வைகோ உள்ளிட்ட ஆறு பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு!

17

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்கள் ஆறுபேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இதனைத் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அ.தி.மு.க கூட்டணி சார்பில் முகமது ஜான், சந்திரசேகர், அன்புமணி, தி.மு.க கூட்டணி சார்பில் வில்சன், சண்முகம், வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மேல் சபையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் எதிர்வரும் 24-ம் திகதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிதாக 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய எதிர்வரும் 18-ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

6 மேல் சபை நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்ய முடியும்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE