மாவீரர் தேசக்குயில் பாடகர் மேஜர் சிட்டு உடனான எனது பயணமும் பகிர்வும்-கஜன்

429

மூத்த போராளியும் மாவீர்ரும் தமிழீழத்தின் தலைசிறந்த போராளிப்பாடகருமான மேஜர் சிட்டுவின் நினைவு நாளான இன்று 1990ம்ஆண்டு காலப்பகுதியில்
சிட்டுவுடன் நட்பில் இருந்த மூத்த போராளியும் மனித உரிமைச்செயற்பாட்டாளருமான கஜன் சிட்டுவுடனான தன்னுடைய நாட்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

1990ல் தான் சிட்டு எனக்கு அறிமுகமானார்.அப்போது நாம் மணலாற்றில் இருந்தோம்.தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மணலாற்றில் புனிதபூமி என்ற முகாமில் மையம் கொண்டிருந்த வேளையில் நான் அப்பகுதியில் அமைந்திருந்த அமுதகானம் என்ற ஒரு பாசறைக்கு பொறுப்பாகவிருந்தேன்.அது வழங்கல் பிரிவு முகாம்.அதாவது மணலாற்றுப் பகுதியில் இருந்த பாசறைகளுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் முகாம்அது.அந்த முகாமுக்கு மிகத் தொலைவில் இருந்து வாகனங்கள் பயன்படுத்தப்படாத அக்காலச்சூழலில் கால் நடையாக வழங்கல் பெற்றுக்கொள்ள போராளிகள் வருவார்கள்.அச்சந்தர்ப்பத்தில் அப்போராளிகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் என்னிடம் பதிவில் இருக்கும் வாய்ப்பு இருந்தது.அத்தகைய சந்தர்ப்பத்தில்தான் சுமார் முந்நூறு போராளிகள் அதாவது புதிதாக இணைந்தவர்கள் அங்கு கால்நடையாக வந்து சேர்ந்தார்கள் அதில் ஒருவராக சிட்டுவும் வருகின்றார்.அவர் என்னிடம் வந்து தன்னுடைய விபரங்களை பதிவு செய்தார்.

அப்பொழுது தான் நன்றாக பாடக்கூடிய கலை ஆற்றல் உடையவர் என்றும்.இலங்கை வானொலிக்கு சென்று எல்லாம் பாடியிருக்கின்றேன் என்றும் என்னிடம் தெரிவித்தார்.பரிசுகளும் பெற்றிருக்கின்றேன் என்றார்.எமது பாசறையில் சுமார்
ஐநூறுக்கும் மேற்பட்ட போராளிகள் இருந்தனர்.அதில் ஒருவராக சிட்டு அவர்களும் இருந்தார்.அப்பொழுது பாடச்சொல்லி கேட்கும்பொழுதெல்லாம் சினிமாப்பாடல்களை அழகாக பாடுவார்.இச்சந்தர்ப்பத்தில் எமது முகாமுக்கு அருகில் அதாவது தண்ணிமுறிப்புப் பகுதியிலும் ஒரு பயிற்சிப்பாசறை இருந்தது.அதன் பெயர் காராம்பசு.இச்சந்தர்ப்பத்தில் புதிய போராளிகளின் வரவு அதிகமாக இருந்தது.அப்பொழுது மணலாற்றுப்பகுதி முகாம்களுக்கு பொறுப்பாகவிருந்த மேஜர் றொபட் அவர்கள் வந்து போராளிகள் அதிகமாக இருந்ததால் நித்தகைக்குளம் பகுதியில் ஒரு பாசறையை உருவாக்க வேண்டும் என்றார்.அது தூரத்தில் வரும் இராணுவத்தை கண்காணிக்கும் ஒரு பழைய சிறிய முகாமாக இருந்தது.அருகில் தண்ணி வசதிகளும் இருந்ததால் அப்பாசறையை விரிவாக்க திட்டமிடப்பட்டது.

மேஜர் றொபட் அவர்களின் அறிவுரைக்கு அமைய எமது அமுதகானம் முகாமில் இருந்து நித்தகைக்குளப்பகுதிக்கு சகல பொருட்களையும் சுமந்து கொண்டு சிட்டு உட்பட ஐநாறு போராளிகளையும் அழைத்துக்கொண்டு கால்நடையாக சென்றோம்.சென்று அதை ஒரு பயிற்சிப்பாசறையாய் மாற்றுவதற்கு தேவையான வேலைகளை செய்தோம்.
அதாவது ஓடுவதற்கு மைதானம்.உடற்பயிற்சி செய்வதற்கு உரிய இடம் போராளிகள் தங்குவதற்கான வசதி என்பவற்றை காட்டுத்தடிகளை கொண்டும் உடலுழைப்பைக்கு கொண்டும் உருவாக்கினோம்.அதாவது முகாம் அமைந்துள்ள பகுதியில் தடிகளை வெட்டமுடியாது வெட்டினால் அது எதிரிகளுக்கு இடத்தை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் தூரச்சென்று தடிகளை வெட்டிச்சுமந்துவந்தோம்.


அந்தப்புதிய போராளிகளில் பலர் அரச உத்தியோகங்களை துறந்து வந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பது இங்கு சொல்லவேண்டிய ஒன்று.இச்சந்தர்ப்பத்தில் என்னோடு இருக்கும் உதவியாளர்களில் ஒருவராக மேஜர் சிட்டு அவர்களும் இருந்தார்.இச்சந்தர்ப்பத்தில் சகலருக்கும் வேலைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்னால்.அதாவது பயிற்சிப்பாசறையின் பாதுகாப்பு அரண்கள் பதுங்கு அகழிகள் உள்ளிட்டவை அமைப்பதற்கான பணிகள் கொடுக்கப்பட்டன.ஆனால் சிட்டுவிற்கு அவ்வாறான பணி வழங்கப்படவில்லை.அவருக்கான பணி என்னவெனில் வேலை செய்து களைத்து ஓய்வெடுக்கின்ற போராளிகள் மத்தியில் சென்று பாடல்கள் பாடி அவர்களை மகிழ்விப்பது இது சிட்டுவுக்கும் பிடித்தமாக இருந்தது.சிட்டுவிற்கு தான் பாட மற்றவர்கள் ரசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று.அதனால் அந்த போராளிக்கலைஞருக்கு அந்தப்பணி வழங்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் ஒரு சில தாயகப்பாடல்கள் ஒலிநாடாக்களே வெளிவந்து இருந்தனஅதில் இருந்தும் சில பாடல்களை பாடுவார்.அநேகம் சினிமாப்பாடல்களையே பாடி மகிழ்வித்தார்.அந்த காலப்பகுதியில் சினிமாப்பாடல்களை கேட்கக்கூடிய சூழல் எமக்கு இருக்கவில்லை அதனால் சிட்டு ஒரு வானொலிபோல எம்மருகில் இருந்தார்.சிட்டுவுக்கு சிட்டு பெயரிடப்பட்டதும் அந்த முகாமில்தான்.சிட்டு ஏற்கனவே வீரச்சாவடைந்த சீலன் அண்ணன் செல்லக்கிளி அம்மான் போன்றோருக்கு பிடித்த சினிமாப்பாடல்களையும் பாடுவார்.

இச்சந்தர்ப்பத்தில் கொக்காவில் மாங்குளம் போன்ற இராணுவ முகாம்களையும் முல்லைத்தீவு இராணுவ முகாமையும் முற்றுகைக்குள் கொண்டுவரும் சண்டைகளில் போராளிகள் இறங்கினார்கள்.இதற்காக மணலாற்றுப்பாசறைகளில் இருந்தும் போராளிகள் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள்.இந்தச் சூழலில் நாம் இருந்த நித்தகைக்குளம் பாசறைக்கு அப்பால் தொலைவில் சிங்களக் கிராமங்கள் இருந்தன.இரவின் அமைதியான பொழுதுகளில் அதிகாலைகளில் சிங்களக் கிராமத்தில் நடக்கும் ஆலய விழாக்கள் கோழிகள் கூவும் சத்தம் வாகன உறுமல்கள் என காற்றில் கலந்துவரும் எனவே பொறுப்பாளர் மேஜர் றொபட் அவர்களிடம் நிறைய போராளிகளை இந்த முகாமில் வைத்திருப்பது ஆபத்தானது என்றும் அதை பாதுக்காப்பதற்குரிய பெரும்
ஆயுத தளபாடங்கள் இல்லை என்றும் இது ஒரு பயிற்சி முகாம் என்பது எதிரிகளுக்கு தெரிந்தால் காடுகளுக்கால் இறங்கி ஆபத்துக்களை ஏற்படுத்திவிடுவார்கள் என்று தெரிவித்தேன்.அதனால் காராம்பசு என்ற முகாமுக்கு போராளிகள் மாற்றப்பட்டார்கள்.அங்குதான் சிட்டு உட்பட ஏனைய போராளிகளுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன.இதே வேளை முல்லைத்தீவு இராணுவ முகாம் முற்றுகைக்கான களப்பணிகளில் ஒரு சிறிய பகுதிக்கு எனக்கும் பொறுப்பு தரப்பட்டது.அதனால் நான் களமுனைக்கு சென்று அதை பொறுப்பெடுத்தேன்.பிறகு சிட்டுவை நீண்ட காலம் காணவில்லை.

பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு யாழ்ப்பாணத்தில் ஒரு தடவை கொக்குவில் பகுதில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஸ்கூட்டர் வகையான உந்துருளியில் ஒருவர் எனக்கு முன் வந்து நின்றார்.நான் சிட்டு என்றார்.நான் முதன்முதலில் பாடியிருக்கின்றேன் என்றார்.நான் பயிற்சிப்பாசறையில் கண்ட சிட்டுவுக்கும் நான் கொக்குவிலில் கண்ட சிட்டுவுக்கும் தோற்றத்தில் பல வித்தியாசங்கள்.மெல்லிய ஒரு கறுப்பான தோற்றமுள்ளவராக இருந்த சிட்டுவை ஒரு பொலிவான ஒரு ஆளாக கண்டேன்.

என்னை அழைத்துச்சென்று தன்னுடைய முதல் பாடலை போட்டுக்காட்டினார். இந்த பாடல் இன்னும் வெளிவரவில்லை என்றும் நீங்கள்தான் இந்த பாடலை கேட்கின்றீர்கள் என்று மன நிறைவோடு கூறினர் . நீங்கள் பயிற்சிப்பாசறையில் நிறையவே பாடுவதற்கு வழங்கிய சந்தர்ப்பமும் நான் இன்று ஒலிநாடாவில் ஒரு தாயகப்பாடலை பாட ஊக்கியாக இருந்தது என தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதத்தை மட்டுமே ஏந்தியிருப்பார்கள் என்ற நினைத்த விம்பங்களை ஆயுதத்தையும் ஏந்தியபடி வரிச்சீருடை அணிந்து கொண்டு பெரும் பாடகர்களாயும் இருப்பார்கள் என்பதை மேஜர் சிட்டு நிரூபித்தார்

எனக்கு நல்ல நினைவிருக்கின்றது 1990ல் எனக்கும் மிக இள வயதுதான்.அச்சந்தர்ப்பத்தில் நித்தகைக்குளம் பயிற்சிப்பாறைக்கு பொறுப்பாக இருந்து முல்லைத்தீவு முற்றுகைச்சமர் களத்துக்கு நான் புறப்பட்டபோது பாசறைப்போராளிகள் தங்களது அன்பின் நிமித்தம் ஒரு பிரியாவிடை செய்திருந்தார்கள்.எனக்கு பிரியாவிடை செய்வதில் விருப்பம் இல்லையென்றாலும் அவர்களின் சந்தோசத்திற்காக ஒப்புக்கொண்டேன்.அவர்கள் பல கலைநிகழ்ச்சிகளை செய்தார்கள்.சிட்டுவும் பாடினார்.போராளிகள் இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கின்ற தருணங்கள் குறைவு.அந்தக்கணங்களை அவர்கள் அனுபவிப்பது எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது.ஏனெனில் இன்று இருப்பார்கள் நாளை மண்ணுக்காக ஏதோ களமுனையில் தங்கள் அர்ப்பணிக்கக்கூடியவர்களாக போராளிகள் இருந்தார்கள்.இவ்வாறு சிரித்து மகிழ்ந்துபாடி சென்ற பல போராளிகள் வித்துடலாக வர அவர்களை விதைத்து வணங்கிய வரலாறுகள் இருக்கின்றன.அத்தகைய நினைவுகள்தான் இன்றும் என்னை இயக்கிக்கொண்டிருக்கின்றன.என்னோடு இருந்த பல போராளிகள் வீரச்சாவடைந்து விட்டார்கள்.என்னை ஏனோ காலம் விட்டுவைத்தது.நான் நினைக்கின்றேன்.வீரச்சாவடைந்த அவர்களின் இலட்சியத்தோடு புலம் பெயர் தேசத்திலும்
போராடும்படியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.இறுதி மூச்சுவரை அவர்களின் கனவுகள் வெல்ல போராடுவதே எனது இலட்சியமுமாக இருக்கின்றது.

.

SHARE