கிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது !

80

உலக கிண்ண கிரிக்கட்  தொடரில், நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி சுப்பர் ஓவர் நிர்ணய விதிப்படி வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சியின். 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி பிரித்தானிய நேரம் முற்பகல் 10.40 மணியளவில், லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில், ஆரம்ப வீரர்களாக ஜோனி பெயர்ஸ்டோ – ஜோசன் ரோய் ஆகியோர் களமிறங்கினர். நியூஸிலாந்து அணியினர் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களினால் நிலை தடுமாறிய  ரோய் 17 ஓட்டத்துடன் 5.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியாறினார்.

முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டதனால், இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுமுணையில் பெயர்ஸ்டோ ஓட்டங்களை வேகமாக பெற முற்பட்டார்.

இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 39 ஓட்டத்தையும், 15 ஓவரில் 56 ஓட்டத்தையும் பெற்றது. 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கிரேண்ட்ஹோம் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரூட்டை 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற, 19.3 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 36 ஓட்டத்துடன் லொக்கி பெர்குசனின் பந்தில்  ஆட்டம் இழந்தார்.

ரூட்டின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் இயன் மோர்கன் 23.1 ஆவது ஓவரில் 9 ஓட்டத்துடன் ஜேம்ஸ் நீஷமின் பந்தில் லொக்கி பெர்குசனின் அபார பிடியொடுப்பினால் ஆடு களத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து அணி 86 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து நிலைகுலைந்தது. இந் நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக பென் ஸ்ரோக் மற்றும் பட்லர் இணை சேர்ந்து நியூஸிலாந்து அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில்  27.3 ஆவது ஓவரில் பென்ஸ்ரோக் ஒரு நான்கு ஓட்டத்தை   பெற்றதன் மூலம், இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன், 37.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

ஒரு கட்டத்தில் 40 ஓவருக்கு 170 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றவேளை,  வெற்றி இலக்கை அடைய 60 பந்துகளுக்கு 72 ஓட்டம் என்ற நிலை இருந்தது. ஆடுகளத்தில் பென் ஸ்ரோக் 43 ஓட்டத்துடனும், பட்லர் 42 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தனர். தொடர்ந்து 43.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை  பெற்று  பட்லர் அரைசதம் கடக்க மறுமுணையில் பென் ஸ்ரோக்  அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அரைசதம் பெற்றார்.

32 பந்துகளுக்கு 46 ஓட்டம் என்ற இக்கட்டான நிலையிருந்த வேளையில் பட்லர் 44.5 ஆவது ஓவரில் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 59 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் பரபரப்பானது. இந்த நிலையில் 45 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற,  30 பந்துகளுக்கு 46 என்ற வெற்றி இலக்கு நிர்ணயமானது.

46.1 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணிப் பக்கம் வெற்றிவாய்ப்பு அதிகரித்தது. இங்கிலந்திற்கு வெற்றி வாய்ப்பு 65 வீதம் என்ற நிலை தலைகீழானது.

7 ஆவது விக்கெட்டுக்காக பிளாங்கட் களமிறங்கி துடுப்பெடுத்தாட 18 பந்துகளுக்கு 34 என்ற நிலையும், 12 பந்துகளுக்கு 24 என்ற நிலையுமிருக்க, பிளாங்கட் 48.3 ஆவது ஓவரில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜோப்ர ஆர்ச்சரும் 49 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 15 என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆடுகளத்தில் பென் ஸ்ரோக்  70 ஓட்டத்துடனும், அடில் ரஷித் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இறுதி ஓவரை எதிர்கொண்ட பென் ஸ்ரோக்  அந்த ஓவரின் முதல் இரு பந்துகளையும் ஆட்டமின்றி கடந்தார். எனினும் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்தை பெற்றார். அத்துடன் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட வேளை இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. அந்த பந்தில் மொத்தமாக 6 ஓட்டம் பெறப்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு 2 பந்துகளில் 3 ஓட்டம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டம் பெற முற்பட்டபோது அடில் ரஷித் ரன் அவுட் ஆக, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் என்ற நிலையானது. இறுதிப் பந்தை பென்ஸ்டோக் எதிர்கொண்டார். எனினும் அந்த ஓவரில் 2 ஓட்டம் பெற முற்பட ஒரு ஒட்டம் மாத்திரம் பெறப்பட்டதுடன், மார்க்வூட் ரன் அவுட் ஆனார்.

இதனால் சுப்பர் ஓவர் வெற்றி வாய்ப்பு  முறைமை உருவாக்கப்பட்டது. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.  சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்தின் வெற்றிக்கு 16 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

16 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கும் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அந்தப் பந்தில் ஒரு ஓட்டம் மட்டும் பெறப்பட, சுப்பர் ஓவர் விதிப்படி  அதிகபடியான நான்கு ஓட்டங்களை பெற்ற ஒரு அணிக்கே வெற்றி கிட்டும் என்பதற்கு அமைவாக,  இப் போட்டியில் அதிகபடியான நான்கு ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன் மூலம்  கிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய தனது நாட்டில், 44 வருடகால கிரிக்கெட் கனவை நனவாக்கி,  ஐ.சி.சியின்  12 ஆவது உலகக் கிண்ணத்தை    தனதாக்கியது.

SHARE