அமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை

635

எங்களுக்கு நீண்ட வயல்கள் இருந்தன போகத்திற்கு போகம் விதைக்கும் போதும் அறுவடை செய்யும் போதும் அதை எங்கள் வீடுகளில் அடுக்கி வைக்கும்போதும் பெரிய மகிழ்ச்சி இருந்தது.எங்களுக்கு வறுமை இருந்ததாய் உணர்வு இல்லை.ஆடு மாடுகள் கோழிகள் உழவு ஊர்தி என எல்லாம் எங்கள் வீட்டில் இருந்தது.இவையெல்லாம் எங்கள் சொத்துக்கள் தான்.அடிக்கடி எமது மண்ணில் போர் நிகழும்போது எங்கள் ஊரில் இருந்து இடம்பெயர்வதும் இந்த சொத்துகளை இழப்பதும் பிறகு பறவைகள் கூடுகளுக்கு திரும்புவதுபோல எங்கள் வீட்டுக்குத் திரும்பும் போது எங்களிடம் இருந்த சொத்துக்கள் பல அழிந்தும் தொலைந்தும் கரைந்தும் போயிருக்கும் ஆயினும் ஏதோ பெரிய சொத்து எங்களோடு இருப்பதுபோல உணர்வு மட்டும் என்னையும் என் பிள்ளைகளையும் கவலை கொள்ளவிடுவதில்லை.அந்த எனது பெரிய சொத்துத்தான் எனது கணவர் என தன் கதையை சொல்ல ஆரம்பிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த அமலராஜ் அமலநாயகி தன் வசந்தகாலம் நிரம்பிய வாழ்வை புரட்டிப்போட்ட சம்பவத்தை நினைத்துப்பார்க்கின்றார்.

நானும் எனது கணவரும்1990 ல் திருமணம் முடித்துக்கொண்டோம்.எனது வாழ்க்கை மிக மகிழ்ச்சியானது.எந்தவித குறைகளும் அற்றது.எந்த வித கஸ்டங்களையும் உணர அன்பானவரும் உழைப்பாளியுமான எனது கணவர் விட்டதில்லை.எங்களுக்கு மூன்று பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை.எனது மகிழ்ச்சியில் மிகப்பெரியவை எனது கணவர் பிள்ளைகள் என்னோடு அருகில் இருப்பதுதான்.இன்றைக்கு அந்த மகிழ்ச்சியில்லை.இன்றைக்கு என்னிடம் மகிழ்ச்சிக்கு மிக வறுமை.பத்து வருடமாக எனது கணவருக்காக நான் ஏங்கிக் காத்திருக்கும் நிலையை நான் வாழும் இந்த நாடு எனக்கு தந்திருக்கின்றது.2009க்கு முன் எங்கள் வாழ்க்கையில் பல இடப்பெயர்வுகள் போவதும் பிறகு வீடு திரும்புவதும் என்ற வாழ்க்கை எனினும் எங்களோடு எங்கள் கணவர் இருந்தார் என்பதால் எந்தவித கலையும் இருந்ததில்லை.எங்களுக்கு நீண்ட வயல்கள் இருந்தன.அந்த வயல்களை அடிக்கடி எனது கணவர் சென்று பார்ப்பதும் அங்கு வேலை செய்வதுமாய் இருப்பார்.போரின் இறுதிகாலத்தில் வடக்கில் உக்கிரபோர் நடந்து கொண்டிருந்தபோது மட்டக்களப்பில் போர் தணிந்துகொண்டிருந்தது.அத்தகைய தருணத்தில்தான் எனது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள் வந்தது.

2009 பெப்ரவரி மாதம் 19ம் நாள் வயலுக்கு சென்ற எனது கணவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.வயலில் வேலை அதிகம் இருக்கலாம் என்ற நினைப்பும் அந்த நாளில் பொய்த்துப்போயிற்று.எங்காவது அவசரமாக தூரம் போயிருக்கலாம் என் நினைப்பும் அடுத்த நாள் பொய்த்துப்போயிற்று.பின்பு எனது கணவர் வரவே இல்லை.அவர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

எங்கள் வயலுக்கு அருகில் மிக நெருக்கமாக ஒரு சிறப்பு அதிரடிப்படை முகாம் இருந்தது.வயலுக்கு போன எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது ஒருபோதும் அந்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படைக்கு தெரியாமல் இருக்க எந்தவித வாய்ப்பும் இல்லை.எனது கணவர் காணாமல் ஆக்கப்பட்டதை கண்ட பலர் எனக்கு சொன்னார்கள்.அதன் பிறகு சிறிய எனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அந்த முகாமிடமும் சென்று விசாரித்தேன்.தமக்கு தெரியாது என்று பதிலே எனக்கு கிடைத்தது.தாம் தேடித்தருவதாக பயிரை மேயும் வேலிகள் பல கூற அரம்பித்தன.அதற்கான கடத்திய கூட்டங்களை சேர்ந்தவர்களே என்னிடம் முதற் தடவை பத்தொன்பது இலட்சம் பணத்தை வாங்கிக்கொண்டனர்.இப்படி தேடித்தருகின்றோம் என்ற ஏமாற்று வார்த்தைகளுக்காக பிறகும் பல இலட்சங்களை கொடுத்தேன்.ஏனெனில் எனது கணவர் எனக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் சொத்து என்பதால் எங்களிடம் இருந்த சொத்துக்கள் கரைவதை பற்றி எந்தவித கவலையும் எனக்கு இருக்கவில்லை.ஆனால் எனக்கு எனது கணவர் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டேன்.


வறுமையை உணர ஆரம்பித்தேன் இன்னொரு புறத்தில் எனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சுயதொழலிலும் இறங்கினேன்.தையல் கோழி வளர்ப்பு வீட்டுத்தோட்டம் வயல் என்று எனது பிள்ளைகளுக்காக அதை செய்தேன்.ஆனால் எனது கணவரை தேடுவதும் பத்துவருடத்திற்கு மேலாய் தொடர்கின்றது.என்னைப்போல கணவனை பிள்ளைகளை காணமல் ஆக்கச்செய்யப்பட்டதன் மூலம் தேடும் தமிழ் உறவுகளுக்காகவும் எனது குரலையும் கொடுக்கவேண்டிய நிலைக்கு வந்துள்ளேன்.வயல் கணவர் அழகிய பிள்ளைகள் ஆனந்தமான வாழ்க்கை எல்லாம் அந்த ஒரு நாளில் புரட்டிப்போடப்பட போராட்டங்களும் மனு கொடுப்பதும் தெருவில் நின்று அழுவதும் அரசியல் மனித உரிமை அரச அரசசார்ப்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து எனது கணவரை மீட்டுத்தரும்படி கோருவதற்குமாக இப்போது எனது நாட்கள் கழிகின்றன.ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவை வரை படியேறி கெஞ்சிவிட்டேன்.

பத்துவருடங்களுக்கு முன்னர் வயல் பார்க்கச்சென்ற எனது கணவர் இன்னமும் வரவில்லை.
எனது கணவர் வயல் பார்;க்கச்சென்றபோது ஒரு ஸ்பிலெண்டர் உந்துருளியில் சென்றார்.அவரின் சட்டைப்பையில் ஐம்பது ஆயிரம் ரூபா பணம் இருந்தது.கழுத்தில் தங்கச்சங்கிலி அணிந்திருந்தார்.விரல்களில் எங்கள் கலியாண மாற்று மோதிரம் அணிந்திருந்தார்.புன்னகையோடு வயலுக்குப்போனார்.எனது கணவர் பெயர் அந்தோனி அமல்ராஜ்.காணாமல் ஆக்கச்செய்யப்படும்போது அவருக்கு வயது 40 மனைவி அமலநாயகி எனக்கு வயது 35 எங்கள் பிள்ளைகள் மூவரும் சிறியவர்கள் அப்போது.


இப்போது நான் ஒரு காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவி.என்னைப்போன்வர்களுக்காக தந்தைக்கு ஏங்கும் எனது பிள்ளைகளை போல பிள்ளைகளுக்காக அவர்களின் கஸ்டங்களிலும் துயரிலும் பங்கெடுத்து வாழவேண்டிய ஒரு சூழலுக்கு எனது நிலமும் காலமும் என்னை நிர்ப்பந்தித்துள்ளது.