தான் என்ன பேசுகிறோமென அறியாமலேயே அமெரிக்க ஜனாதிபதி பேசுகிறார்: சசி தரூர்

255

காஷ்மீர் விவகாரத்தில், தான் என்ன பேசுகிறோமென அறியாமலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசுகிறாரென முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் திருவனந்தபுர நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், “இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நான் பிரதமர் மோடியைச் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னிடம், நீங்கள் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறார்களா? எனக் கேட்டார். நான் எங்கு என்றேன். அவர் அதற்கு காஷ்மீர் என்றார். என்னால் முடியுமென்றால் நான் நிச்சயமாக மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றேன்.

அந்தவகையில் நான் ஏதாவது விதத்தில் உதவியாக இருக்க வேண்டுமென விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினேன் என்றார்.

குறித்த கருத்து பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விடயம் குறித்து கூறிய சசி தரூர் “தான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே பேசுகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

மேலும் காஷ்மீர் பிரச்சினையின் ஆழம் அவருக்குத் தெரியவில்லை.

அத்துடன் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டைக் கோரியிருப்பார் என்பது சாத்தியமற்றதொன்றாகும்.

ஏனெனில் நமது வெளியுறவுக் கொள்கை மிகத் தெளிவாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையீட்டை நம் கொள்கை ஊக்குவிக்கவே இல்லை.

இரு நாடுகளுக்கும் இடையே மொழிப்பிரச்சினைக் கூட கிடையாது.

அதனால், பாகிஸ்தானுடன் பேச வேண்டுமானால், நாம் நேரடியாகவே பேசிக் கொள்வோம். எதற்காக மத்தியஸ்தம் கோரப் போகின்றோம்” என சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.