தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின் சேவகர்களாய்-மு.திருநாவுக்கரசு

147

நீண்டகால பெருந் தொடர் தோல்விகளிலிருந்தும் பேரழிவுகளிலிருந்தும் மீண்டெழுந்து தமிழ் மக்களின் விடுதலைக்கும் விடிவுக்குமான பாதையை தேட வேண்டியதற்கான இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்கள் உள்ளனர். இந்த அழிவின் விளிம்பிலிருந்து மீள்வதற்கான தற்போதைய இறுதிக்கட்டத்தை தவறவிடுவோமானால் தமிழினம் இலங்கையில் அரசியல் பலமற்றும் தேசிய இன தன்மை சிதைந்தும் அழிந்து போய்விடும் ஆபத்து துலாம்பரமாக உள்ளது.

இந்நிலையில் தமிழினம் தனக்குள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்துவதற்கு அதிகம் ஒன்றுபட்டு ஓர் அணியில் திரள வேண்டும். தம்மை காப்பாற்றுவதற்க்கென தமிழினத்திற்கு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் கிளையாக மாறி சிங்கள பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின் சேவகர்களாய்ச் செயற்ப்படுகின்றனர்.

இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஆட்சியாளர்களின் விசுவாசமான சேவகர்களாக செயற்பட்டு அவர்களின் இலக்குகளை அடைய சேவை செய்தார்களே தவிர தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்காக எந்தவகையிலும் எந்தவொரு சிறிய போராட்டத்தினையும் நடாத்தவில்லை.

சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை குற்றத்தில் இருந்து சிங்கள அரசையும் சிங்கள ஆட்சியாளர்களையும் ஐ.நா. மனித உரிமைகள் அரங்கிலும் மற்றும் சர்வதேச அரங்கங்களிலும் காப்பாற்றும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்களே தவிர போர்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை தொடர்பான எத்தகைய முன்னெடுப்புக்களையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் ஏனைய கோரிக்கைகளிலும் இத்தகைய வகையிலான அணுகுமுறைகளையே மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரச இயந்த்திரத்தின் ஒரு தலையாய கருவியாக இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இப்பின்னணியில் இவர்கள் எதிரியின் நேரடி நண்பர்கள் என்ற பாத்திரத்தை தான்கியவர்களாய் காணப்படுகின்றனர் ஆதலால் இவர்களை வீழ்த்தி ஒரு புதிய மாற்றுத் தலைமையை உருவாக்கவேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மாற்றுத் தலைமைக்கான ஒரு மக்கள் களமாக தமிழ் மக்கள் பேரவை உருவாகி அது இரு பெரும் மக்கள் பேரணிகளை நடாத்தியது அது மக்கள் ஆதரவை பெற்று பேரெழுச்சுக்குரிய ஓர் அமைப்பாக உருப்பெற தொடங்கியது ஆனால் கடந்த உள்ளுராட்சி தேர்தல்களுக்கான காலகட்டத்தில் உட் பூசல்கள் எழுந்து இவ்வமைப்பு பலவீனமடைந்தது.

இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 35% வாக்குகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 20% வாக்குகளையும் பெற்ற நிலையில் தமிழ் தேசியத்தின் நேரடி எதிரிகள் 45% வாக்குகளை பெற்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் தேசியத்துக்கு புறம்பாக எதிரியின் சேவகர்களாக செயற்பட்டாலும் அவர்கள் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய வாதிகளாகவே தம்மை அடையாளப்படுத்தும் பரிதாப நிலை காணப்படுகிறது. உதாரணமாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி இடம்பெற்ற செஞ்சோலை மாணவர் படுகொலைக்கான நினைவு ஸ்தூபியை செஞ்சோலை வளாகத்தில் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு அன்றைய தினம் மாவை சேனாதிராஜா உட்பட மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களுடன் இணைந்து மேற்படி ஸ்தூபி திறப்பு விழாவை நடாத்தினர். இவ்வாறு இவர்கள் மக்கள் மத்தியில் போடும் நாடகத்தை நம்பி இவர்களையும் தேசிய வாதிகளாக கருதி மக்கள் வாக்களிக்கும் அபாயம் உண்டு. மேலும் மாற்றுத் தலைமை பற்றி பேசும் தலைவர்கள் மத்தியில் பிளவும் மோதல்களும் காணப்படும் நிலையில் விரக்தியின் விளிம்பில் உள்ள மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் நிலை கவலை அளிக்கக்கூடிய வகையில் காணப்படுகிறது.

இரு பெரும் சிங்கள கட்சியினர்களும் இனவாத ஜே.வி.பி.யினரும் மற்றும் இருபெரும் சிங்கள கட்சி சார்பு தமிழ் அரசியல் வாதிகளும் ஒருங்கு சேர தமிழ் மக்களின் எதிரிகளாவர். இவர்களுக்கு 45% வாக்குகள் தமிழ் மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரான ஓர் அபாய அறிவிப்பாகும்.

கூடவே தமிழ் மக்களின் நண்பர்கள் போல் காட்சியளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் நடைமுறையில் எதிரியின் நண்பர்கள் என்ற வகையில் மேற்படி எதிரிகளின் கூடைக்குள் காணப்படும் ஓர் அங்கமாகவே உள்ளனர். இந்நிலையில் பலம் பொருந்திய அரசு இயந்திரத்துடன் கூடிய இராட்சத பலம் வாய்ந்த எதிரிகளுக்கு எதிராக மாற்றுத் தலைமையினர் அதிகம் ஒன்றுபட்டு பலம்வாய்ந்த கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய வரலாற்று கட்டாயம் உண்டு.

“காலனிய ஆதிக்க எதிர்ப்பு” அல்லது “குடியேற்றவாத எதிர்ப்பு” இதுவே ஆசிய ஆபிரிக்க நாடுகளின் தேசிய வாதத்திற்கான அடித்தளமும் தொடக்கப் புள்ளியுமாகும். தமிழ் மண் சிங்கள குடியேற்றங்களால் பெரிதும் கபளீகரம் செய்யப்பட்டு ஏற்கனவே கிழக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் வடக்கிலும் சிங்கள குடியேற்றம் புற்றுநோய் என விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் ஈழத் தமிழ் தேசியம் ஆனது சிங்கள குடியேற்றத்தை எதிர்கொள்வதையே தனது முதலாவது இலக்காக கொள்ளவேண்டியது அவசியம். இது மக்களை பேரணியாக திரட்டும் போராட்டன்களினாலேயே முன்னெடுக்கப்பட்டு உள்ளநாட்டு அயல்நாட்டு மற்றும் சர்வதேச கவனத்தையும் ஆதரவையும் பெற முடியும்.

இரு தடவைகள் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிகள் இத்தகைய மக்கள் போராட்ட பேரணிகளுக்கான கட்டியங்களாக அமைந்தன. ஆனால் மாற்றுத் தலைவர்களுக்கு இடையான குழப்பம் காரணமாக இத்தகைய மக்கள் பேர் எழுச்சிக்கான போராட்டங்கள் நலிவடைந்திருப்பது கவலைக்குரியது

1980 ஆம் ஆண்டு போலந்தில் “லேக் வலேசா” தலைமையில் உருவான தொழிற் சங்கமான சொலிடரிட்டி(Solidarity) அமைப்பானது மக்களை பேரணிகளாக திரட்டி போலந்து ஆட்சியாளர்களை வீழ்த்தி ஜனநாஜக ஆட்சியை உருவாக்கும் முதல் கட்ட போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் மகாத்மா காந்தி தலைமையில் உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, அந்நிய ஆடை எரிப்பு போன்ற மக்கள் போராட்டங்கள் பிரித்தானிய காலனிய ஆதிக்கத்தை ஈடாட்டம் காணச்செய்தன.

இன்றைய நிலையில் தமிழ் மண்ணில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிராக ஈழத்தமிழர்கள் ஓர் அணியில் ஒன்று திரண்டு பேரணிகளை நடாத்தவேண்டிய அத்தியாவசியம் உள்ளது. சிங்கள் குடிஎர்ரங்களுக்கு எதிராக யார் பேரணிகளை நடத்தினாலும் அவற்றை ஆதரித்து அதில் பங்கு பற்ற வேண்டியது தமிழ் தேசிய அரசியல் வாதிகளினதும் மக்களினதும் முதற்தர கடைமையாகும்.

எதிவரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை சிங்கள குடியேற்றத்தை எதிர்ப்பது உட்பட ஆறு கோரிக்கைகளின் அடிப்படையில் பேரணி நடாத்த அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற அதை முன்னெடுக்க விரும்புகின்ற எவரும் கட்சி பேதங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் இப்பேரணியை மாபெரும் எழுச்சி மிக்க ஒன்றாக முன்னிறுத்த பாடுபட வேண்டும்.

100 ஆண்டு கால தோல்விகரமான அரசியல் அனுபவங்களிலிருந்தும் எதிரியிடமிருந்தும் பாடங்களை கற்றுக்கொண்டு தமிழ் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

“பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு நான் பேய்களுடன் மட்டுமல்ல பிசாசுகளுடனும் கூட்டுச் சேர்வேன்” என்று 1984 ஆம் ஆண்டு கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அப்படியே தமிழரை உடனடி முதலாவது எதிரியாக கொண்டு அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுடனும் கூடு சேர்ந்தார். அதன் வழியில் அதன் இருதிக்கணியை ராஜபக்ஷகள் முள்ளிவைக்காலில் 2009 ஆம் ஆண்டு வெற்றிகரமாக பெற்றுக்கொண்டனர். எதிரியின் இத்தகைய வெற்றிகரமான கையாளல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு சிங்கள குடியேற்ற வாதத்திற்கு எதிராக ஓர் அணிலில் கூடினைந்து பேரணியை முன்னெடுக்க வேண்டும் முதலாம் எதிரியை தோற்கடிப்பதற்க்காக இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், எதிரிகளுடனும் கூட்டுச்சேர். இதுவே கூட்டுச்சேரல் தத்துவத்தின் அடிப்படையாகும். சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக யார் பேரணியை முன்னெடுத்தாலும் வேறுபாடுகளை கடந்து அந்த பேரணியை ஆதரியுங்கள். பேரணி பிசுபிசுத்துப் போனால் ஒட்டுமொத்த போராட்டமுமே பிசுபிசுத்து தமிழினம் அழிவையும் தோல்வியையும் தழுவிக்கொள்ள கூடிய அபாயம் உண்டு. ஆதலால் பேரணியின் வெற்றியே தமிழினத்தின் அடுத்த கட்ட அரசியல் முன்னெடுப்புக்களுக்கான அடிப்படையாகும்.

SHARE