கராச்சி-ராஜஸ்தான் இடையேயான ரயில் சேவையையும் நிறுத்தியது பாகிஸ்தான்

42

பாகிஸ்தானின் கராச்சி நகரை இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூருடன் இணைக்கும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பாகிஸ்தான் அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்படும் என பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான உறவை முறித்துக்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்துவதாக நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976ஆம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இடம்பெறுகிறது. இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் பயணத்தை மேற்கொண்டது. அதன்பின்னர், காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரிவரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

1994ஆம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து அட்டாரி வரை வாரம் இருமுறை இந்த ரயில் சேவை இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று இதனை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மற்றுமொரு ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய மத்திய அரசு இரத்துச் செய்ததன் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE