வானதியின் கையில் தமிழின நீதி கோரிய தேசியக்கொடி

139

கடந்த 28ம் திகதி பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஆரம்பித்து நேற்று வரையும் பல கிலோமீற்றர்கள் கால் நடையாக வலிக்கவலிக்க நடந்து ஐநா வந்தடைந்த தமிழின நீதி கோரும் செயற்பாட்டாளர்கள் தங்கள் கையில் தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை ஏந்திபடி நடந்திருந்தனர்.

நேற்று அந்த புலிக்கொடியை ஏந்தி நடந்தவர்களில் ஒருவரான மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் அந்தப் புலிக்கொடியை வானதி என்ற பெயருடைய ஐநா முன் வந்து மக்கள் எழுச்சியில் கலந்துகொண்ட சிறுமியிடம் நினைவுப்பொருளாக கையளித்தார்.

வானதி என்ற பெயர் தமிழீழ விடுதலைப் பேராட்டத்தில் ஈடுபட்டு வீரச்சாவடைந்த மூத்த மகளிர் போராளியின் பெயர் என்பதுடன் வானதி தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்த ஒரு பெயராகவும் காணப்படுகின்றது.அதே வேளை இச்சிறுமியின் சிறிய தாயாரான மாவீரர் லெப்.மிதுனா அல்ல நாமகளையும் செல்லமாக வானதி என்றே வீட்டில் அழைப்பது வழக்கம்அந்த வானதியின் பெயரைக் கொண்ட சிறுமிக்கு வரலாற்று நடைப்பயணத்தில் பறந்த தமிழீழ தேசியக் கொடி கையில் கிடைத்திருப்பதை அந்த வானதி வானத்திகள் இருந்து பார்த்து சிலிர்த்திருப்பார்.

கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை

எழுதுங்களேன்
நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்!
ஏராளம்…….
ஏராளம்…. எண்ணங்களை
எழுத
எழுந்துவர முடியவில்லை
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்.
எழுந்துவர என்னால் முடியவில்லை!
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
சீறும்
துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னா பின்னப்பட்டு போகலாம்
ஆனால்
என் உணர்வுகள் சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும்.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
மீட்கப்பட்ட – எம் மண்ணில்
எங்கள்
கல்லறைகள்
கட்டப்பட்டால்
அவை
உங்கள்
கண்ணீர் அஞ்சலிக்காகவோ
அன்றேல் மலர் வளைய
மரியாதைக்காகவோ அல்ல!
எம் மண்ணின்
மறுவாழ்விற்கு
உங்கள் மன உறுதி
மகுடம் சூட்ட வேண்டும்
என்பதற்காகவே.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
அர்த்தமுள்ள
என் மரணத்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட
தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலாவருவீர்கள்!
அப்போ
எழுதாத
என் கவிதை
உங்கள் முன்
எழுந்து நிற்கும்!
என்னை
தெரிந்தவர்கள்
புரிந்தவர்கள்
அரவணைத்தவர்கள்
அன்பு காட்டியவர்கள்
அத்தனை பேரும்
எழுதாது
எழுந்து நிற்கும்
கவிதைக்குள்
பாருங்கள்!
அங்கே
நான் மட்டுமல்ல
என்னுடன்
அத்தனை
மாவீரர்களும்
சந்தோசமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்!
-கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை

SHARE