கோத்தாவை மன்னிக்குமா ஆத்துமாக்கள்

570

இதே நாள் கொடுமையாகியது ஈழத்தமிழர் நிலத்தில் ஒரு நாள்.2006 ஆகஸ்ட் 14ம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் அமைந்திருந்த செஞ்சோலை மாணவர்களின் வளாகத்தில் தென்னிலங்கையில் இருந்து வானேறிவந்த கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் அந்த வளாகத்தில் இருந்;த மாணவிகள் மீது 16 குண்டுகளை கொட்டியது.உலகத்திலேயே மிகக்கொடுரமான கொலை வெறிச்சிந்தனையுடையவர்களால் மட்டுமே அத்தகைய ஒரு விமானத்தாக்குதலை நடத்தமுடியும்.ஏனெனில் அந்த நாளில் அந்த இடத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆயுதம் தரிக்காத வெறும் பாடசாலை மாணவிகள் மட்டுமே.தமக்கு நேரப்போகின்ற அந்த கொடுரமான உயிர்ப்பறிப்பு கணங்களை அந்த மாணவிகள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.போர்க்களத்தில் என்றால் தம்மை நோக்கி தாக்க வரும் குண்டு வீச்சு விமானங்களை நோக்கி காவலரண்களில் இருந்தோ அல்லது பாசறைகளில் இருந்து எதிர்பீரங்கிக்தாக்குதல்கள் இடம்பெறும்.ஆனால் வள்ளிப்புனத்தில் செஞ்சோலை வளாகத்தில் இருந்த ஒரு பூந்தோட்டத்தின் மீது குண்டுகளை வாரி இறைத்துச்சென்றது சிறிலங்கா அரசாங்கத்தின் குண்டு வீச்சு விமானங்கள்.இரத்த வெள்ளத்தில் அந்த மாணவச்செல்வங்கள் உயிர்பிரிந்து அலமந்து கிடந்தன.அந்தக்காட்சி கொடுரமானது.அங்கு எழுந்த அவல ஒலி உலகத்தின் மனட்சாட்சியை உலுப்பக்கூடியது.அறுபதுவரையான மாணவிகள் அந்த இடத்திலிலேயே பதினாறு விமானக்குண்டுகளால் பலியெடுக்கப்பட்டனர்.125க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிக மோசமான உயிர்பறிக்கும் காயங்களுடன் காப்பாற்றும்படி கையேந்திக்கொண்டிருந்தனர்.இத்தகைய ஒரு மோசமான மனித நாகரிகமற்ற கோழைத்தனமான பெரும் படுகொலையை செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆகஸ்ட் 14ம் நாள் காலை வேளையில் அரங்கேற்றியது
சிறிலங்கா அரசாங்கத்தின் குண்டு வீச்சு விமானங்கள். அதன் பிரதான சூத்திரதாரி இன்றைய சிங்கள தேசத்தின் பொது ஜன பெரமுன என்ற கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இப்படுகொலை நடத்தப்படும் போது ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த கோட்டபாய ராஜபக்சவே.

2006ம் ஆண்டு சிறீலங்காவின் பாதுகாப்பு செயலராகவிருந்த கோட்டபாய ராஜபக்சவிற்கு செஞ்சோலை வளாகத்தில் குண்டு வீச்சு விமானங்களால் நடத்தப்பட்ட மாணவிகள் மீதான கொடுரமான தாக்குதல் பற்றி தெரிந்தவை என்ன.அந்த வளாகம் மாணவர்களின் உடையது என்பதும் அது பாதுகாப்பு வலயம் என்பதும் அதனால் அதன் மீது குண்டுகள் வீசக்கூடாது என்பதும் கோட்டபாயவிற்கு தெரிந்திருக்கும்.முல்லைத்தீவு வரைபடத்தில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் அதில் செஞ்சோலை வளாகம் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் ஜிபிஎஸ் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது.எவ்வாறு புதுக்குடியிருப்பில் வைத்தியசாலை ஆலயங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லுர்ர் மன்னாரில் மடுமாதா எங்கு இருக்கிறது என்ற வரைபடத்தகவல் மூலம் உறுதிப்படுத்தி வைத்திருக்க முடியுமோ அவ்வாறே செஞ்சோலை வளாகமும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தது.செஞ்சோலை வளாகம் ஐநாவின் துணை அமைப்பான யுனிசெவ்வின் கவனிப்புக்கும் உறுதிப்படுத்தலுக்கும் உள்ளான ஒன்று.அதாவது விமானத்தாக்குதல் நடத்தப்பட்ட செஞ்சோலை வளாகம் சர்வதேச மனிதாபிமான அமைப்பு ஒன்றுக்கும் சிறிலங்காவின் அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு உயர் மட்டத்துக்கும் சிறீலங்காவின் மத்திய கல்வி அமைச்சுக்கும் அதன் கீழ் இயங்கும் மாகாண மாவட்ட வலய கல்வி நிர்வாகங்களுக்கும் நிர்வாக முறைமை அடிப்படையிலும் அது மாணவர்களுடையது என்பது மிகத் தெளிவாக தெரிந்த விடயம்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் 14ல் வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிக்காக கலந்து கொண்டது.பாடசாலை மற்றும் வலய மட்ட நிர்வாக மேலாளர்களுக்கும் தெரியும்.இந்த அனர்த்த முகாத்துவ பயிற்சி புனிசெவ்வின் அனுசரணையுடன் கல்வி வலயத்தால் நடத்தப்பட்ட ஒன்று.இவை அனைத்துமே ஆதாரபூர்வமானவை.ஆனால் இந்த ஆதாரங்களை எல்லாம் சர்வதேசத்தின் கண்களுக்கு மூடிமறைத்து மகிந்த ராஜபக்ச என்ற சிறீலங்காவின் சர்வாதிகாரி தனது சகோதரனான பாதுகாப்பு செயலர் கோட்டபாயவின் கட்டளையின் கீழ் அறுபதுக்கு மேற்பட்ட மாணவிகள் பலியாக காரணமான ஒரு கொடுரமான தாக்குதலை புலிகளின் இரகசிய முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காட்டமுனைந்த பெரும் அநீதி நடந்தேறியது.அங்கு கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என்பதை சர்வதேசத்துக்கு வெளிக்கொண்டுவர முனைந்த யுனிசெவ் அதிகாரி மகிந்த அரசாங்கத்தின் அழுத்தத்தால் சிறீலங்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

போர் தர்மம் என்பது போர்க்களத்தையும் மக்கள் வாழும் இடங்களையும் வேறுபடுத்திப்பார்ப்பது.போர் தர்மம் என்பது போர்க்களத்தில் ஒரு நிராயுதாபாணி அல்லது சரணடைந்தவர் அல்லது போருக்கு சம்மந்தமற்ற தரப்பு இருந்தால் அதை அப்புறப்படுத்தி அல்லது அந்த தரப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போர்த்தந்திரத்தை வகுத்து போரை வெற்றி கொள்ளுதல் இவை எல்லாம் சிறீலங்கா அரசாங்கத்துக்கு பொருத்தமானது அல்ல குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கும் அவருடைய தம்பி கோட்டபாயவிற்கும் கோட்டபாய வழி நடத்திய சிங்களப்படைகளுக்கும் போர் தர்மம் பொருந்தாது.காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மகிந்த ராஜபக்ச போரை நடத்தவில்லை மாறாக தமிழின அழிப்பை நடத்தினார்கள்.அத்தகைய ஒரு தமிழின அழிப்பின் ஒரு அங்கமே வள்ளிபுனத்தில் சிங்கள விமானப்படையால் நடத்தப்பட்ட செஞ்சோலை வளாக மாணவிகள் மீதான தாக்குதல்.இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் மீதான இனவழிப்பு தாக்குதல் 2009வரையும் மகிந்தராஜபக்சவின் அரசாங்கத்தில் கோட்டபாய கட்டளையின் கீழ் நடத்தப்பட்டன.அதில் ஆலயங்கள் வைத்தியசாலைகளில் இருந்த மக்கள் கொல்லப்பட்டார்கள்.கர்ப்பிணிகள் குழந்தைகள் வயோதிபர்கள் கொல்லப்பட்டார்கள்.கொத்துக்குண்டுகள் வீசப்பட்டன.இரசாய ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டன.சரணடைந்தவர்கள் உயிரோடு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு சிறிலங்காப்படையினரால் உட்படுத்தப்பட்டு நிர்வாணமாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.சரணடைந்த போராளிகள் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டார்கள்.

இத்தகைய அடுக்கிக்கொண்டே போகக்கூடிய தமிழின குருதி சொட்டும் அவலம் நிறைந்த வரலாற்றின் கதாநாயகர்ளான மகிந்த ராஜபக்சவையும் அருடைய தம்பியும் இன்றைய சிறீலங்காவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவருமான கோட்டபாயவை அவரால் பலியெடுக்கப்பட்ட ஆத்துமாக்கள் மன்னிக்குமா அரச கதிரை ஏறத்தான் ஆசி கொடுக்குமா!