வாழ்க்கைத்தர மட்டத்தை வீழ்ச்சிக்குள்ளாக்கும் காலநிலை மாற்றம் – இலங்கைக்கு எச்சரிக்கை!

102

காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களினால் இலங்கையின் வாழ்க்கைத்தர மட்டத்தில் வீழ்ச்சி ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றம், வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கையை மாற்றியிருப்பதாகவும் இதனால் இலங்கையின் வாழ்க்கைத்தர மட்டம் 5 – 7 சதவீதம் வீழ்ச்சியடையும் நிலையேற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் வாணிப விஞ்ஞானத்தில் மாணவர்களுக்கான சர்வதேச அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ‘இளைஞர்களை மாற்றியமைத்தல், இலங்கையை மாற்றியமைத்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடந்த காலங்களில் வெள்ளப் பெருக்கிற்கும், கடுமையான வறட்சிக்கும் முகங்கொடுத்து வந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைகளே இலங்கை வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக மாற்றியிருக்கின்றன என ஹனா சிங்கர் கூறியுள்ளார்.

எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

SHARE