காஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று!

98

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்த நிலையில், குறித்த ஆலோசனை கூட்டம் மூடப்பட்ட அறையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த கூட்டம் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மறுசீராய்வு சட்டமூலம் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.  இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது.  அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சீனாவும், எல்லை பிரச்சினையில் இந்தியா ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை மீற கூடாது என எச்சரிக்கை விடுத்தது.

அத்துடன் பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நாவிடம் முறையிட்டதுடன், ஐநாவின் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் மூடப்பட்ட அறையில் ஆலோசனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது