சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி!

75

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நியமனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின்போது, இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் விடயத்தில் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும்.

இதேவேளை, குறித்த நடவடிக்கையானது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களையும் போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும் மோசமாக பாதிப்பதுடன், பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE