வன்னேரிக்குளம் பகுதியில் பிள்ளைகளின் ஒளிப்படங்களை வைத்து பணம் சேகரிப்பு – உறவுகள் கடும் விசனம்

64

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் ஒளிப்படங்களை வைத்து பணம் சேகரிக்கப்படுவதாக உறவுகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட எந்தவொரு நிதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்கள், தமது பிள்ளைகளை வியாபாரப் பொருளாகவோ, அரசியல் வாக்குகளுக்காகவோ பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றன. அதேபோன்று தற்போது தனி நபர்களும் ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இந்த தாயாரின் பிள்ளையின் புகைப்படத்தை வைத்து, இருவர் நிதி சேகரித்துள்ளனர்.

எமது பிள்ளைகளை வியாபாரப் பொருளாக்க வேண்டாம். வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட நிதிகள் எதுவும் எந்த அரசியல்வாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தி நிதிகளை சேகரித்ததாக அறிகின்றோம்.

எமது பிள்ளைகள் சொந்த வீட்டுப் பிரச்சினைக்காக ஆயுதம் ஏந்தவில்லை. அனைவரது பொதுவான பிரச்சினைகளுக்காகவும், உரிமைக்காகவுமே ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, எமது பிள்ளைகள் மேல் பற்றும், மரியாதையும் வைத்து விடுதலைக்காக எம்மோடு இணைந்து போராட வாருங்கள்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி, வன்னேரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இந்திராதேவி என்ற தாயார் தெரிவிக்கையில், “எனது மகளான ஜெயமதி 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்தவர். இவரை அன்றுமுதல் தேடி வருகின்றோம்.

எனது மகள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றிருந்தார். அவரை அன்றுமுதல் நாம் காணாதவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி எனது மகளின் புகைப்படத்துடன் ஒருவர் எமது பிரதேசத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரை நாம் அக்கராயன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்.

குறித்த விடயம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள் எனவும் தெரிவித்தனர்.

எனது பிள்ளை இருக்கிறார். அவர் இல்லாது அவர் கொண்டு சென்ற புகைப்படம் எப்படி வெளியே வந்தது. அவர் உயிருடன் திருகோணமலையில் இருப்பதாகவும், அவரை கூட்டிச் சென்று காண்பிப்பதாகவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தெரிவித்தார். இந்த நிலையில் எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தாருங்கள்” என அவர் ஊடகங்கள் ஊடாகத் தெரிவித்தார்.

SHARE