காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் தீர்மானம் ஜனநாயகத்துக்கு விரோதமானது – விஜய்சேதுபதி

42

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இடம்பெற்றுவரும் திரைப்பட விருது வழங்கும் விழாவிற்காக அங்கு சென்றுள்ள அவர் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றைக்கே கருத்து கூறிவிட்டார்.

அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் இன்னொருவர் தலையிடமுடியாது. அடுத்த வீட்டுப் பிரச்சினையில் நாம் அக்கறை செலுத்தலாம், ஆளுமை செலுத்தக்கூடாது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மனவருத்தம் தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இரத்து செய்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அத்துடன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து இருந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசை ரஜினிகாந்த் ஆதரித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE