தேர்தலில் இருந்து விடுபட்டு இருந்தால் குறைந்தளவு வாக்குகளைப் பெறுபவரும் ஜனாதிபதி-சி.வி.விக்கினேஸ்வரன்

25

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விடுபட்டு இருந்தால் குறைந்தளவு வாக்குகளைப் பெறுபவரும் ஜனாதிபதி ஆகிவிடுவார். எனவே சிந்தித்து செயற்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகமுமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கற்குழிப் பகுதியில் பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இலவச ஊடக கற்கைகளை நேற்று (11.08) மாலை ஆரம்பித்து வைத்த பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது ஒருவருடைய பெயர் வந்துள்ளது. மற்றவருடைய பெயர் இன்னும் வரவில்லை. எங்களுக்கு என்று பல கோரிக்கைகள் இருக்கின்றன. அந்த கோரிக்கைகளை முழுமையாக அல்லது ஓரளவுக்கேனும் தீர்த்து வைக்கக் கூடிய ஜனாதிபதி தான் எங்களுக்கு தேவை. தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் 2015 இல் ஒருவரை கொண்டு வந்தோம். அவர் மகாவலியைக் கொண்டு எமது காணிகளை ஆக்கிரமித்ததை தவிர வேறு என்ன செய்தார் என்று சொல்ல முடியாது. சிங்கள பெரும்பான்மை இன மக்களின் பிரதிநிதிகள் தான் ஜனாதிபதித் தேர்தலில் வருகின்றார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கு இடமளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நாங்கள் அவர்களிடம் எங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அவர்கள் அதற்கு என்ன பதில் கூறுகின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதன்பின்னர் நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் வாக்கெடுத்தவர்களில் 51 சதவீத வாக்குகளைப் பெற்றவராக இருக்க வேண்டும். நாங்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விடுபட்டு இருந்தோமானால் குறைந்தளவு மக்கள் வாக்களித்து அதில் 51 சதவீதம் யாராவது ஒருவருக்கு கிடைக்க கூடும். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்கும் போது வாக்களிப்பு சதவீதம் அதிகரித்து 51 சதவீதத்தை எடுப்பது கஸ்ரமாக இருக்கும். ஆகவே பல விடயங்களை நாம் சிந்தித்து கொண்டு இருக்கின்றோம். எனக்கென்று தனிப்பட்ட கருத்து இல்லை. எதனை நாங்கள் செய்தால் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும். அதற்கு எந்த எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் முக்கியமான விடயம். அதற்கு ஏற்றவகையில் மற்றைய கட்சியில் இருந்தும் வேட்பாளர் அறிமுகப்படுத்திய பின்னர் நாம் ஒரு முடிவுக்கு வருவோம் எனத் தெரிவித்தார்.  

SHARE