தர்ஜினி சிவலிங்கத்தின் போராட்டம் வீண் – சிம்பாவேயிடம் வீழ்ந்தது இலங்கை!

144

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

சிம்பாவேக்கு எதிராக நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தப் போட்டியில் 79 இற்கு 49 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது. இதில், முதல் போட்டியாக இலங்கை அணி சிம்பாவேயை எதிர்கொண்டது.

உலக வலைப்பந்தாட்ட அணிகள் தரவரிசையில் 18 ஆவது இடத்திலிருக்கும் இலங்கை அணி 13ஆவது இடத்திலிருக்கும் சிம்பாவே அணியை எதிர்கொண்டதால், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.

போட்டியின் முதல் சுற்றினை 19 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் சிம்பாவே கைப்பற்றியது.

இரண்டாவது சுற்றில் சிம்பாவே அணிக்கு இலங்கை அணி நெருக்கடியைக் கொடுத்த போதும், 19 – 15 என்ற புள்ளிகள் கணக்கில் சிம்பாவே முன்னிலை பெற்றது.

இதில் முதல் பாதி முழுவதும் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மாத்திரமே புள்ளிகளை பெற்றுக்கொடுத்திருந்தார்.

மூன்றாவது சுற்றில் இலங்கை அணி சிறப்பாக ஆடிய போதும், துரதிஷ்டவசமாக சிம்பாப்வே அணி 15-13 புள்ளிகள் கணக்கில் அந்தச் சுற்றையும் கைப்பற்றியது.

குறித்த மூன்று சுற்றுக்களிலும் சிம்பாவேக்கு சவாலாக விளங்கிய இலங்கை அணி, நான்காவது சுற்றில் தமது சமனிலையை இழந்திருந்தது.

இந்தச் சுற்றில் அபாரமாக ஆடிய சிம்பாப்வே அணி 26 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, இலங்கை அணியால் வெறும் 7 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.

இதன் அடிப்படையில், இறுதியில் 79-49 என்ற புள்ளிகள் கணக்கில் சிம்பாப்வே அணி போட்டியை வெற்றிக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக தர்ஜினி சிவலிங்கம் தனக்கு கிடைத்த 45 வாய்ப்புகளில் 44 புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததுடன், ஜிம்பாப்வே அணியின் ஜொய்ஸ் தகைட்ஷா தனக்கு கிடைத்த 62 வாய்ப்புகளில் 59 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில் வடக்கு அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE