிப்பாக களமாடி வீரச்சாவடைய அவனுடைய மனம் தவித்திருக்கவேண்டும் அவன் நினைத்தபடியே மில்லர் என்ற பெரும் சரித்திரம் திறந்த நெல்லியடி களத்தில் வின்சன் மேஜர் கமலோடு சேர்ந்து வீரச்சாவடைந்து தன் தாயகக்கடமையை நிறைவேற்றினான்.
-முன்னாள் போராளி விதானை கஜன்

SHARE