தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன் .

86

தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்துவரும் நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன?

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே எமது தேசிய இனப் பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்காததுடன், எமது அடையாளத்தையே இல்லாமல் செய்யும் போக்கையே கடைப்பிடிக்கின்றன. கடந்தமுறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலும் இந்நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு அந்த வாய்ப்பை கைநழுவச் செய்துவிட்டது. புதிய அரசியல் யாப்பு வரப்போவதாகக் காரணம் காட்டி, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக்கூட கிடைக்காமல் செய்துவிட்டனர்.

அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் நழுவவிட்டு இன்று தங்களது பாரம்பரிய நட்புக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடத் தொடங்கிவிட்டனர். மக்கள் நலனைவிட கட்சியின் நலனே முக்கியமானது என்ற நிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தான் மட்டும் வராமல் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளையும் இணங்க வைத்துள்ளது.
இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருப்பதால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வழியேற்படும் என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், மகிந்தவைக் காரணம்காட்டி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியைவிட்டு வெளிவந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மைத்திரிபால சிறிசேன மகிந்தவுடன் இணைந்தபொழுது அவரைப் பதவிக்குக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அழுத்தம் கொடுத்து அவரது செயலைத் தடுத்து நிறுத்த திரு.சம்பந்தன் தவறிவிட்டார். பின்னர் நீதிமன்றத்தினூடாக ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிரங்க உறவு வைத்தார்.

இவர்களின் தவறான வழிநடத்தல் தமிழ் மக்களை இன்று நட்டாற்றில் விட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பிற்கான வரைபு பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது மேலும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அம்சங்கள் உள்ளடக்கப்படுமா என்பது வேறு விடயம். ஆகவே, தமிழ் மக்களுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை என்பதுடன் தீர்த்துவைத்திருக்கக்கூடிய அன்றாட பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

1981ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது இளைஞர்கள் கேட்டது தமிழீழம் கிடைத்தது மாவட்டம் என்று பெரிய வட்டத்தை சுவர்களில் வரைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள். அதைப் போலவே இன்று கேட்டது சமஷடி கிடைத்தது கம்பெரிலியா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையை கேலிசெய்கின்றனர். திருவாளர் சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல தரப்பினரும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துடித்திருந்த வேளையில், தமிழ்த் தேசிய இனம் வரலாறுகாணாத வகையில் வாக்களித்து பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாவதற்கு வழியேற்படுத்தியிருந்தனர். இந்த அபரிமிதமான அரசியல் சக்தியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து, இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டிருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையிலிருந்து தவறியிருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டியே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தெரிவித்தோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய அனைத்திலும் பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர, இவற்றில் தமிழரசுக் கட்சியே முன்னணி வகித்தது. இந்தப் பெயர்கள் அனைத்திலுமே அது ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே நேரடியாகவும் மறைமுகமாகவும் உறவுகளைப் பேணிவந்துள்ளது. இன்று மீண்டும் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாகவே உறவு வைத்துள்ளது. இவ்வளவிற்கும் அந்த கட்சியின் ஆட்சியிலேயே இன்று வடக்கு-கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வரவு-செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி என்ற பெயருக்கும் அது இன்று செயற்படும் விதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை மக்கள் அறிவார்கள் என அவர் தெரிவித்தார்.

SHARE