முல்லைத்தீவில் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக இணக்கப்பாடு – ஆளுநர்

83

முல்லைத்தீவில் கேப்பாப்புலவு மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றது. இதன்கு முன்னர் கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், படை அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், ஆலங்குளம் பகுதியில் காணி உரிமம் கோரும் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நிறைவில் சுரேன் ராகவன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, பொதுமக்கள் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போதே காணி விடுவிப்பு தொடர்பான இரு கலந்துரையாடல்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், படையினரால் விடுவிக்கப்படக் கூடிய காணிகளை விடுவக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விடுவிக்க முடியாமலுள்ள காணிகளுக்கு மாற்று காணிகளை வழங்கும் பேச்சும் இடம்பெற்றதாக ஆளுநர் தெரிவித்தார்.

SHARE