சம்மாந்துறையில் ஆயுதம் ஏந்திய நபர்களைக் கண்டதாக தகவல் – விசாரணைகள் முன்னெடுப்பு!

59

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில் ஆயுதம் ஏந்திய இருவர் துப்பாக்கிகளுடன் நடமாடியதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள காணி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இருவர் கையில் துப்பாக்கியுடன் இருப்பதை அவதானித்ததாக காணியின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆயுதம் தாங்கியவர்களை அண்மித்துச் சென்றபோது, தன்னை சுட முயற்சித்ததாகவும், அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ள காணி உரிமையாளர், அதிலிருந்து தப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் குறித்த ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதனைத் தொடர்ந்து பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆயுதம் ஏந்திய யாரும் பிடிபடவில்லையென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

SHARE