சோகத்தில் மூழ்கியது மலையகம் – மற்றொரு சிறுமியின் சடலமும் கண்டெடுப்பு

179

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் ஆற்று நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மற்றொரு சிறுமியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியை தேடும் பணிகள் நேற்றிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதியில் நேற்று ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் ஆற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் ஒருவர் நேற்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மற்றொரு சிறுமியும் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான மதியழகன் லக்ஷ்மி, மதியழகன் சங்கீதா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, குறித்த இரு சிறுமிகளின் சடலத்தையும் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE